(நவம்பர் 5, 2022) நேற்றுடன் 100 நாள்களைக் கடக்கிறது, பரந்தூர் உள்ளிட்ட 12 கிராம மக்களின் புதிய விமான நிலைய எதிர்ப்பு போராட்டம். சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் அமையவிருக்கிறது என்ற அரசின் அறிவிப்பு வெளியானது முதலே, விமான நிலையத்தால் தங்களின் விவசாய நிலங்கள், குடியிருப்புகளை இழக்கநேர்ந்த பரந்தூர், ஏகனாபுரம், அக்கம்மாபுர, தண்டலம், நெல்வயல் உள்ளிட்ட 12 கிராம மக்கள் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம், தமிழ்நாடு அரசும் ஒருபக்கம் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே, விமான நிலையம் அமைக்கும் முதற்கட்டப் பணிகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறது.

`பசுமை விமான நிலையம் - தமிழகத்தின் விரைவான வளர்ச்சிக்கு முயற்சி' - அமைச்சர் தங்கம் தென்னரசு
கடந்த நவம்பர் 2-ம் தேதி, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமும்(TIDCO), சென்னை தொழில் வர்த்தக சபையும் இணைந்து `பசுமை விமான நிலையம் - தமிழகத்தின் விரைவான வளர்ச்சிக்குத் தகுந்த தருணத்தில் மேற்கொள்ளப்படும் முயற்சி' என்ற தலைப்பில் ஓர் உரையாடல் நிகழ்ச்சியை நடத்தியது. அதில் கலந்துகொண்டுப் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ``தற்போதிருக்கும் மீனம்பாக்கம் விமான நிலையம் வருங்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யாது. இந்த விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யவேண்டுமானால் 300 - 400 ஏக்கர் நிலம் தேவைப்படும். விமான நிலையத்தைச் சுற்றியிருக்கும் ஆறுகள், குடியிருப்புகள், கட்டுமானங்கள் ஆகியவற்றால், அதை மேலும் விரிவாக்கம் செய்ய இயலாது.
எனவே, இந்த விமான நிலையத்தை மேம்படுத்தலாமே தவிர, விரிவாக்கம் செய்ய முடியாது. அதனால்தான், புதிய விமான நிலையம் அமைக்க உள்ளோம். சென்னையைச் சுற்றியுள்ள 11 இடங்களில் இந்திய வானூர்தி நிலையங்களின் ஆணையம், புதிய விமான நிலையம் அமைக்க ஆய்வு மேற்கொண்டது. அதிலிருந்துதான் விமான நிலையத்திற்கு பரந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக பரந்தூரில் அமையவிருக்கும் விமான நிலையம் நமது அனைத்து வருங்கால தேவைகளையும் பூர்த்தி செய்யும். மேலும், பரந்தூரை சுற்றியுள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில்தான் விமான நிலையம் அமைக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

`பரந்தூர் விமான நிலைய உருவாக்கம் காலத்தின் கட்டாயம்!' - தமிழ்நாடு அரசு அறிக்கை
அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் (நவம்பர் 4) தமிழ்நாடு அரசு பரந்தூர் விமான நிலையம் அமைவதற்கான அவசியம் குறித்து விரிவான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில்,
``தமிழக பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக 2030-ம் ஆண்டுக்குள் உயர்த்த, வளர்ச்சிக்கு உறுதுணையாக பல நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டியுள்ளது. அந்த வகையில் தலைநகரில் இரண்டாவது விமான நிலையம் அவசியமாகிறது. கடந்த 24 ஆண்டுகளாக இதற்கான முயற்சிகள் குறித்து பேசப்பட்டபோதிலும், தற்போதுதான் இடத்தை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி, பரந்தூரில் ரூ.20,000 கோடி முதலீட்டில் 2028-ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. 4,700 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்த விமான நிலைய திட்டத்துக்கு ரூ.100 செலவழித்தால், மாநிலத்துக்கு வருமானமாக ரூ.325 கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். சென்னை தொழில் வர்த்தக சபை (எம்.சி.சி.ஐ) பிரதிநிதிகளும் இரண்டாவது விமான நிலையம் அவசியம் என தெரிவித்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்துக்கான வாய்ப்புகளை பெங்களூரு, ஹைதராபாத் விமான நிலையங்கள் தட்டிப்பறித்துள்ளன. சென்னை விமான நிலையம் பின்தங்கியதற்கு புதிய விமான நிலையத்தை உருவாக்காததே காரணமாகும். ஏற்கெனவே உள்ள விமான நிலையத்தை விரிவுபடுத்த போதிய நிலம் இல்லை. இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் 6-வது இடத்தில் சென்னை விமான நிலையம் உள்ளது. அதிகரிக்கும் பயணிகள் பயணிகள் போக்குவரத்தை கையாள இந்த விமான நிலையம் போதுமானதாக நிச்சயம் இருக்காது. புதிதாக திட்டமிட்டுள்ள பரந்தூர் விமான நிலையத்தில், அதிக பயணிகள் பயணிக்கும் பெரிய ரக ஜெட் விமானங்களை தரையிறக்க முடியும். 600 பேர் பயணிக்கும் பெரிய ரக விமான நிலையங்களை கையாளும் திறன் பெறும்போது, சர்வதேச பயணிகள் வரத்து அதிகரிக்கும். நேரடியாக வெளிநாட்டு பயணிகள் சென்னை வந்திறங்க முடியும்.

மெட்ரோ ரயில் தடம் விரிவுபடுத்தப்படுவதன் மூலம் பரந்தூர்- சென்னை பயண நேரம் குறையும். இவற்றுக்கும் மேலாக சரக்குகள் கையாள்வது அதிகரிக்கும்போது, வேலைவாய்ப்புகள் பெருகும். தமிழக தொழில் வளர்ச்சிக்கு கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் இரண்டாவது விமான நிலைய உருவாக்கம் காலத்தின் கட்டாயம்" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
`தடுமாறுகிறது தமிழக அரசு' - கேள்வி கேட்கும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு:
இந்த நிலையில், பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தமிழ்நாடு அரசுக்கும், அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும் பல்வேறு கேள்விகளை முன்வைத்திருக்கிறது. இது குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், ``இரண்டு தினங்களுக்கு முன்னர் பரந்தூர் விமான நிலையம் தொடர்பாகப் பேசிய தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்த திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கையை டிட்கோ தயாரிக்கும் எனத் தெரிவித்திருந்தார். தற்போது வெளிவந்துள்ள அறிக்கையில், விமான நிலையம் அமைவதற்கான இடத்தை இந்திய அரசின் விமான போக்குவரத்து அமைச்சகம் உறுதிசெய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதில் எது உண்மை என்பதை அமைச்சர் தெளிவுபடுத்தவேண்டும். போராடும் மக்களைச் சந்திக்கும் அமைச்சர்கள், `உங்களின் கோரிக்கையை பரிசீலிப்போம் என்கிறார்கள்', அடுத்த சில தினங்களில் டிட்கோ இத்திட்டத்திற்கான சாத்தியக் கூறு அறிக்கையை தயாரிக்கும் என்கிறார் அமைச்சர். அடுத்த இரண்டு தினங்களில் இந்திய விமான அமைச்சகம் இந்த இடத்தை உறுதிசெய்துவிட்டது என்று யாருடைய பெயரும் போடாத அறிக்கை வெளியாகிறது, ஏன் இந்த தடுமாற்றம்? டிட்கோவின் சாத்தியக்கூறு அறிக்கை வெளிவருவதற்கு முன்பாகவே இந்த இடம் சரியானது என முடிவிற்கு வந்துவிடமுடியுமா? அப்படியெனில் எது உண்மை? சாதாரண ஏழை விளிம்புநிலை மக்கள் நீர்நிலைகளில் வாழ்ந்தாலே ஆக்கிரமிப்பு என்று அகற்றும் அரசும், 1,000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் உள்ள 13 நீர்நிலைகளை அழிப்பது சரியாகுமா? நீர்நிலைகளை பாதுகாப்போம் என்றால் அந்த 1,000 ஏக்கர் நிலம் இல்லாமல் விமான நிலையத்தை அமைக்க முடியுமா? இதுவரை Pre-feasibility report-ஐ கூட பொது வெளியில் வைப்பதற்கு ஏன் தடுமாறுகிறது தமிழக அரசு?" என கேள்வி எழுப்பி பதிவிட்டிருக்கிறது.
மேலும், ``உண்மையை மறைக்காமல், வெளிப்படைத்தன்மை இல்லாமல் மக்களின் மனதை வென்றுவிடலாம் என்று நினைப்பது தவறாகத்தான் போய் முடியும். இப்போது உள்ள விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய அருகாமையில் `ஒரு ராணுவ பயிற்சி பள்ளி' இருப்பதை தடையாக கருதும் அரசு, 3,000 ஏக்கர் விளைநிலங்கள், 1,000 ஏக்கர் நீர்நிலைகளை பற்றி கவலைப்படாமல் இருப்பது ஆச்சர்யமாகவுள்ளது. பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக இதுவரை பொதுவெளியில் வைக்கப்பட்ட எந்த கேள்விக்கும் விடையளிக்காமல், ஏகானாபுரம் உள்ளிட்ட மூன்று கிராமங்கள் இந்திய வருவாய் வரைபடத்திலிருந்து தூக்கி எறியப்படும் என்று தெரிந்தும், 100 நாள்களைக் கடந்தும் அந்த மக்கள் நடத்தும் போராட்டங்களை, உணர்வுகளை மதிக்காமல் செயல்படுவதுதான் ஜனநாயகமா? பரந்தூர் விமான நிலையம் குறித்து அரசு வெளிப்படைத்தன்மையோடு செயல்படுமெனில், முதலில் அந்த Pre-feasibility அறிக்கையை வெளியிடட்டும், அடுத்து டிட்கோ அறிக்கையை வெளியிடட்டும், வெறும் அறிக்கைகள் உதாவது என்பதை தமிழக அரசு புரிந்துகொள்ளவேண்டும்" என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு எதிர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.