Published:Updated:

கல்குவாரி லாரிகளால் சேறும் சகதியுமாக மாறிய குடியிருப்புப் பகுதி- சாலைமறியலில் இறங்கிய வேலூர் மக்கள்

சேறும் சகதியுமாக மாறிய குடியிருப்புப் பகுதி
News
சேறும் சகதியுமாக மாறிய குடியிருப்புப் பகுதி

வேலூர் அருகே கல்குவாரி லாரிகளால் ஒரு ஊரே அவதிக்குள்ளாகியிருக்கிறது. வெகுண்டெழுந்த மக்கள் தங்கள் பகுதியை சீரமைத்துத் தரக் கோரி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

Published:Updated:

கல்குவாரி லாரிகளால் சேறும் சகதியுமாக மாறிய குடியிருப்புப் பகுதி- சாலைமறியலில் இறங்கிய வேலூர் மக்கள்

வேலூர் அருகே கல்குவாரி லாரிகளால் ஒரு ஊரே அவதிக்குள்ளாகியிருக்கிறது. வெகுண்டெழுந்த மக்கள் தங்கள் பகுதியை சீரமைத்துத் தரக் கோரி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

சேறும் சகதியுமாக மாறிய குடியிருப்புப் பகுதி
News
சேறும் சகதியுமாக மாறிய குடியிருப்புப் பகுதி

வேலூர் மாநகராட்சி, 24-வது வார்டுக்குட்பட்ட ரங்காபுரம் மாதா கோயில் தெரு மற்றும் மூலக்கொல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அடிப்படை வசதிகள் கேட்டு பல ஆண்டுகளாகக் குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பகுதியை கல்குவாரிகள், ஜல்லி மெஷின்கள், தார்க்கலவைத் தொழிற்சாலைகள்தான் அதிகம் ஆக்கிரமித்திருக்கின்றன. இந்தத் தொழிற்சாலைகளுக்கு தினமும் வந்து செல்லக்கூடிய நூற்றுக்கணக்கான லாரிகளால் மூலக்கொல்லை, மாதா கோயில் தெருக்களில் வசிக்கும் மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகிவருகிறார்கள்.

‘‘தெருக்களின் வழியாகச் செல்லும் லாரிகளால் வீடுகளுக்குள் தூசுபடிகிறது. வீட்டு வாசலில் ஒரு நிமிடம்கூட நிற்க முடியவில்லை. குழந்தைகளை விளையாடவும் வீதிக்கு அனுப்புவதில்லை. வேகமாகச் செல்லும் லாரிகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என அச்சமாக இருக்கிறது’’ என அந்தப் பகுதி மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.

சேறும் சகதியுமாக மாறிய வீதி
சேறும் சகதியுமாக மாறிய வீதி

லாரிகள் செல்வது ஒருபுறம் என்றாலும், குறிப்பிட்ட இந்தப் பகுதிகளில் சரியான சாலை வசதியும் இதுநாள் வரை ஏற்படுத்தித் தரப்படவில்லை. சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால், அதில் செல்லும் நூற்றுக்கணக்கான லாரிகளால் நாற்று நடும் அளவுக்குc சகதிகள் நிரம்பியிருக்கின்றன. இந்த நிலையில், லாரிகளால் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய மாதா கோயில் தெருமுனைப் பகுதியிலிருக்கும் கழிவுநீர்க் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டிருக்கிறது.

அந்தக் கழிவுநீர்க் கால்வாய் அப்படியே விடப்பட்டதால், அங்கு குளம்போல கழிவுநீர் தேங்கி சகதிகள் நிரம்பிக் காணப்படுகின்றன. இந்தச் சகதிகளை தேசிய நெடுஞ்சாலைப் பணியாளர்கள் நள்ளிரவில் அள்ளிச்சென்று மாதா கோயில் தெரு வீதியில் நெடுகக் கொட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இதனால், அந்தப் பகுதி முழுவதுமே துர்நாற்றம் வீசுகிறது. பயன்பாட்டுக்கே லாயக்கற்றதாக அந்தப் பகுதி மாறியதால், ஆத்திரமடைந்த மாதா கோயில் தெருவில் வசிக்கும் மக்கள், இன்று காலை அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து போராட்டம் செய்தனர்.

பொதுமக்கள் போராட்டம்; கழிவுகள் அகற்றம்
பொதுமக்கள் போராட்டம்; கழிவுகள் அகற்றம்

பின்னர், தங்கள் பகுதியைச் சீரமைத்துத் தரக் கோரி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். ‘‘எங்கள் தெரு வழியாக லாரிகள் செல்ல அனுமதிக்கக் கூடாது. கழிவுநீர் செல்லும் வகையில் சரியான கால்வாய் வசதியை ஏற்படுத்தி, சாலை அமைத்துத் தர வேண்டும்’’ என கோரிக்கை விடுத்தனர். தகவலறிந்து வந்த வேலூர் ஆர்.டி.ஓ., தாசில்தார், டி.எஸ்.பி., மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சத்துவாச்சாரி போலீஸார், சமரசம் செய்த பின்னரே மக்கள் கலைந்து சென்றனர். பின்னர், கால்வாய்ப் பகுதிகளில் தேங்கியிருந்த சகதிகளை மாநகராட்சி ஊழியர்களைக் கொண்டு அப்புறப்படுத்தினர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.