தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டைச் சேர்ந்த ரோசா இசபெல் செஸ்பெட் கலாக்கா (Rosa Isabel Cespede Callaca) என்ற 36 வயதுப் பெண், ஒரு கோரமான கார் விபத்தில் சிக்கினார். அப்பெண் உயிரிழந்ததாக நினைத்த அவரின் உறவினர்கள், அவரது இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகளைச் செய்து, சவப்பெட்டியில் அப்பெண்ணின் சடலத்தை வைத்துள்ளனர். குடும்பத்தினரும் உறவினர்களும் துக்கத்துடன் சவப்பெட்டியைச் சுற்றி நின்றுகொண்டிருந்தபோது, உள்ளிருந்து சவப்பெட்டி தட்டப்படும் சத்தம் கேட்கவே அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
'ரோசாவின் உறவினர்கள் உடனடியாக சவப்பெட்டியைத் திறக்க, அவர் கண்களைத் திறந்தார்; அவருக்கு வியர்த்திருந்ததை நான் பார்த்தேன். உடனடியாக என் அலுவலகத்துக்குச் சென்று காவல்துறையை அழைத்தேன்' எனக் கல்லறை பராமரிப்பாளர் தான் கண்ட அதிர்ச்சியான சம்பவத்தை விளக்குகிறார்.

இணையத்தில் பரவி வரும் வீடியோவில், ரோசாவின் குடும்பத்தினர் சவப்பெட்டியை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதைப் பார்க்க முடிகிறது. அங்கு அவருக்கு உயிர் காக்கும் மருத்துவ உதவிகள் செய்யப்பட்டன. சிறிது நேரத்தில் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இருந்தபோதிலும், சில மணி நேரத்தில் அவரின் உடல்நிலை மோசமடைந்தந்த் தொடர்ந்து அவர் உயிரிழந்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து, முன்னதாக அப்பெண் இறந்துவிட்டதாக அறிவித்த மருத்துவமனையை அப்பெண்ணின் உறவினர்களும், குடும்பத்தினரும் முற்றுகையிட்டனர். காவல் துறை தற்போது, ரோசாவின் உயிரை காப்பாற்றுவதில் மருத்துவமனை அலட்சியம் காட்டியதா, அவர் இறந்துவிட்டார் என்பதை உறுதிசெய்யாமல் பிணவறைக்கு அனுப்பினார்களா என விசாரித்து வருகின்றனர்.