அலசல்
அரசியல்
Published:Updated:

புகார் கொடுக்காத பெண்... சிறைக்கு சென்ற முருகன்! - பழி தீர்த்ததா போலீஸ்?

முருகன்
பிரீமியம் ஸ்டோரி
News
முருகன்

அந்த முருகன் மனு எழுத அதிகமாகப் பணம் கேட்டு மிரட்டினதைத் தட்டிக்கேட்ட போலீஸாரை அசிங்கமாப் பேசி சட்டையை எட்டிப் பிடிச்சிருக்கான்.

‘‘மனு எழுதிப் பிழைச்சுக்கிட்டு இருந்த என்னை சம்பந்தமே இல்லாம அடிச்சு, ஜெயில்ல தள்ளி வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிட்டாங்க போலீஸ்காரங்க’’ என்று ஆற்றாமையில் அழுது புலம்புகிறார் முருகன்.

மதுரையின் ஒதுக்குப்புறமான ஏரியாவில் தகரக்கொட்டகையில் வசித்து, மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனு எழுதிக்கொடுத்துப் பிழைப்பவர் முருகன். ஒரு சைக்கிள், ஒரு பேடு, சில பேப்பர், பேனாக்கள்தான் அவரின் சொத்து. பட்டியலின புதிரை வண்ணார் சமூகத்தைச் சேர்ந்த இவர், சொந்த கிராமத்தில் பல்வேறு ஒடுக்குதல்களால் பாதிக்கப்பட்டு மதுரைக்கு இடம்பெயர்ந்தவர்.

இந்த நிலையில் மனு எழுத வந்த பெண்ணிடம் தகராறு செய்ததாக முருகனைக் கைதுசெய்து சிறையில் தள்ளியது போலீஸ். ஒருவழியாக ஜாமீனில் வந்தவர், ‘ஜூ.வி-தான் எனக்காக நியாயம் கேட்கணும்’ என்று சொல்லி நம்மைச் சந்தித்தார். “நான் செஞ்ச ஒரே தப்பு(?), முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிங்க, போலீஸ்காரங்களைப் பத்தியும் மனு எழுதுனதுதான். இதனால அவங்க எனக்குப் பல வழியிலும் இடைஞ்சல் கொடுத்துக்கிட்டிருந்தாங்க. இங்க உட்கார்ந்து மனு எழுதவிடாம அப்புறப்படுத்துனாங்க. உயர் நீதிமன்றத்துல முறையிட்டு, அதே இடத்துல உட்கார்ந்து வேலை செய்யறேன்.

செந்தில்குமார்
செந்தில்குமார்

கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி மேலூர் பக்கமிருந்து நெவ்வன் என்பவரும், அவர் மனைவி பழனியாயியும் மனு எழுத வந்தாங்க. கரன்ட்டு தராம இழுத்தடிக்கிற இ.பி.காரங்க மேல புகார் தெரிவிச்சு கலெக்டருக்கும் முதலமைச்சருக்கும் மனு எழுதி, ரிஜிஸ்டர் தபால்ல அனுப்ப 250 ரூபா கொடுத்தாங்க. இதை ரொம்ப நேரமா ஜீப்லருந்து கவனிச்சுக்கிட்டிருந்த போலீஸ் டிரைவர் ஜெயப்பிரகாஷ், ‘கோர்ட்டுல ஆர்டர் வாங்கி மனு எழுதுற, நீ ஏண்டா இவ்வளவு ரூபா வாங்குறே... சும்மா எழுதிக்கொடுக்க வேண்டியதுதானே?’ன்னு கேட்டார். ‘எழுதுறதுக்கும், தபால் அனுப்புற செலவுக்கும்தான் பணம் வாங்குறேன். எனக்கும் வயிறு இருக்கு சார்’னு சொன்னேன். ‘எங்களையே எதிர்த்து பேசுறியா?’னு அவரும், ஒரு மஃப்டி போலீஸும் அசிங்கமா திட்டி என்னைய சட்டையப் புடிச்சு இழுத்துட்டுப் போனாங்க. நான் முரண்டு பிடிச்சதால, ‘இந்த நாயை ஸ்டேஷனுக்குக் கூட்டிக்கிட்டுப் போய் நல்லா சாத்துங்க’ன்னு இன்ஸ்பெக்டர் உத்தரவு போட்டாரு. அதன்படி தல்லாகுளம் ஸ்டேஷன்ல, நிறைய போலீஸ்காரங்க என்னைய ரவுண்டுகட்டி அடிச்சாங்க. அதில் புலிக்குட்டி அய்யனார்ங்கிற போலீஸ்தான் ரொம்ப மோசமா நடந்துக்கிட்டாரு.

பிறகு, என்ன கேஸ் போட்டுருக்காங்கன்னே சொல்லாம கோர்ட்டுல ஆஜர்படுத்தினாங்க. மாஜிஸ்ட்ரேட் அம்மாவிடம், ‘போலீஸ் தாக்கியதில் முகத்தில் காயமாயிடுச்சு’னு சொன்னேன். போலீஸையே எதிர்த்து பேசுவி யான்னு ஜெயில்லயும் அடி விழுந்துச்சு. விஷயம் கேள்விப்பட்டு என் தம்பியும் தங்கச்சியும் கடன் வாங்கி கண்டிஷன் பெயில்ல எடுத்தாங்க. இப்ப நான் கலெக்டர் ஆபீஸுக்கு மனு எழுதப் போக முடியலை. வாங்குன கடனுக்கு வட்டி கட்டவும் முடியலை. பொய்யான கேஸால வாழவே வழியில்லாம நிக்குறேன்’’ என்றார் பரிதாபமாக.

முருகன்
முருகன்

மேலூர் அருகேயுள்ள கல்லம்பட்டிக்குச் சென்று, பழனியாயியைத் தேடிப்பிடித்து என்ன நடந்தது என்று கேட்டோம். “எந்தப் பிரச்னை யுமில்லை. ஏற்கெனவே அந்தத் தம்பி மூலம் எழுதுன மனுவால நல்லது நடந்திருக்கு. அதனால தான் கரன்ட்டு கனெக்‌ஷனுக்காக மனு அனுப்பச் சொல்லி 250 ரூவா கொடுத்தோம். அப்ப போலீஸ்காரங்க திடீர்னு வந்து அந்தத் தம்பியைத் திட்ட, பதிலுக்கு இவர் பேச பிரச்னை ஆகிடுச்சு. உடனே அவரைச் சட்டையைப் புடிச்சு இழுத்துட்டுப் போனாங்க. அப்புறம் அங்கிருந்த போலீஸ்காரங்க, ‘என்ன நடந்தது?’னு என்கிட்டே கேட்டப்பகூட, ‘முருகனுக்கும் எனக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை’ன்னு சொன்னேன். நான் எந்தப் புகாரும் கொடுக்கலை. இப்ப அந்தத் தம்பி மேல கேஸ் போட்டுட்டாங்கனு கேள்விப்பட்டு வருத்தமாயிடுச்சு. இதை எங்க வேணும்னாலும் வந்து சொல்வேன்” என்றார்.

தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் பாலமுருகனிடம் விளக்கம் கேட்டோம். “அந்த முருகன் மனு எழுத அதிகமாகப் பணம் கேட்டு மிரட்டினதைத் தட்டிக்கேட்ட போலீஸாரை அசிங்கமாப் பேசி சட்டையை எட்டிப் பிடிச்சிருக்கான். பாதிக்கப் பட்ட பெண்மணி புகாரின் பேரில் வழக்கு பதிவுசெய்தோம். மற்றபடி அடிக்கலை. அவன் சைக்கோத்தனமா நடந்துக்கிட்டு எல்லார் மேலயும் பெட்டிஷன் போடுறதை வழக்கமா வெச்சுருக்கான். மற்றபடி அவன் சொல்றதெல்லாம் பொய்’’ என்றார்.

பழனியாயி
பழனியாயி

“மனு எழுத அதிகமாகப் பணம் வாங்கியதும், போலீஸை எதிர்த்து பேசியதும் ஒருவேளை உண்மையாகக்கூட இருக்கட்டும்... தங்கள் தனிப்பட்ட விரோதத்துக்குப் பழிதீர்க்க, விவரம் தெரியாத கிராமத்துப் பெண்மணி பெயரில் புகார் பதிவுசெய்து எளிய மனிதனைக் கடுமையாகத் தாக்கிச் சிறைப்படுத்தியது சரியா?” என்று மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் ஐ.பி.எஸ்-ஸிடம் கேட்டோம். “நீங்க சொன்ன புகாரை விசாரிக்கிறேன். அதேநேரம், மனு எழுத இவ்வளவு பணம் வாங்குவது அதிகமாகத் தெரிகிறது. இதனால் சாமானிய மக்கள் பாதிக்கப்படுவார்கள். அது தெரிந்து அங்கேயிருந்த காவல்துறையினர் கேட்டிருக்கலாம். அது பிரச்னை ஆகியிருக்கலாம். அங்குள்ள சிசிடிவி ஃபுட்டேஜ்களை ஆய்வுசெய்து என்ன நடந்தது என்பதை முழுமையாக விசாரிக்கிறேன். தவறு யார் செய்தாலும் நடவடிக்கை உண்டு’’ என்றார்.

பார்க்கலாம்!