Published:Updated:

மக்களின் கோபத்துக்கு உள்ளாகாதீர்கள்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

நம் நாட்டின் அநேக மாநிலங்களில் 100 ரூபாயைத் தாண்டிவிட்டது பெட்ரோல் விலை. இன்னும் சில வாரங்களில் டீசல் விலையும்கூட 100 ரூபாயைத் தாண்டிவிடும் போலிருக்கிறது. அன்றாடம் நமக்குத் தேவைப்படும் இந்தப் பொருள்களின் விலை எங்கே போய் நிற்குமோ என்ற கவலை எல்லோர் மனதிலும் பிறந்திருக்கிறது.

பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்கோ, குறைந்தபட்சம் விலை உயராமல் தடுப்பதற்கோ தேவையான எந்த நடவடிக்கையையும் மத்திய அரசாங்கம் எடுக்காமல் இருப்பது பேரதிர்ச்சியாக இருக்கிறது. உதாரணமாக, கொல்கத்தாவில் ரூ.99.84 விலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனையானால், மத்திய அரசாங்கம் மட்டுமே 32.90 ரூபாயை வரியாக விதித்து எடுத்துக்கொள்கிறது. (அந்த மாநில அரசாங்கத்துக்குக் கிடைக்கும் வரி ரூ.19.27) மத்திய அரசாங்கம் தனக்கு வருமானமாகக் கிடைக்கும் வரியிலிருந்து 5 ரூபாயைக் குறைத்தாலே போதும், சில்லறைப் பணவீக்கம், மொத்தப் பணவீக்கத்தின் அடிப்படைப் புள்ளிகள் 15 - 20 வரை குறைந்து, மக்களுக்குப் பல விதங்களில் நன்மை கிடைக்கும்.

‘இப்படிச் செய்தால் மத்திய அரசின் வருமானம் குறைந்துவிடுமே’ என்ற கவலை தேவையில்லை. பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருக்கும்போது அதன் பயன்பாடு அதிகமாகி, மத்திய அரசாங்கத்துக்குக் கிடைக்கும் வருமானம் அதிகரிக்கவே செய்யும் என்கிறார்கள் பொருளாதார அறிஞர்கள். தவிர, ஒரு தற்காலிக நடவடிக்கைதான். கச்சா எண்ணெய் விலை மீண்டும் குறையும்பட்சத்தில் மத்திய அரசாங்கம் தனக்கான வரியை மீண்டும் உயர்த்திக்கொள்ளலாம்.

சரி, மத்திய அரசாங்கம்தான் வரியைக் குறைக்க முன்வரவில்லை; மாநில அரசாங்கங்களாவது தங்கள் வரியைக் கொஞ்சம் குறைத்துக்கொள்வதன் மூலம் குறைந்த விலையில் பெட்ரோல் கிடைக்க நடவடிக்கை எடுக்கலாமே! ஆட்சிக்கு வருவதற்கு முன், பெட்ரோல் விலையைக் குறைப்போம், அதை ஜி.எஸ்.டி-யில் கொண்டுவருவோம் என்றெல்லாம் பேசிய தி.மு.க, ‘நேரம் வரும்போது குறைப்போம்’ என்று மாற்றிப்பேசுவது நியாயமல்லவே. எதிர்க்கட்சியாக இருக்கும்போது என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பது எப்படி சரியாகும்?

பெட்ரோல், டீசல் விலை இன்னும் உயராமல் இருக்க நிறுவனங்களும் சில நடவடிக்கைகளை எடுக்கலாம். உதாரணமாக, கோவிட் தொற்றுநோய் காலத்தில் ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ததுபோல, இப்போதும் செய்யும்பட்சத்தில் பெட்ரோல், டீசல் பயன்பாடு பெருமளவில் குறைய வாய்ப்பிருக்கிறது. வீட்டிலிருந்தே வேலை செய்ய ஊக்குவிக்கும் நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசாங்கங்கள் சில சலுகைகள்கூட தரலாம்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் பல கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள். மக்களின் இந்தக் கஷ்டங்களைத் தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், ‘நீதான் பொறுப்பு’, ‘நீதான் பொறுப்பு’ என மத்திய, மாநில அரசாங்கங்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்தால், மக்களின் கடுங்கோபத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்பது மட்டும் உண்மை!

- ஆசிரியர்