சினிமா
Published:Updated:

பத்திரங்கள் மீது பழி போடுவதா?

பத்திரங்கள் மீது பழி போடுவதா?
பிரீமியம் ஸ்டோரி
News
பத்திரங்கள் மீது பழி போடுவதா?

படிப்படியாக விலையை உயர்த்திய எண்ணெய் நிறுவனங்கள், 2014 அக்டோபருக்குப் பிறகு நஷ்டத்தைச் சந்திக்கவில்லை.

இருக்கின்ற பிரச்னைகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என மத்திய அரசு தீர்க்கமாக நம்புகிறது. தி.மு.க அரசு, தனது தேர்தல் அறிக்கையில் சொன்ன அளவு இல்லையென்றாலும், பெட்ரோல் விலையை மட்டும் 3 ரூபாய் குறைத்திருக்கிறது. அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் வந்து பெட்ரோல் போடுமளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது.

இந்தச் சூழலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பற்றிக் கேட்டபோது, ‘`முந்தைய மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் தரப்பட்ட எண்ணெய்ப் பத்திரங்களுக்குத்தான் நரேந்திர மோடியின் அரசாங்கம் வட்டி செலுத்திக்கொண்டிருக்கிறது. 2025-26 நிதியாண்டு வரை அவற்றைச் செலுத்த வேண்டியிருப்பதால், விலைக்குறைப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை’’ என்றார்.

‘`முந்தைய காங்கிரஸ் அரசு, பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கிறேன் என்கிற பெயரில் எண்ணெய் நிறுவனங்களுக்கு எண்ணெய்ப் பத்திரங்களைக் கொடுத்து ஈடுகட்டியிருக்கிறது. மார்ச் 31, 2021 வரையில் 1.31 லட்சம் கோடி ரூபாய் நிலுவை அசலாக இருக்கின்றது, 37,340 கோடி ரூபாய் வட்டியாகத் தர வேண்டும்’’ எனக் கூறி இந்திய மக்களின் கடன் தொகையை இன்னும் ஒரு பங்கு ஏற்றியிருக்கிறார் நிர்மலா சீதாராமன்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அஜய் மக்கான் இதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார். ‘`எண்ணெய்ப் பத்திரங்கள் கொடுத்து ஈடுகட்டும் முறை ஆரம்பித்தது மன்மோகன் ஆட்சியில் அல்ல, பா.ஜ.க-வின் வாஜ்பாய் ஆட்சியில். எண்ணெய்ப் பத்திரங்களுக்காக 2014-15 காலம் முதல் 73,440 கோடி ரூபாயை பா.ஜ.க செலவு செய்திருக்கிறது. அதேசமயம், இந்த ஏழாண்டுகளில் மக்களிடம் பெட்ரோலியப் பொருள்களின் மூலம் கிடைத்த வரித்தொகை 22.34 லட்சம் கோடி ரூபாய். வசூலித்த வரிப்பணத்தில் எண்ணெய்ப் பத்திரங்களுக்கான தொகை, வெறும் 3.4%தான். 12 மடங்கு மானியத்தைக் குறைத்ததும், மூன்று மடங்கு வரியை ஏற்றியதும்தான் பெட்ரோல் விலையேற்றத்துக்குக் காரணம்’’ என்கிறார் அவர்.

பத்திரங்கள் மீது பழி போடுவதா?

எண்ணெய்ப் பத்திரங்கள் குறித்த உண்மைதான் என்ன? சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்தபோது, பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், விலையேற்றச் சுமையை மக்கள் தலையில் ஏற்ற விரும்பாமல், மானியங்கள் மூலம் ஈடுகட்ட நினைத்தது மத்திய அரசு. அதைப் பணமாகக் கொடுக்காமல், எண்ணெய்ப்பத்திரங்களாக எண்ணெய் நிறுவனங்களுக்கு அளித்தது அரசு. 2002-ம் ஆண்டு முதல் இப்படிச் செய்ய ஆரம்பித்தது அரசு. வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் ஆரம்பித்த இந்த நடைமுறை, பிறகு மன்மோகன் சிங் ஆட்சியிலும் தொடர்ந்தது.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை அரசு நிர்ணயிக்கும் நடைமுறை கைவிடப்பட்டு, 2010 ஜூன் மாதம் முதல் ‘எண்ணெய் நிறுவனங்களே விலையை நிர்ணயிக்கலாம்’ என மத்திய அரசு முடிவெடுத்தது. படிப்படியாக விலையை உயர்த்திய எண்ணெய் நிறுவனங்கள், 2014 அக்டோபருக்குப் பிறகு நஷ்டத்தைச் சந்திக்கவில்லை. எனவே, எண்ணெய்ப் பத்திரங்கள் புதிதாகத் தேவைப்படவில்லை.

பழைய எண்ணெய்ப்பத்திரங்களுக்கு மத்திய அரசு வரும் 2025-26 நிதியாண்டு வரை 1.31 லட்சம் கோடி ரூபாய் அசலாகவும், 37,340 கோடி ரூபாய் வட்டியாகவும் செலுத்த வேண்டியிருக்கும்.

ஆனால், இந்தியாவில் வசிக்கும் ஒருவரிடம் வசூலிக்கும் வரித்தொகையுடன் ஒப்பிட்டால், இது மிக மிகக் குறைவு. உதாரணமாக 2020-21 காலகட்டத்தில் மட்டும் பெட்ரோலியப் பொருள்களின் மீது மத்திய அரசு கலால் வரியாக வசூலிக்கப்பட்ட தொகை 3.71 லட்சம் கோடி. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குச் செலுத்த வேண்டிய எண்ணெய்ப் பத்திரத் தொகை இதில் பாதிகூட இல்லை. எனவேதான் ‘எண்ணெய்ப் பத்திரங்களின் மீது எல்லாப் பாவக்கணக்கையும் எழுதுவதென்பது வெறும் சால்ஜாப்பு’ என்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.

2012-ம் ஆண்டு கச்சா எண்ணெய் பேரல் 110 டாலராக இருந்தபோது, இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 73 ரூபாய். ஆனால், தற்போது பேரல் 55 டாலராகக் குறைந்திருக்கும்போது பெட்ரோலின் விலை 100 ரூபாயைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. வரிகளே இதற்குக் காரணம். அதேபோல், பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிப்பது எண்ணெய் நிறுவனங்கள்தான் எனச் சொல்லப்பட்டாலும், தேர்தல் சமயங்களில் மட்டும் விலை எவ்வித மாற்றமுமில்லாமல் அப்படியே நிற்கும்.

ஒரு வாடிக்கையாளர் வாங்கும் ஒரு லிட்டர் பெட்ரோலில் 60% வரிகள்தான். அடக்க விலை, போக்குவரத்துச் செலவு, டீலர்களுக்கான கமிஷன் (வரிகள் தவிர்த்து), டீலர்களுக்கு விற்கப்படும் விலை, மத்திய அரசு வரி (சாலை வரிகள் சேர்த்து), வாட் வரி என ஒரு லிட்டருக்கு நாம் தரும் 100 ரூபாயில் இவ்வளவு செலவினங்கள் இருக்கின்றன.

‘டாஸ்மாக் இல்லாவிட்டால் தமிழக அரசு தள்ளாடும்’ என்பார்கள். உண்மையில் பெட்ரோலியப் பொருள்களின் மீதான வரி வருமானம் இல்லாவிட்டால் மத்திய, மாநில அரசுகள் தடுமாறிப்போய்விடும்.

2014-ம் ஆண்டு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 9.48 ரூபாய், ஒரு லிட்டர் டீசலுக்கு 3.56 ரூபாய் என்றிருந்தது மத்திய அரசின் கலால் வரி. கொரோனாத் தொற்றாலும் ஊரடங்காலும் தேசம் தடுமாறிக்கொண்டிருந்த 2020-21-ம் ஆண்டில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 32.98 ரூபாய், ஒரு லிட்டர் டீசலுக்கு 31.83 ரூபாய் என மத்திய அரசால் இது உயர்த்தப்படுகிறது.

பத்திரங்கள் மீது பழி போடுவதா?

2020-21 நிதியாண்டின் மத்திய அரசின் ஒட்டுமொத்த வருவாயில் (19 லட்சம் கோடி ரூபாய்) பெட்ரோலியப் பொருள்களின் வரி மூலம் மட்டும் கிடைத்தது 3.71 லட்சம் கோடி ரூபாய் (சுமார் 20 சதவிகிதம்). இதே காலகட்டத்தில், இந்தியாவிலிருக்கும் மாநிலங்கள், மாநில வரியாக பெட்ரோலியப் பொருள்களின் மூலம் ஈட்டியது 2.02 லட்சம் கோடி ரூபாய்.

பெட்ரோல், டீசல் மீதான வரிகளை விதிப்பதற்கும் ஓர் எல்லை உண்டு. ஆனால், அதையும் 2020 மார்ச்சில் மாற்றியமைத்தது மத்திய அரசு. பெட்ரோலுக்கு 18 ரூபாய் எனவும், டீசலுக்கு 12 ரூபாய் எனவும் இருந்த வரிகளுக்கான உச்ச வரம்பை மேலும் 8 ரூபாய் கூட்டி சட்டத்தை மாற்றியமைத்தது மத்திய அரசு.

அரசுகளாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால், நம்மிடம் மத்திய, மாநில அரசுகள் உறிஞ்சும் வரிகளிடமிருந்து நாம் மீள முடியாது.

****

மாநிலங்களும் மத்திய அரசுக்குப் போட்டியாக வரிகளை வசூலித்துவருகின்றன.

2006-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி முடிவில் பெட்ரோல் வரி: 30%, டீசல் வரி: 25%

2011-ம் ஆண்டு கருணாநிதி ஆட்சி முடிவில், பெட்ரோல் வரி: 27%, டீசல் வரி: 21.43%, 2017-ல் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் வரிகளை உயர்த்திய பிறகு, பெட்ரோல் வரி: 34%, டீசல் வரி: 25%