ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பு, கேரளா வயநாடு பகுதியின் திருநெல்லி காடுகளுக்குள் சுட்டுக் கொல்லப்பட்டார் நக்சலைட் வர்கீஸ். வயநாடு பகுதியில் வாழ்ந்த பழங்குடிகள் பல நூறு ஆண்டுகளாகக் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டதை எதிர்த்துக் களம் கண்டவர் வர்கீஸ். 'பெருமான்' சகாவு வர்கீஸ் என அப்பகுதி மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட அவரின் கொலை, கேரளாவின் முதல் என்கவுன்டராக வரலாற்றில் பதிவானது. கேரளாவின் அப்போதைய ஆளுங்கட்சியாக இருந்தது, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி; முதல்வர் அச்சுத மேனன்.
அன்றைய எதிர்க்கட்சியாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வர்கீஸ் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்தது. வர்கீஸ் மரணம் மீது விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று கூறினார் அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட். வர்கீஸ் காவல்துறையை நோக்கிச் சுட்டதாகவும், தற்காப்புக்காகக் காவல்துறை சுட்டதில் வர்கீஸ் கொல்லப்பட்டார் எனவும் கூறியது அரசுத் தரப்பு.

28 ஆண்டுகள் கழித்து, வர்கீஸைச் சுட்டுக் கொன்ற ராமச்சந்திரன் நாயர் என்ற காவலர், தனது உயரதிகாரி லட்சுமணாவின் ஆணையை ஏற்று வர்கீஸை என்கவுன்டர் செய்ததாகவும் குற்றவுணர்வு தாங்காமல் உண்மையை ஒப்புக்கொள்வதாகவும் வாக்குமூலம் அளித்தார். இந்தியாவின் முதல் போலி என்கவுன்டர் குறித்த பயங்கரமான தகவல்கள் அப்போது வெளியாகின.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆளுங்கட்சியாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கட்சியாகவும் இருந்த அன்றைய காலகட்டத்தில் வர்கீஸ் கொலை குறித்த விவாதங்கள் இரு கட்சிகளுக்கும் இடையே எழுந்தன. தற்போது இரண்டு கட்சிகளுமே ஒரே கூட்டணியில் இருக்கின்றன. பினராயி விஜயன் முதல்வர் பதவியில் இருக்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேரள மாநிலத்தை ஆள்கிறது. மீண்டும் நக்சலைட் என்கவுன்டர் மீதான விவாதத்தில் பிளவுபட்டிருக்கிறது இடது முன்னணி.

கடந்த அக்டோபர் 28 அன்று, கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தின் அட்டப்பாடி பகுதியைச் சேர்ந்த அகலி காடுகளுக்குள் 4 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்ட நால்வருள், இருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். மாவோயிஸ்ட்களை ஒழிப்பதற்காக கேரள அரசு உருவாக்கியுள்ள 'தண்டர்போல்ட்' படையினர் என்கவுன்டரில் ஈடுபட்டனர்.
என்கவுன்டருக்கான காரணத்தைக் குறிப்பிடும்போது, கேரள அரசு வழக்கம்போல, "தேடப்பட்ட மாவோயிஸ்ட்கள் காவல்துறையினரை நோக்கிச் சுட்டனர். தற்காப்புக்காகக் காவல்துறை சுட்டது. இதில் மாவோயிஸ்ட்கள் நால்வர் உயிரிழந்தனர். காவல்துறையினருக்கு அதிர்ஷ்டவசமாக எந்தக் காயமும் ஏற்படவில்லை" எனக் கூறியுள்ளது. 1970ம் ஆண்டு, வர்கீஸ் கொல்லப்பட்ட போதும், அதன் பிறகு இந்தியா முழுவதும் நிகழ்ந்த என்கவுன்டர்களிலும் காவல்துறையும் அரசும் கூறிய காரணமும் இதுதான்.

கேரள முதல்வர் பினராயி விஜயன், அட்டப்பாடியில் நிகழ்ந்த என்கவுன்டர் பற்றி, "மாநிலத்தின் ஜனநாயகத்தையும் சட்ட ஒழுங்கையும் சீர்கெடுக்கும் நோக்கில் மாவோயிஸ்ட்கள் செயல்படுகின்றனர். மாவோயிஸ்ட்கள் வாழும் பகுதிகளில் பயிற்சிபெற்ற காவலர்களும் 'தண்டர்போல்ட்' படையினரும் பணியாற்றி வருகின்றனர். மாவோயிஸ்ட்கள் காவலர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதால் கொல்லப்பட்டுள்ளனர்" எனக் கூறியுள்ளார்.
பினராய் விஜயனின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகளுடன் கூட்டணியில் இருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தப் படுகொலைகளைக் கடுமையாகக் கண்டித்துள்ளது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் கனம் ராஜேந்திரன், "எங்களுக்குக் கிடைத்த தகவல்களின்படி, காட்டுக்குள் உணவு உண்டுகொண்டிருந்த மாவோயிஸ்ட்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. மேலும், மிக அருகில் வைக்கப்பட்டு நால்வரும் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவோயிஸ்ட்களின் அரசியலை ஏற்கவில்லை. எனினும், மாவோயிஸ்ட்கள் சுட்டிக்காட்டும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும். அட்டப்பாடி பகுதியில் மாவோயிஸ்ட்கள் செயல்படுவது தெரிய வந்தபோது, அவர்களைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்தியிருக்க வேண்டும். சுட்டுக் கொலை செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது" எனக் கூறியதோடு, கட்சி சார்பில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரான ரமேஷ் சென்னிதாலா, "பினராயி விஜயன் பதவியேற்றது முதல் மாவோயிஸ்ட்கள் மீதான என்கவுன்டர்கள் அதிகரித்துள்ளன. காங்கிரஸ் ஆட்சியில், நான் உள்துறை அமைச்சராக இருந்தபோது, ஒரு போலி என்கவுன்டர் கூட நிகழவில்லை. காங்கிரஸ் அரசு மாவோயிஸ்ட்களைச் சிறையில் அடைத்தது; சுட்டுக் கொல்லவில்லை" என்று கண்டித்துள்ளார்.
2017-ம் ஆண்டு, கேரளாவின் வாளையார் பகுதியில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டனர். அந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. அந்த வழக்கின் தீர்ப்பு கடந்த வாரம் வெளிவந்தது. இதில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர். கேரள அரசுத் தரப்பு வழக்கறிஞர் வழக்கு நடைபெறும் நாள்களில் நீதிமன்றத்துக்கு வராமல் இருந்தார் எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பினராயி விஜயன் அரசு மீது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது இந்த வழக்கின் தீர்ப்பு. இதைத் திசைதிருப்ப, அமைதியாக இருந்த மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

கடந்த 3 ஆண்டுகளில், கேரளாவின் தண்டர்போல்ட் காவல் படை இதைப் போன்று 3 என்கவுன்டர்களை நிகழ்த்தியுள்ளது. அதில் 7 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களுள் 4 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
தற்போதைய என்கவுன்டரில் கொல்லப்பட்டவர்களில், கார்த்தி, மணிவாசகம் ஆகிய இருவர் தமிழகத்தில் இருந்து, கேரளாவுக்குச் சென்றவர்கள். கார்த்தி, சென்னையைச் சேர்ந்தவர்; மணிவாசகம் சேலத்தைச் சேர்ந்தவர். 59 வயதான மணிவாசகம் கடுமையாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. "துணையில்லாமல் நடக்கக்கூட முடியாத நிலையில் இருந்த மணிவாசகம் காவல்துறையிடம் சரணடையத் தயாராக இருந்தார். அவரைச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்" என்கிறார் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் கனம் ராஜேந்திரன்.

சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்களின் குடும்பத்தினருக்குத் தகவல் சொல்லப்பட்டது. சுட்டுக் கொல்லப்பட்ட கார்த்தியின் தாய் மீனம்மா, அண்ணன் முருகேசன் ஆகியோர் திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். மணிவாசகத்தின் தங்கை லட்சுமி, தன் கணவரோடு வந்திருந்தார். கொல்லப்பட்டவர்களின் உடலை, அவர்களின் உறவினர்கள் பார்க்க காவல்துறை அனுமதிக்கவில்லை. மதுரை நீதிமன்றக் கிளை, பாலக்காடு நீதிமன்றம் ஆகிய இரண்டு நீதிமன்றங்கள் உத்தரவிட்ட பிறகு, இரண்டு நாள்கள் காத்திருப்புக்குப் பிறகு, உடலைக் காட்டியுள்ளனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட கார்த்தியின் குடும்பம் அவரது முகம் சிதைந்திருப்பதாகவும், அடையாளம் காண முடியவில்லை எனவும் கூறியுள்ளனர். அவர்களுக்கு, கார்த்தி இறந்தபோது எடுக்கப்பட்ட படங்களை அனுப்புவதாகக் கேரள காவல்துறை கூறியுள்ளது.
கேரளாவில் நடந்த என்கவுன்டர்கள் சட்டத்துக்குப் புறம்பானது எனவும், நீதி விசாரணை வேண்டும் எனவும் சென்னையில் மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு (NCHRO) சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. இதில் பேராசிரியர் அ.மார்க்ஸ், முனைவர் ப.சிவகுமார், பேராசிரியர் திருமாவளவன், கேரளாவைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் ரெனி அய்லின், மாவோயிஸ்ட் கட்சியின் விவேக் முதலானோர் கலந்துகொண்டனர். இதில் கேரளா அட்டப்பாடி என்கவுன்டர்கள் மீது சுதந்திரமான நீதித்துறை விசாரணை வேண்டும், தண்டர்போல்ட் படை கலைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளைக் கோரியுள்ளனர். இப்படி கேரள அரசியல் சூழலை உலுக்கியுள்ளது அட்டப்பாடி என்கவுன்டர் சம்பவம்.

இதனிடையே, ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பின் உறுப்பினர்கள் இருவர், மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவான துண்டுச்சீட்டை விநியோகித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஆலன் சுஹைப், தாஹா பைசல் ஆகிய இருவரையும் கைதுசெய்துள்ள அரசு, அவர்களைச் சட்டவிரோதத் தடுப்பு நடவடிக்கை சட்டத்தின் (உபா சட்டம்) கீழ் கைது செய்துள்ளது.
மாணவர்கள் கைது செய்யப்பட்டது கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடமே கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் எனக் கூறியுள்ளார்.

தென்னிந்தியாவின் முற்போக்கான முதல்வராகக் கருதப்பட்டார் பினராயி விஜயன். அவர் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு பல்வேறு புதிய திட்டங்களை அதிரடியாக அமல்படுத்தி, பாராட்டுகளைப் பெற்றன. ஆனால், தற்போது கேரள சிறுமிகள் வன்கொடுமை குற்றவாளிகள் விடுவிப்பு, மாவோயிஸ்ட் என்கவுன்டர் மீதான சர்ச்சைகள், மாணவர்கள் மீது உபா சட்டம் விதிப்பு ஆகியவற்றால் பினராயி விஜயன் அரசு மீது கேரளாவில் அதிருப்தி எழுந்துள்ளது.