ரோமனைச் சேர்ந்த தத்துவஞானி லூசியஸ்,``ஒரு மனிதன் எங்கிருந்தாலும், அங்கே அவனுக்கு அன்பு கிடைப்பதற்கான சாத்தியம் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார். பீட்சா டெலிவரி செய்யும் நபர் ஒருவரை குழந்தை ஒன்று கட்டியணைத்த சம்பவம் தொடர்பான வீடியோவும் அதன் பின்னால் இருக்கும் நெகிழ்ச்சி சம்பவமும் இணையும் புள்ளி, லூசியஸின் கூற்றுக்கு உதாரணமாக விளங்குகிறது எனலாம்.

அமெரிக்காவின் ரோட் தீவில் கிரான்ஸ்டன் என்ற நகரம் அமைந்துள்ளது. லிண்ட்சே ஷீலி தனது குடும்பத்தினருடன் இங்கு வசித்துவருகிறார். இவருக்கு கோஹன் என்ற இரண்டு வயது குழந்தை உள்ளது. லிண்ட்சே சில நாள்களுக்கு முன்பு, பீட்சா ஆர்டர் செய்துள்ளார். ஆர்டரை டெலிவரி செய்ய வந்த நபரை கோஹன் ஓடிச் சென்று கட்டியணைத்து முத்தமிடவும் முயன்றுள்ளான். தங்களுடைய வீட்டில் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருந்த கேமராவில், இந்த வீடியோ பதிவாகியுள்ளது. இதைத் தன்னுடைய முகநூல் பக்கத்தில் லிண்ட்சே பகிர்ந்துள்ளார்.
முகநூல் பக்கத்தில் உள்ள வீடியோவின் கேப்ஷனில், ``மிகவும் இனிமையான மற்றும் வேடிக்கையான விஷயம் இது என நாங்கள் நினைத்தோம். இந்த வீடியோ உங்களுக்கு சிரிப்பைத் தரும் என நம்புகிறேன். எங்களைப் போலவே இந்த அணைப்பு உங்கள் இதயத்தையும் இதமாக உணரச்செய்யும்” என்று எழுதியுள்ளார். இந்த வீடியோ, பீட்சா டெலிவரி செய்த ரியானின் கவனத்திற்குச் சென்றுள்ளது. முகநூலில் இருவரும் நண்பர்களாகியுள்ளனர். பின்னர், ரியான் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சோகமான விஷயத்தைப் பகிர்ந்துள்ளார்.
ரியான் கூறிய விஷயத்தையும் முகநூலில் அப்டேட் செய்துள்ளார் லிண்ட்சே. அதில் அவர், ``ரியான், சமீபத்தில் தன்னுடைய மகளை இழந்துள்ளார். கோஹன் அணைத்துக்கொண்டதை கடவுளிடமி ருந்து கிடைத்த ஆசீர்வாதமாக அவர் கருதுகிறார். அவர், பீட்சா டெலிவரி செய்ய வந்ததிலும் ஒரு காரணம் இருந்துள்ளது. அவருடைய குடும்பத்தை நினைக்கும்போது என்னுடைய இதயம் கனமாக இருக்கிறது. நாங்கள் வேடிக்கையாக நினைத்த கோஹனின் அணைப்பு, ரியானுக்கு மிகுந்த அர்த்தமுள்ளதாக இருந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும் ``டெலிவரி செய்ய வந்தவர் யாரென்று தெரியாததால் கோஹனை வெளியில் செல்ல நான் அனுமதிக்க மறுத்திருந்தால், இந்த உணர்வுபூர்வமான தருணத்தை நாங்கள் இழந்திருப்போம். இப்படியான உலகத்தில்தான் நாம் வாழ்கிறோம். ஆனால், இந்தச் சம்பவம் ரியானின் வாழ்க்கையில் மட்டுமல்ல எங்கள் குடும்பத்திலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்தத் தருணத்தைப் பற்றி ரியான் பேசும்போது, ``வேலைக்குப் புறப்படுவதற்கு முன்பு, என்னுடைய குழந்தைகளிடமும் குடும்பத்தினரிடமும் எனக்கு எவ்வளவு அரவணைப்புகள் தேவை என சொல்லிக்கொண்டிருந்தேன். மிகவும் சரியான நேரத்தில் அந்த இனிமையான சிறுவன் என்னை அணைத்துள்ளான். என்னுடைய மகள் பிரபஞ்சத்திலிருந்து எனக்கு அனுப்பியது போல இருந்தது” என்று நெகிழ்ந்து கூறியுள்ளார்.
இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது. நெட்டிசன்களும் இதனைப் பகிர, `மனதிற்கு கனத்தை கொடுக்கிறது. எவ்வளவு அழகான தருணம், ஒரு குழந்தையின் கள்ளம் கபடமற்ற அணைப்பு, ஒரு மனிதனுக்கு எவ்வளவு உதவியிருக்கிறது” போன்ற கமென்ட்டுகளால் ஆறுதல் அளித்தும் நெகிழ்ந்தும் வருகின்றனர்.