’கீழடியில் கிடைத்திருப்பது வால் அளவுதான். இன்னும் 100 கி.மீ வரையில் ஆய்வுகள் மேற்கொண்டால்தான் முழுமையான நகரை கண்டறியமுடியும்' என்கிறார் எழுத்தாளர் சு.வெங்கடேசன். மதுரை கோயில் நகரம் என்றால் மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் பகுதிகளை தொல்லியல் நகரங்கள் என்றும் செல்லமாக அழைக்கலாம் என்கின்றனர் தொல்லியல் ஆர்வலர்கள். அந்த அளவிற்கு தொல்லியல் விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. பசுமையான மலங்காடுகளையும், நீள நிறமாக தென்படும் கடல் மட்டும்தான் சுற்றுலா தலமான என்ன? மனதிற்கு ஓய்வையும், மகிழ்ச்சியையும் அள்ளித்தரும் அனைத்து இடங்களும் நமக்கு சுற்றுலாதான்.

அந்த வகையில் மதுரையில் இருந்து சிவகங்கைவரை சுற்றிவர பல சுற்றுலா தலங்கள் உள்ளன. அதில் குறிப்பாக 'தொல்லியல்' சுற்றுலாவும் ஒன்று. மதுரை மேலூர் வழியாக சிவகங்கை சுற்றுலா சென்றுவருவோம் வாங்க!
மதுரை மாட்டுத்தாவணியை கடந்து கிழக்கு நோக்கி செல்லும்போது யா.ஒத்தக்கடை பகுதியில் மேகங்களோடு ஒட்டிக் கிடப்பது போல் தெரிகிறது யானை மலை. அடிவாரத்தில் உள்ள நகர் பகுதி கடைகளில் ஒத்தக்கடை ஸ்பெஷல் அல்வா, முறுக்குகளை சுவைத்தபடி மலைக்குச் செல்வோம்.
யானை மலை 4,000 மீட்டர் நீளமும், 1200 மீட்டர் அகலமும், 400 மீட்டர் உயருமும் கொண்டது. இது யானை படுத்திருப்பது போல் தென்படும். யானை மலையை நரசிங்கமங்கலம் என்றும் அழைப்பார்கள். இதன் உச்சியில் குகை தளம் காணப்படுகிறது. குகையில் கி.பி. முதலாம் நூற்றாண்டு தமிழ் பிராமி கல்வெட்டுகளை காணமுடியும்.

அதில் 'இவ குன்றம்' என்ற வரி யானை மலை என்ற பொருளை தருகிறது என்பது கூடுதல் சிறப்பு. மலையின் வடமேற்கில் நரசிங்கப் பெருமாளுக்கு குடைவரை கோயில் பார்க்க வேண்டிய இடம். மேலும் யானை மலையில் லாடன் கோயில் குடைவரையும் உள்ளது. யானை மலையில் உள்ள புடைப்புச் சிற்பங்கள் தமிழக தொல்லியல் துறை சார்பாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இதில் தீர்த்தங்கரர்களின் மகாவீரர், பார்சுவநாதர், பாகுபலி அகிய சிற்பங்கள் இதில் இடம்பெற்றிருக்கின்றன. இதனை சமண சமயத் துறவியான அச்சணந்தி செதுக்கியுள்ளார். இப்படி பல விஷயங்களை யானை மலையில் அறிவு பூர்வமாக ரசிக்க முடியும்.
ஒத்தக்கடையில் இருந்து நான்கு வழிச்சாலையில் செல்லும்போது மேலூருக்கு முன்பாகவே அரிட்டாபட்டி கிராமத்திற்குச் சென்றுவிடலாம். 7 மலைகள் சூழ்ந்த, இயற்கை எழில் கொஞ்சும் கிராமம் அது!

பல்வேறு அரியவகை பறவைகள் இங்கு வசிப்பது சுற்றுச்சூழலின் தூய்மையை குறிக்கிறது. தமிழ் பிராமி கல்வெட்டுகள், வட்டெழுத்துக்கள், பாண்டியர் காலத்து குடைவரை கோயில், 11-ம் நூற்றாண்டு, 16-ம் நூற்றாண்டு கல்வெட்டுகள், திருமலை நாயக்கர் காலத்து செப்பேடு, மடை கல்வெட்டுகள், மகாவீரர் சிற்பம், சமணர் படுக்கை என பல தொல்லியல் விஷயங்களையும் காணமுடியும்.
அரிட்டாபட்டியில் இருந்து மேலூரைக் கடந்து திருப்பத்தூர் சாலையில் உள்ளது கீழவளவு கிராமம். சிவகங்கை - மதுரை எல்லையாக உள்ள இந்த ஊரில் சக்கரை பீர் மலை, பஞ்ச பாண்டவர் மலை இரண்டும் பெயர் பெற்றவை.
சர்க்கரை பீர் மலையில் இஸ்லாமியர்களின் வழிபாட்டு தலங்கள் உள்ளது. பஞ்ச பாண்டவர் மலையில் பிராமிக் கல்வெட்டுகளும், சமண கல்வெட்டுகளும், வட்டெழுத்துகளும், மகாவீரர் சிற்பமும் அவரின் சீடர்களின் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன. இங்குள்ள சமண படுக்கை அறை ஆழ்ந்த அமைதியை அளிக்கிறது. 50-க்கும் மேற்பட்ட துறவிகள் இங்கு தங்கி செல்லும் அளவிற்கு இட வசதிகள் உள்ளன. கடும் வெயிலிலும் குளு, குளு குளிர்ச்சியை தரக்கூடிய இடமாக உள்ளது அறை. உள்ளே மழை நீர் வரக்கூடாது என்று காடி அமைப்புகளை வடிவமைத்துள்ளனர். மூலிகை அரைக்கும் குழிகள் பழைமையான காட்சிகளைக் கண்களுக்கு கொண்டுவருகின்றன.

கீழவளவு கிராமத்தில் இருந்து சுமார் 12 கி.மீ உள்ளது ஏரியூர் கிராமம். செட்டிநாடு கட்டடக்கலைகள் தென்படும் இந்தக் கிராமத்தில் ஆகாசப்பாறை எனும் பாறை உள்ளது.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த இடம் மிகவும் வித்தியாசமானது. இரண்டு கை அளவு இடத்தில் பல பெரும் எடை கொண்ட பாறை தொங்கி கொண்டு எந்த அசைவும் இல்லாமல் நிற்பது ஆச்சர்யங்களை அளிக்கும்.

பின்னர், ஏரியூரில் இருந்து சுமார் 20 நிமிடத்தில் திருமலையை அடையலாம். மலை குன்றான திருமலை கண்களுக்கு விருந்தளிக்கும்.
இங்கு ஆதிமனிதன் வரைந்த காவி வண்ண ஓவியங்கள், தமிழி கல்வெட்டு, குகைகளுக்குள் படுக்கை அறை, 8-ம் நூற்றாண்டு குடைவரை கோயில், கட்டுமானக் கோவில் மலை கொளுந்தீஸ்வரர் கோயில் எனப் பல விஷயங்களை காணலாம்.

திருமலையில் இருந்து திருப்பத்தூர் வட்டத்தில் உள்ள திருக்கோளக்குடிக்குச் செல்லலாம். அங்கு பாண்டிய மன்னர்காலத்து குடைவரை கோயில்கள், 81 வகையான கல்வெட்டுகள் உள்ளன.
இந்தக் கல்வெட்டுகளை மத்திய தொல்லியல் துறையினர் படி எடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கோனேரி அம்மன் அரசாணை கல்வெட்டும் உள்ளது. இந்த கல்வெட்டை வேறு எங்கும் காண முடியாது.
திருக்கோளக்குடியில் இருந்து மிக அருகில் உள்ளது செவ்வூர். இங்கு பெருங்கற்கால சின்னங்களை அதிகளவு காணமுடிகிறது. இங்குள்ள பழைமையான இடுகாட்டில் நடுகல் வழிபாடு செய்யப்படுகிறது.
மலை அடிவாரங்கள் ஒட்டிய பகுதியில்தான் பொதுவாக நடுகல் வழிபாடு அதிகமாக இருக்கும். சிவகங்கை மாவட்டம் செவ்வூரில் இருக்கும் நடுகல் மிக முக்கியமான ஒன்று. குறு நில இனக்குழு தலைவனின் நினைவாக இங்குள்ள நடுகல் வழிபாடு வந்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

அப்படியே செவ்வூரில் இருந்து குன்றக்குடி செல்லலாம். குன்றக்குடி மலையில் 3 குடைவரை கோயில், தமிழிக் கல்வெட்டுகளைப் பார்வையிடலாம்.
இதனை மத்திய தொல்லியல்துறை பாதுகாத்து வருகிறது. குன்றக்குடியை தொடர்ந்து காளையார்கோயில் கோயில் சுற்றுவட்டார தொல்லியல் இடங்களுக்குச் செல்லலாம். நல்லேந்தல் எனும் இடத்தில் பறந்து விரிந்துகிடக்கும் ஈமக்காடு உள்ளது.
நூற்றுக்கணக்கான ஏக்கரில் பல்வேறு முதுமக்கள் தாழிகளைப் பார்க்க முடியும். அங்கிருந்து அருகே உள்ள இலந்தகரையில் பண்டைய காலத்தில் கல், பாசி, மணிகளைக் காணமுடியும். வேளாங்குளத்தில் பழங்கால கல்வெட்டுகளைப் பார்க்க முடியும். கண்டனிக்கரை எனும் இடத்தில் பழங்கால மக்கள் வாழ்விட பகுதிகளை காணமுடியும்.

இப்படி எண்ணற்ற தொல்லியல் சார்ந்த இடங்கள் சிவகங்கையில் உள்ளன. ஆனால் அதனை பார்வையிட கூடுதல் நேரம் எடுக்கும். தனி வாகனம் மூலம் பல இடங்களுக்கு எளிமையாகச் சென்றுவர முடியும்.