உலகின் மிக நீளமான நதிப்பயண சொகுசு கப்பலை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் சமீபத்தில் தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவல், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா, பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த சொகுசுக் கப்பல் தனது பயணத்தை உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் தொடங்கி 51 நாட்கள் பயணித்து அசாமின் திப்ருகர் வழியாக பங்களாதேஷ் சென்றடையும்.
எம்.வி 'கங்கா விலாஸ்’ என்றழைக்கப்படும் இந்த கப்பல் இந்தியா மற்றும் வங்கதேசத்தில் உள்ள 27 நதிகள் வழியாக பயணிகளை அழைத்துச் செல்லும். 51 நாட்களில் 3200 கி.மீ தொலைவைக் கடக்கும். இந்த சொகுசுக் கப்பல் 70 கோடி ரூபாய் மதிப்பில் முழுக்க முழுக்க இந்தியப் பொருட்களைக் கொண்டு கொல்கத்தாவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன் நீளம் 62.5 மீட்டர் அகலம் 12.8 மீட்டர். 18 அறைகள், உடற்பயிற்சி கூடம் , ஸ்பா, உணவு விடுதிகள், திரையரங்குகள் போன்ற பல்வேறு வசதிகளையும் இக்கப்பல் கொண்டுள்ளது. 3 அடுக்குகளைக் கொண்ட இக்கப்பலில் 80 பயணிகள் வரை பயணிக்கலாம். இந்த சொகுசு கப்பலில் ஒரு நாள் தங்கி பயணிக்க 25,000 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்று பிரதமர் மோடி துவங்கி வைத்த இந்த சொகுசு கப்பலில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 36 பயணிகள் வாரணாசி முதல் அசாமின் திப்ருகர் வரை பயணித்தனர். உலக நினைவுச்சின்னங்கள், வனச்சரணாலயங்கள் உள்ளிட்ட 50 வகையான சுற்றுலாத் தளங்கள் இக்கப்பலில் பயணிக்கும் பயணிகளுக்கு காட்டப்பட உள்ளன.