
“என் வாரிசுகளோ சந்ததியினரோ கட்சியிலோ சங்கத்திலோ பொறுப்புக்கு வர மாட்டார்கள்!’’
“தமிழக அரசியலில் எனக்குப் பொய் பேச வராது... எப்போதும் உண்மையைத்தான் பேசுவேன்!”
- அண்மையில் அவர் எழுதிய ‘சுக்கா மிளகா சமூகநீதி?’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இப்படித் திருவாய் மலர்ந்தருளினார். ‘பொய் சொல்லமாட்டார். மாற்றி வேண்டுமானால் பேசுவார்’ என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அவர் இதற்கு முன்பு எப்படியெல்லாம் மாற்றிப்பேசியிருக்கிறார் என ரீவைண்ட் பண்ணிப் பார்க்கலாமா?
அப்போ:
“என் வாரிசுகளோ சந்ததியினரோ கட்சியிலோ சங்கத்திலோ பொறுப்புக்கு வர மாட்டார்கள்!’’
(1989 ஜூலை 16-ம் தேதி சென்னைக் கடற்கரைக் கூட்டத்தில்)
இப்போ:
“பா.ம.க-வில் அன்புமணி தம்பிகள் படை, அன்புமணி தங்கைகள் படை, அன்புமணி மக்கள்படை ஆகிய மூன்று படைகள் உள்ளன. 90 தொகுதிகளில் இந்தப் படைகளை அமைக்க வேண்டும் என்பதுதான் நமது இலக்கு. விரைவில் இந்தப் படைகளை அமைத்து மருத்துவர் அன்புமணி கையில் நாம் கொடுக்க வேண்டும்!”

அப்போ:
“சிகரெட் பிடிக்கவும் தண்ணியடிக்கவும் ரசிகர்களுக்கு ரஜினி கற்றுக் கொடுத்திருக்கிறார்.”
இப்போ:
“கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிக்கு விருது வழங்கப்படவிருப்பதில் மகிழ்ச்சி. திரைத்துறையில் மேலும் சாதிக்க வாழ்த்துகள்!”
அப்போ:
“பத்திரிகையாளர்களுக்குத் தைலாபுரம் கதவு எப்போதும் திறந்திருக்கும். என்னிடம் எந்தக் கேள்வியும் பத்திரிகையாளர்கள் கேட்கலாம். அதற்கான பதிலைச் சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன்!”
இப்போ:
“என்னிடம் மரம் வெட்டியது பற்றியே கேள்வி எழுப்புகிறார்கள். பலமுறை பதில் அளித்தும் மீண்டும் மரம் வெட்டியது பற்றியே கேள்வி எழுப்புகிறார்கள். இதற்கான பதிலை 100 முறை கூறிவிட்டோம்... இனி இந்தக் கேள்வியைக் கேட்டால் மரத்தையெல்லாம் வெட்ட மாட்டோம், இப்படிக் கேள்வி கேட்கிற ஆளை வெட்டிப் போட்டுவிட்டு அப்புறம் போராட்டம் பண்ணுவோம்!”
(தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கம் சார்பில் கருத்தரங்கம் போனவருடம் நடந்தது. அதில் கலந்துகொண்ட டாக்டர் ராமதாஸ் ‘வளர்க்கப்படுகின்ற வெறுப்பு அரசியல்’ என்ற தலைப்பில் பேசியபோது தான் இப்படி வெறுப்பாய்ப் பேசினார்)
அப்போ:
“தந்தை பெரியாருக்குப் பிறகு... அண்ணல் அம்பேத்கருக்குப் பிறகு நமக்குக் கிடைத்த நல்ல தலைவர் கருணாநிதி!”
“அற்புதமான காரியத்தைக் கருணாநிதி செய்திருக்கிறார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற சட்டம்தான் அது. அப்பொழுது நான் டெல்லியில் இருந்தேன். காலை 7 மணிக்கு கருணாநிதியைத் தொடர்பு கொண்டு பெரியாரின் நெஞ்சிலே தைத்திருந்த முள்ளை நீக்கிவிட்டீர்களே என்று நான் அவரைப் பாராட்டினேன்!”

இப்போ:
“கருணாநிதிமீது இந்திய அரசு ஊழலுக்காக ஒரு கமிஷனே போட்டது.”
“கதை கேளு கதை கேளு... சட்டப்பேரவையில் தி.மு.க-வும் கருணாநிதியும் மாண்பை மீறிய கதைகளைச் சொல்லவா?”
அப்போ:
“எங்களை ஜெயலலிதா மரியாதையாக நடத்தவில்லை. தன்மானத்தை இழந்துவிட்டு, அ.தி.மு.க கூட்டணியில் நீடிக்க விரும்பவில்லை’’ (2001 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகியபோது)

இப்போ:
“ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க இரண்டாக உடைந் ததற்குக் கொள்கை மாறுபாடுகள் அல்ல., பதவிகளைப் பயன் படுத்திக் கொள்ளையடிப்பதில் ஏற்பட்ட போட்டிதான் காரணம்!’’
(`கழகத்தின் கதை-அ.தி.மு.க தொடக்கம் முதல் இன்றுவரை’ என்று அவர் எழுதிய புத்தகத்தில்தான் அ.தி.மு.க-வை இப்படிக் கடுமையாக விமர்சித்திருக்கிறார் ராமதாஸ்.)

அப்போ:
“ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டும் எடப்பாடி, பன்னீர்செல்வம் தலைமையிலான பினாமி அரசின் ஊழல்களை மறைக்க முடியாது; அதனால் ஏற்பட்ட பாவங்களைக் கழுவ முடியாது!’’
இப்போ:
“பழைய கசப்புகளை மறந்து அ.தி.மு.க-வும், பா.ம.க-வும் கரங்கள் கோத்துள்ளன. பா.ம.க-வுக்கு 7 தொகுதிகளோடு ஒரு மாநிலங்களவை எம்.பி பதவியும் அ.தி.மு.க கூட்டணியில் ஒதுக்கப்பட்டது உள்ளபடி மகிழ்ச்சியளிக்கிறது. முதல்வர் இல்லத்தில் தேநீர் விருந்தளிக்கப்பட்டது. பதிலுக்கு தைலாபுரத்திற்கு விருந்துக்கு அழைத்தோம். அன்போடு வந்திருந்து முதல்வரும் துணை முதல்வரும் விருந்தினைச் சிறப்பித்தார்கள்!”
ரொம்ப அப்போ:
“கார் உள்ளவரையிலும், கடல் நீர் உள்ளவரையிலும், பார் உள்ளவரையிலும், பைந்தமிழ் உள்ளவரையிலும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை!”

ரொம்ப இப்போ:
“வன்னியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நான், டாக்டர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி போன்றவர்கள் நேரில் சந்தித்துக் கோரிக்கை விடுத்தோம். ஆனால் அதுகுறித்து இதுவரை அரசாங்கம் நம்மை அழைத்துப் பேசவில்லை. இன்னும் எத்தனை நாள்களுக்குத்தான் இப்படி நாம் கேட்டுக்கொண்டே இருப்பது?
தமிழ்நாட்டில் மக்கள்தான் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். மக்களிடம் மனமாற்றம் வந்தால் நமது நிலை முன்னேறும். கல்வி, சமூகம், பொருளாதாரம் உள்ளிட்ட எல்லாக் கோரிக்கை களையும் நிறைவேற்ற முடியும். அதற்காக பா.ம.க-வுக்குத் தமிழக மக்கள் ஒருமுறை வாய்ப்பு அளிக்க வேண்டும்!”