“முதல்ல அவரை களத்துக்கு வரச் சொல்லுங்க!” - அன்புமணிக்கு கட்சி நிர்வாகிகள் அட்வைஸ்...

சின்னய்யா வீட்டைவிட்டு வெளியவே வர்றது இல்லை. கட்சி நிர்வாகிகளோட வீட்டு விசேஷம், நல்லது கெட்டதுக்கும் தலைகாட்டுறது இல்லை
``கிராமங்களுக்குச் செல்வோம்... மக்களுடைய நம்பிக்கையைப் பெறுவோம்.’’ - டிசம்பர் 29 அன்று நடந்த பா.ம.க சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் அதன் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் முழங்கிய கோஷம் இது. சமீபகாலமாக பா.ம.க கூட்டங்களில் அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் கடுமையாகப் பேசிவரும் நிலையில், இந்தக் கூட்டத்தில் தந்தையை விஞ்சியது மகனின் பேச்சு! அதேசமயம், “சின்னய்யா என்னதான் ஆவேசமா பேசுனாலும் மாற்றம், முன்னேற்றம் எல்லாம் அவர்கிட்ட இருந்துதான் ஆரம்பிக்கணும். முதல்ல அவரைக் களத்துக்கு வரச் சொல்லுங்க!” என்று தங்கள் ஆதங்கத்தைக் கொட்டுகிறார்கள் பா.ம.க நிர்வாகிகள்.
2021 சட்டமன்றத் தேர்தல் மற்றும் ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக பா.ம.க-வில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுவருகின்றன. மாவட்டச் செயலாளர்கள் பலர் மாற்றப்பட்டு, இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுவருகிறது. கட்சிப் பதவியில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பிரதிநிதித்துவம் வழங்கும்விதமாக மாநிலத் துணைச் செயலாளர், துணைத் தலைவர் பொறுப்புகளில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். தேர்தலுக்குப் பிறகு மாநிலப் பொறுப்புகளிலிருந்து அனைவரும் விடுவிடுக்கப்பட்டிருக்கின்றனர். வடமாவட்டங்களில் தொடர்ச்சியாகச் சுற்றுப்பயணம் செய்துவரும் ராமதாஸ், கட்சி நிர்வாகிகளை மிகக் கடுமையாக வறுத்தெடுத்துவருகிறார். இந்த நிலையில்தான், டிசம்பர் 29-ம் தேதி, சென்னை சேப்பாக்கத்தில், அந்தக் கட்சியின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் ‘எழுவர் விடுதலைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்; வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை மீட்டெடுக்க வேண்டும்’ என்பது உட்பட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, ஆவேசமாக உரையாற்றினார் அன்புமணி. ஆனால், ``சின்னய்யா பேசினதுல எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை; ஆனா, முதல்ல அவரைக் களத்துக்கு வரச் சொல்லுங்க... அப்போதுதான் எந்த மாற்றமும் பிறக்கும்’’ என்றபடியே நம்மிடம் பேசினார்கள் அந்தக் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் சிலர்...
``கூட்டத்துல பேசுன சின்னய்யா, ‘தி.மு.க., அ.தி.மு.க-ன்னு இந்த ரெண்டு கட்சிகளுக்கும் மேக்ரோ பிளானிங்கூட கிடையாது. நம்மகிட்ட மைக்ரோ பிளானிங் வரைக்கும் இருக்கு. தமிழ்நாட்டுல எந்தக் கிராமத்துல, என்னென்ன பிரச்னை இருக்கு... அதுக்கு என்ன தீர்வு வரைக்கும் நாம வெச்சிருக்கோம். ஆனா, நாம ஆட்சிக்கு வர முடியலை’ன்னு வருத்தப்படுறாரு. ‘ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் இப்போ, உங்களைச் சந்திக்கத்தான் நான் வந்தேன்’னும் சொல்றாரு. பிரச்னையே இதுதான்... ரெண்டு வருஷமா எங்களை சந்திக்காம அவருக்கு அப்படியென்ன வேலை? கட்சி நிர்வாகிகள், தொண்டர்களோட அவருக்கு எந்தத் தொடர்பும் இல்லாம போயிடுச்சு. அவரோட திறமையில எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. ஆனா, அவருக்கு உழைப்பு பத்தலை. முதல்வர் பொறுப்புக்கு வந்த பின்னாடியும் ஸ்டாலின் கடுமையா உழைக்குறாரு. எடப்பாடியும் பன்னீரும்கூட ஓடியாடி வேலை பார்க்குறாங்க. ஏன்..? தள்ளாத வயசுல ஐயாவும் மாவட்டம், மாவட்டமா அலையறாரு.
ஆனா, சின்னய்யா வீட்டைவிட்டு வெளியவே வர்றது இல்லை. கட்சி நிர்வாகிகளோட வீட்டு விசேஷம், நல்லது கெட்டதுக்கும் தலைகாட்டுறது இல்லை. ஜி.கே.மணிதான் வர்றாரு. கேட்டா கொரோனாங்குறாங்க. ஒவ்வொரு முறையும் நாங்கதான் தேடித் தேடிப் போய் அவரைப் பார்க்கவேண்டியிருக்கு. கட்சியில அடுத்து அதிகாரத்துக்கு யார் வர்றாங்களோ, அவங்களோட தொடர்பு வெச்சுக்கத்தான் நிர்வாகிகள் விரும்புவாங்க. இந்த அடிப்படைகூட தெரியாம அரசியல் பண்ணுனா எப்படி? அவர் களத்துல இறங்கி வேலை பார்க்காத வரைக்கும் இந்தக் கட்சியில எதுவும் மாறப்போறதில்லை. மாவட்ட அளவுல பொதுக்கூட்டங்கள் நடத்துறதுக்கு, போஸ்டர் ஒட்டுறதுக்குன்னு எதுக்கும் கட்சித் தலைமை பணம் கொடுக்குறது இல்லை. எங்களோட கைக்காசைத்தான் செலவழிக்குறோம். மாநிலப் பொறுப்புல ஒவ்வொரு மாவட்டத்துலயும் ஆளுங்க இருந்ததால, அந்தச் செலவுகளை சுணக்கமில்லாம செஞ்சுக்கிட்டு வந்தாங்க. இப்ப அந்தப் பொறுப்புகளையும் பிடுங்கிட்டாங்க...’’ என்றவர்கள், கூட்டணி குறித்த கட்சியின் முடிவுகளால் தங்களுக்கு ஏற்படும் சங்கடங்கள் பற்றியும் கொட்டித் தீர்த்தார்கள்...

``2016 தேர்தல்ல தனியா போட்டியிட்டோம். அதை அப்படியே தொடர்ந்திருக்கணும். இல்லைன்னா, அதுக்கப்புறம் சேர்ந்த அ.தி.மு.க கூட்டணியிலயே இருந்திருக்கலாம். ஆனா, இப்போ மறுபடியும் பா.ம.க தலைமையில் தனி அணின்னு சொல்றாங்க. இதுகூட பிரச்னை இல்லை. ஆனா, இப்படியெல்லாம் சொல்லிட்டு திரும்பவும் அ.தி.மு.க-கூடவோ, தி.மு.க-கூடவோ கூட்டணிவெச்சா நாங்கதான் அசிங்கப்பட வேண்டியிருக்கும். அவங்களுக்கு என்ன... ரெண்டு ஐயாக்களும் கைகுலுக்கிட்டுப் போயிடுறாங்க. எங்களையில்ல கேலி, கிண்டல் பண்றாங்க.கடைசியா ஒண்ணு... பொங்கலுக்கு அப்புறம் சின்னய்யா சுற்றுப்பயணம் போகப்போறாருன்னு சொல்றாங்க. அதையாச்சும் வழக்கமான நிர்வாகிகள் சந்திப்பா நடத்தாம, யதார்த்த அரசியலைப் புரிஞ்சுக்கிட்டு தொண்டர்களைச் சந்திக்கணும்... இல்லைன்னா மாற்றம், முன்னேற்றம் எதுக்கும் வாய்ப்பு இல்லை!” என்று முடித்தார்கள்.
நிர்வாகிகளின் குமுறல்கள் குறித்து, பா.ம.க பொருளாளர் திலகபாமாவிடம் பேசினோம். ``நிர்வாகிகளுக்கு அப்படியொரு எதிர்பார்ப்பு இருக்கலாம். ஆனால், ஒரு மருத்துவராக இருந்துகொண்டு அவரே கொரோனா விஷயத்தில் அலட்சியமாக இருக்க முடியாது. சமூகத்தில் எல்லா இடங்களிலும் ஊழல் இருப்பதுபோல எங்கள் கட்சிக்குள்ளும் அது நுழைந்துவிட்டது. அதனால்தான், கட்சிப் பொறுப்புகளில் மறுசீரமைப்பு செய்துவருகிறோம். கூட்டணி மாறுகிறார்கள், செலவுக்குத் தலைமை பணம் கொடுக்கவில்லை போன்ற கருத்துகளை இரண்டு திராவிடக் கட்சிகள்தான் எங்கள் தொண்டர் களிடம் பரப்பி, அவர்களைக் குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கிவருகிறார்கள்’’ என்றார்.
ராமதாஸ் ஒரு கூட்டத்தில் தன் கட்சி நிர்வாகிகளைப் பார்த்து, “உங்கள் உதடுகளை இறுக்கமாக மூடிக்கொள்ளுங்கள்” என்றார். அவர்கள் உதடுகளை மூடிக்கொண்டாலும், உள்ளத்தில் இருப்பதைக் கொட்டித்தானே ஆக வேண்டும்?!