
பொங்கல், தீபாவளி சமயத்தில் தொழிற்சாலைகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த அழைப்பார்கள். நாங்களும் ஒவ்வொரு முறையும் வித்தியாசமான ஐடியாக்களைத் தயார்செய்து நிகழ்ச்சி நடத்துவோம்.
விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!
சில பத்தாண்டுகளுக்கு முன்பு கோவை மாநகர தேவாலயம் ஒன்றில் ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. வண்ண மெழுகுவத்திகள், ரோஜா மலர்கள் தாங்கி சிறுவன் ஒருவனும் அதில் பங்கேற்கிறான். அவன் தன் 10 வயதிலேயே படிப்போடு சேர்த்து வறுமையையும் பழகியிருந்தான். நெடிதுயர்ந்து நீண்டிருக்கும் அந்த தேவாலய வளாகத்தில் சிறுவர், சிறுமியருக்கு அப்பம் கொடுக்கின்ற நிகழ்வு அரங்கேறுகிறது. ரெஜினா என்கிற கன்னியாஸ்திரி அந்தச் சிறுவனைப் பாடச் சொல்கிறார். பாடி முடித்த அவனுக்கு ப்ளம் கேக் ஒன்றும், டிபன் பாக்ஸும் பரிசளிக்கிறார்.
ரயில்களில் மாங்காய்க் கீற்றுகள் விற்றும், செய்தித்தாள்களை வீடுகளுக்கு வீசியும் எனப் பல வேலைகள் செய்து வறுமையைத் துரத்தி, கல்வியை எட்டிப் பிடிக்க முயன்ற அந்தச் சிறுவனின் வாழ்வில் அது முக்கியமான தருணம். பின்னாள்களில், நண்பன் அவனைத் தன் மாமாவின் ஆர்கெஸ்ட்ராவில் சேர்த்து விடுகிறான். அங்கே அந்தச் சிறுவன், அப்துல் கலாமுக்காகவே ஒரு பாடல் எழுதிப் பாடுகிறான். சில ஆண்டுகளில் கோவை மாநகரத்துக்கு வரும் அப்துல் கலாம் `ஜான் சுந்தர் எங்கப்பா?' என விசாரிக்கிறார். ஜான் சுந்தர் தன் `இளைய நிலா' கலைக்குழுவில் `உச்சி வகிடெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி' பாடி சிவகுமாரை ஆச்சர்யப்பட வைக்கிறார். `வணக்கககம்... அன்பு உள்ளங்களேளேளே...' என எக்கோ ஒலிக்கும் ஆர்கெஸ்ட்ரா கலைஞர்களின் வாழ்வை `நகலிசைக் கலைஞன்' என்ற புத்தகத்தில் அசல் மாறாமல் பதிவு செய்திருக்கிறார். குழந்தைமையில் வறுமை சுமக்கும் மாணவர்களின் தனித்திறனை வளர்க்க `டமருகம்' என்ற கற்றல் பள்ளியை நடத்திவருகிறார். கவிஞர், குழந்தைகள் செயற்பாட்டாளர் ஜான் சுந்தர் எளியவர்களின் வாழ்வில் பெரிய சந்தோஷங்களை இட்டு நிரப்ப காலமறியாது உழைப்பவர். அவருடனான ஒரு நீண்ட உரையாடலிலிருந்து...

``திருநெல்வேலி பக்கம் மூவிருந்தாளிதான் அப்பாவின் சொந்த ஊர். ஆனால், வளர்ந்தது எல்லாமே மில்லும் மில் சார்ந்த இடமுமான கோயம்புத்தூர்தான். சின்ன வயசுலயே அப்பா தவறிட்டதால, சோப்பு நுரைல முட்டை விட்டு என் செட்டு பசங்க விளையாடுறப்போ, நான் அதை ரயிலேறி விக்க வேண்டிய சூழல்தான் இருந்தது. அம்மா மில் தொழிலாளி. எங்க பக்கத்துல மில் வேலைக்குப் போயிட்டு வர்றவங்க, தலைல இருக்குற பஞ்சைத் தட்டிவிட மாட்டார்கள். கை கால் எல்லாம் கழுவினாலும் தலைல மட்டும் பஞ்சு இருக்கும். அவங்களுக்கு அது கிரீடம் மாதிரி. இன்ஜினீயர், டீச்சர் என்பதுபோல `மில்லுக்காரங்க' என மில் தொழிலாளிகள் அடையாளப்படுத்தப்படுவதைப் பூரிப்பாக ஏற்றுக்கொள்வர். `எப்படியாவது மில்லு வேலையில சேர்ந்துருடா' என அம்மா என்னிடம் சொல்வார். ஆனால் நானோ வேறு ஒரு ஆளாக இருந்தேன். இந்த வேலைதான் செய்யவேண்டும் என்ற எண்ணம் சிறுவயதிலிருந்தே எனக்கு இருந்ததில்லை. அந்தச் சிறு வயதில் தேவாலயம் செல்கையில், அங்கு பாடுபவர்கள் என்னை வசீகரித்தனர். அதன்பிறகு பஞ்சாலைத் தொழிலாளியாக இருந்தபோது பகுதி நேரமாகப் பாட வாய்ப்பு கிடைத்துப் பாடத் தொடங்கிவிட்டேன். ஆர்வம் தாண்டி முறையாக இசைப் பயிற்சி எதுவும் பெறவில்லை. ரேடியோவில் பாடல்களைக் கேட்டு உள்வாங்கி அதன் மூலம் பாடுவதுதான். ஆனால், பாடுவதை விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். `உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே...' என்ற இளையராஜா பாடல்போல இயங்கத் தொடங்கினேன். அதன்பிறகு மில்லில் கட்டாய ஓய்வு தரப்பட்ட சமயத்தில், தனியாக இசைக்குழுவைத் தொடங்கினேன். என் குழுவில் பேனர் கட்டுவது, டிரம்ஸ் செட் செய்வது தொடங்கி கடைசியில் பேக் செய்வதுவரை நான் பெருமையுடன் செய்தேன். வழக்கமான முறையாக இல்லாமல் அறிமுகம் தொடங்கி அனைத்துமே தனித்துவமாக இருக்கவேண்டுமென விரும்புவேன். கோயில் விழாக்களின்போது நாங்களே ஐடியா கொடுத்து நிகழ்ச்சி நடத்துவது, ஸ்பெஷல் ஷோ எனக் கொஞ்சம் பிரபலமடைந்தது எங்கள் குழு.

பொங்கல், தீபாவளி சமயத்தில் தொழிற்சாலைகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த அழைப்பார்கள். நாங்களும் ஒவ்வொரு முறையும் வித்தியாசமான ஐடியாக்களைத் தயார்செய்து நிகழ்ச்சி நடத்துவோம். அங்கு வேலை செய்யும் பெண்களும் மேடையேறி நிகழ்ச்சியில் பங்குபெறுவார்கள். கொண்டாட்டம் நிறைந்திருக்கும். நிதர்சனம் வேறாக இருந்தது. பண்டிகைக்குத் தொழிலாளர்கள் ஒரு வாரம் விடுமுறை எடுத்துச் சென்றுவிட்டால் உற்பத்தி குறையும் என பயந்திருக்கிறார்கள். அதைத் தடுக்கவே இந்த ஏற்பாடு எனத் தெரிந்ததும் அதுபோன்ற நிகழ்ச்சிகளைத் தவிர்த்தேன். ஆர்கெஸ்ட்ரா என்பது எளியவர்களின் மகிழ்ச்சிக்காக, எளியவர்களே நடத்தும் இசை நிகழ்ச்சிதான். அதைக் கேட்பவர்கள், பாடுபவர்கள் இருதரப்பும் வாழ்க்கையின் ஒரே அலையில் இருப்பவர்கள்தாம். செவிவழி கேட்ட அந்தப் பாடலை நிகழ்த்தும் போது பார்ப்பது அவர்களின் விருப்பம். அந்த ஆர்கெஸ்ட்ரா மனிதர்களைப் பற்றி `இனிய வரம்' என்ற இதழில் ஒரு தொடர் எழுதக் கோரி நண்பர் ஒருவர் கேட்டுக்கொண்டார். முதல் சில பகுதிகள் சிவகுமார் பாராட்டியது, அப்துல்கலாம் நெகிழ்ந்தது என எனது பராக்கிரமங்களையே எழுதினேன். இப்படி எழுதினால் வாய்ப்பு கிடைக்கும் என மனம் சொன்னது. இதையே எழுதுவது எப்படி சரியென அதே மனமே கேள்வி கேட்டது. இசையை முறையாகக் கற்காத; இளையராஜா, எம்.எஸ்.வி என இவர்களைக் கேட்பதன் வழிமட்டுமே இசையறிவு பெற்ற கலைஞர்களின் உலகை ஆவணப்படுத்த விரும்பினேன். அதற்குக் காரணமாக அமைந்தவர் கலைச்செல்வன். லோக்கல் ஆர்கெஸ்ட்ராகாரர்களின் சூப்பர் ஸ்டாரும் உலகநாயகனும் அவர்தான். பாடகர் மனோ அவரை மேடையேறிப் பாராட்டியது, பெரிய பெரிய பின்னணிப் பாடகர்கள் கோவை வருகையில், `இங்கு கலைச்செல்வன் யாரெனக் கேட்பது?' எனப் பல சரித்திரக் குறிப்புகளைத் தனக்கெனக் கொண்டிருந்தார். அவர் இறந்தபோது அவரைப் பற்றி யாதொரு பதிவும் இல்லை. மாநகரம் தன் இயல்பில் இருந்தது. ஏன் அவரின் இழப்பு கவனம் பெறாமல் போனது. வெறும் நகலெடுத்துப் பாடுபவர்கள்தானே இவர்கள் என்ற எண்ணமா? மூட்டை சுமப்பவர்கள், நடைபாதை வியாபாரிகள், தொழிலாளிகள் என்று பலருக்கும் பிடித்த பாடல்களை அவர்களுக்காகப் பாடுபவர்களல்லவா இவர்கள். மேடையில் ஏறி எளியவர்களின் மகிழ்ச்சி, கொண்டாட்டம், அழுகை எனப் பலவற்றையும் பங்குபோட்டவர்கள் அல்லவா அவர்கள். ஏதோ பொறி தட்டியது. அடையாளம் இழந்த, விதி விளையாடிய பல ஊர்களிலுள்ள நகலிசைக் கலைஞர்கள் பலரையும் தேடி அலைந்து திரிந்து அவர்கள் வாழ்வைப் பதிவு செய்தேன். பலரின் வாழ்வும் ஒன்றுபோலவே இருந்தது. அந்த நேரத்தில் பொருளாதார ரீதியாகக் கடுமையாக பாதிக்கப்பட்டேன். பலரும் நான் தொழிலைக் கெடுத்துக்கொண்டு விட்டதாகக் கூறினர். அத்தனையும் மீறி அதைச் செய்தேன். `நகலிசைக் கலைஞன்' புத்தகம் வெளியானது. அது என் தனித்த அடையாளமானது. பலரும் அதைப் படித்து என்னிடம் பேசி நெகிழ்ந்தனர்.

அந்த நேரத்தில் ஒரு அரசுப் பள்ளிக்குச் சென்றேன். அங்கு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பிசகில்லாமல் பாடினார் ஒரு மாணவி. அவருக்கு இசையில் நல்வாய்ப்பு உண்டு என உணர்தேன். அவரின் பெற்றோர் தினக்கூலிகள். அவர்களைச் சந்திக்க விரும்பினேன். `உங்களை வந்து பாத்துட்டுப் போனா ஒரு நாள் கூலி போயிடும் சார்' என்றார் அவர். கல்வியைத் தாண்டி இந்தக் குழந்தைகளின் திறமைகளை ஊக்குவிக்க ஒரு வழி செய்யவேண்டும். அப்படிச் செய்தால் அவர்கள் அளப்பரிய உயரம் செல்வார்கள் எனத் தோன்றியது. முன்பு பாட்டுப் பள்ளி ஒன்று நடத்திக்கொண்டிருந்தேன். அதைத் தாண்டி ஒன்று உருவாக்க நினைத்தேன். `குக்கூ' சிவராஜ், `அதைச் செய்யுங்கள்!' என ஊக்கம் தந்தார். ரவீந்திரன் சார் பெரும் உறுதுணையாக நின்றார். பள்ளி தொடங்க பலரும் உதவ முன்வந்தனர். `டமருகம்' உருவானது. அங்கு பொம்மை செய்வது, வரையச் செய்வது, இசை எனப் பல கலைகள் குறித்த வகுப்புகள் நடக்கின்றன. நுண்கலைகள் சார்ந்த பயிற்சிப் பட்டறைகள் நடத்துகிறோம். எளியவர்களுக்காக நாம் இறங்கிப்போகிற தருணங்கள் எவ்வளவு உன்னதம் வாய்ந்தவை என்பது புரிந்தவர்கள் உடனிருக்கிறார்கள்.
கடவுள் நம் எல்லோரிடத்திலும் ஒரு பென்சில் பாக்ஸைக் கொடுத்திருக்கிறார். அதில் குட்டை, நெட்டை என இருந்தாலும் அந்தப் பென்சில்களை எல்லாம் கூர்மையாகச் சீவி வைத்துக்கொள்ள வேண்டும். பேப்பர் எப்போது வேண்டுமானாலும் கிடைக்கலாம். அதற்காக நம் குழந்தைகளை வரையத் தயார்படுத்தவேண்டும்.''
நிறைவான புன்னகையுடன் சொல்கிறார் ஜான் சுந்தர். அந்தக் குழந்தைகளின் பென்சில்கள் வரைய வானமே கிடைக்கட்டும்.