“ஐ.எஃப்.எஸ்-ஸுக்கு எதிரா ஆதாரம் இருக்கு... தப்பிக்க முடியாது!” - ‘டீம் லீடர்’ சரவணகுமார் வாக்குமூலம்

ஜூ.வி ஆக்ஷனால் சிக்கும் கோடீஸ்வர பிரதர்ஸ்...
படங்கள்: வெங்கடேசன், பரத்வாஜ்
வேலூர், ‘எல்.என்.எஸ் ஐ.எஃப்.எஸ்’ நிதி நிறுவன பண மோசடி விவகாரத்தில், நீதிமன்ற உத்தரவையடுத்து போலீஸாரின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள் பாய ஆரம்பித்திருக்கின்றன. இந்நிறுவனத்தின் முறைகேடுகள் குறித்து, கடந்த சில வாரங்களாகவே ‘ஜூனியர் விகடன்’ மற்றும் ‘நாணயம் விகடன்’ இதழ்களில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில், இந்த நிறுவனத்தின் மீது புகார் தெரிவித்து, கார்த்திக் என்பவர் சார்பில் வழக்கறிஞர் இன்ஃபேன்ட் தினேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், ‘‘8-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட வேண்டும்’’ என்று காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து கடந்த 5-8-2022 அன்று வழக்கு பதிவுசெய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட 21 இடங்களிலுள்ள ஐ.எஃப்.எஸ் நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தினர். நிறுவனத்தின் இயக்குநர்களான லட்சுமி நாராயணன், ஜனார்த்தனன், வேத நாராயணன், மோகன்பாபு மற்றும் டீம் லீடர்கள் ஜெகநாதன், சரவணகுமார் ஆகியோரது வீடுகளிலும் போலீஸ் சோதனை நடத்தியது. இதில் 220 ஆவணங்கள், 13 ஹார்டு டிஸ்க்குகள், 5 லேப் டாப்கள், 14 செல்போன்கள், 40 சவரன் தங்கம், ஒரு கார், 1.05 கோடி ரூபாய் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

கோடிக்கணக்கில் முதலீடு...
இதற்கிடையே பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சோதனை நடத்திக்கொண்டிருந்த நேரத்தில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டீம் லீடர் சரவணகுமாரை நேரில் சந்தித்து ‘ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனத்தின் மோசடிகள்’ குறித்துக் கேட்டோம். ``என்னுடைய சொந்த ஊர் வேலூர். தொழில் நிமித்தமாக நான் காஞ்சிபுரம் வந்து விட்டேன். ‘எல்.என்.எஸ் ஐ.எஃப்.எஸ்’ நிதி நிறுவனத்தின் இயக்குநர்களான லட்சுமி நாராயணன், ஜனார்த்தனன், வேத நாராயணன், மோகன்பாபு ஆகியோரை எனக்கு நன்றாகத் தெரியும். கடந்த 2017-ம் ஆண்டு மோகன்பாபு என்னைச் சந்தித்தார். அப்போது, ‘ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம்தோறும் 8,000 ரூபாய் வட்டி கிடைக்கும்’ என்ற பிசினஸ் குறித்து விரிவாகக் கூறினார். அதை நம்பி, நானும் 2 லட்சம் ரூபாயை முதலீடு செய்தேன். மோகன்பாபுவும் தான் கூறிய படியே மாத வட்டியை எனக்குக் கொடுத்து வந்தார். இதையடுத்து, இது குறித்து எனக்குத் தெரிந்தவர்களிடம் கூறி ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தில் ஏராளமானவர்களைப் பண முதலீடு செய்யவைத்தேன்.
தங்கள் நிறுவனச் செயல்பாடுகள் குறித்தும், முதலீட்டாளர்களின் சந்தேகங் களுக்குப் பதில் சொல்லும் வகை யிலும், ஜனார்த்தனனும் லட்சுமி நாராயணனும் ஆன்லைனிலும் விளக்கம் அளித்துவந்தனர். இதைப் பார்த்து உலகம் முழுவ திலுமிருந்து ஏராளமானவர்கள் முதலீடு செய்யத் தொடங்கினர். நானும் நெமிலியைச் சேர்ந்த ஜெகநாதனும் பொதுமக்களிட மிருந்து கோடிக்கணக்கில் முதலீடு பெற்றுக்கொடுத்தோம். இதன் மூலம் எங்களுக்கும் நல்ல வருமானம் கிடைத்தது. நான் மட்டுமே சில கோடி ரூபாய்க்கு மேல் பிசினஸ் செய்துகொடுத் திருக்கிறேன். என் மூலமாகத்தான் சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த கார்த்திக் உட்பட 40 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் பேர் இந்த நிறுவனத்தில் சேர்ந்தனர். கார்த்திக் மட்டும் 18 கோடி ரூபாய் பிசினஸ் செய்திருக்கிறார்.

ஜூலையில் தொடங்கிய சிக்கல்!
ஜனார்த்தனன், லட்சுமி நாராயணன், வேதநாராயணன் மூவரும் உடன்பிறந்த சகோதரர்கள். மோகன்பாபு மட்டும் இவர்களுடைய சித்தப்பா மகன். `ஐ.எஃப்.எஸ்’ என்ற பெயரில் அரசு நிறுவனம் ஒன்று ஏற்கெனவே இருப்பதால், அதே பெயரில் நிறுவனத்தைப் பதிவுசெய்வதில் தொடக்கத்தில் சிக்கல் ஏற்பட்டது. அதனால், லட்சுமி நாராயணன் தன் தந்தை சுந்தரம் பெயரையும் சேர்த்து, ‘எல்.என்.எஸ்., ஐ.எஃப்.எஸ்’ என நிறுவனத்தின் பெயரைப் பதிவுசெய்தார். ஒவ்வொரு மாதமும் பொதுமக்களிடமிருந்து பணத்தை வசூலித்து, நான் மோகன்பாபுவின் அக்கவுன்ட் டுக்கு அனுப்பிவைப்பேன். என்னைப் போல நூற்றுக்கும் மேற்பட்ட டீம் லீடர்கள் இருக்கின்றனர். இயக்குநர்கள் தான் கமிஷன் மற்றும் வட்டி பணத்தை டீம் லீடர்களின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைப்பார்கள். பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு, கடந்த ஜூன் மாதம் வரை சரியாக வட்டியைக் கொடுத்துவந்தனர். ஜூலை மாதத்துக்குரிய பணத்தைக் கொடுக்கவில்லை. பிரச்னையைச் சமாளிப்பதற்காக டீம் லீடர்களாக இருப்பவர்களில் சிலர் தங்களது சொந்தப் பணத்தை முதலீட் டாளர்களுக்கு வட்டியாகக் கொடுத்தோம்.
ஜூலை 23-ம் தேதி பாண்டிச்சேரிக்கு நான் சென்றிருந்தபோது மோகன்பாபுவைச் சந்தித்தேன். அதன் பிறகு ஒரே நேரத்தில் ஜனார்த்தனன், லட்சுமி நாராயணன், வேதநாராயணன், மோகன்பாபு ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். தங்களது செல்போன்களையும் சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டனர். இதனால் முதலீட்டாளர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் டீம் லீடர்கள் தவித்துக்கொண்டிருந்தோம். சிலர் எங்கள்மீது காவல் நிலையங்களில் புகாரளித்தனர். வேறு வழியின்றி என்னைப் போன்ற டீம் லீடர்களும் ஏஜென்ட்டுகளும் தலைமறைவாகிவிட்டோம். இயக்குநர்கள்மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததால், நாங்களே நீதிமன்றத்தை நாடினோம். ஆனால், காவல்துறையினர் எங்களையே குற்றவாளிகளாகக் கருதுகிறார்கள். ஆனால், நான் மோகன்பாபுவுக்குப் பணம் அனுப்பியதற்கான ஆதாரம் இருக்கிறது. அதை நீதிமன்றத்திலும் சமர்ப்பித்திருக்கிறேன். அதனால் அவர்கள் தப்பிக்க முடியாது” என்றார்.

ஆபீஸர்ஸ் முதல் அரசியல்வாதிகள் வரை!
பெயர் குறிப்பிட விரும்பாத ஏஜென்ட்டுகள் சிலர் நம்மிடம் பேசியபோது, `` மக்களிடையே நிறுவனத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவ தற்காக, ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நடிகர் மாதவன், திண்டுக்கல் லியோனி என வி.வி.ஐ.பி-க்களை ஐ.எஃப்.எஸ் நிறுவன நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்ள வைத்தனர். அதிக வட்டி ஆசையில், பானி பூரி விற்பவரில் ஆரம்பித்து காவல்துறை உயரதிகாரிகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என முக்கியப் பிரமுகர்களும் ஏராளமான பணத்தை முதலீடு செய்துள்ளனர். இந்த வகையில், முதலீடு செய்த தொகை 40 ஆயிரம் கோடியைத் தாண்டும்.
2022-ம் ஆண்டில்தான் ஐ.எஃப்.எஸ் நிறுவனம் பெரிய அளவில் வளர்ச்சியடைந்தது. இந்த நிறுவனத்தை நடத்தியவர்கள், ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் உள்ளிட்ட பிரபலங் களோடு நெருக்கமாக இருக்கின்றனர். முதல்வர் குடும்பத்து உறுப்பினர் ஒருவரின் பெயரும் அடிபடுகிறது. எனவேதான், இந்தப் பிரச்னையில் இத்தனை காலம் ஆர்வம் காட்டாத அரசு, இப்போது டி.ஜி.பி மூலமே அறிக்கை வெளியிட வைத்திருக்கிறது. காவல்துறை அதிகாரிகள், தொழிலதிபர்கள், சமுதாயப் பின்னணிகொண்ட தலைவர்கள் மற்றும் ரௌடிகள் என ஒரு டீமே இந்த நிறுவனத்தின் பின்னணியில் இருப்பதால், ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவன மோசடிகள் குறித்து வெளிப்படையாகப் பேச முடியவில்லை. மீறிப் பேசினால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்” என்று ‘ஷாக்’ கொடுத்தனர்.
*****
வாக்கி டாக்கி... பவுன்சர்கள் படை!
குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் கோடீஸ்வர பிரதர்ஸின் சொந்த ஊர் வேலூர், சத்துவாச்சாரியிலுள்ள வள்ளலார் பகுதி. ஆயில், டயர் பிசினஸ்தான் இவர்களின் ஆரம்பகாலத் தொழில். லட்சுமி நாராயணன் எம்.பி.ஏ படித்தவர். `பங்குச் சந்தையில் கில்லாடி’ எனப் பெயர் பெற்றவர். வேதநாராயணன் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். மூத்த அண்ணன் ஜனார்த்தனன், ஆங்கிலத்தில் கவர்ச்சிகரமாகப் பேசும் திறன்பெற்றவர். மோகன்பாபு இன்ஜினீயர். இவர் வெளிநாட்டில் பணியாற்றிவிட்டு வேலூர் பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் மாதச் சம்பளத்துக்கு வேலை பார்த்தவர். சகோதரர்களான நான்கு பேரும் சொகுசு பங்களாக்களில் வசித்துவருகின்றனர். இவர்களின் வீடு, அலுவலகங்கள் அனைத்திலும் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவர்களை அவ்வளவு எளிதில் யாரும் சந்தித்துவிட முடியாது. வாக்கி டாக்கி மூலம் தகவலைத் தெரிவித்து, சில கட்ட சோதனைகளுக்குப் பிறகே சந்திக்க வாய்ப்பு வழங்கப்படும். எப்போதும் பவுன்சர்கள் படையோடுதான் இந்தக் கோடீஸ்வர பிரதர்ஸ் வலம்வந்துள்ளனர். ஆடி, ஜாகுவார் போன்ற விலையுயர்ந்த சொகுசு கார்களையே நால்வரும் பயன்படுத்திவந்திருக்கின்றனர். காட்பாடி காந்தி நகரிலிருக்கும் நட்சத்திர ஹோட்டலில்தான் நான்கு பேரும் அடிக்கடி சந்தித்து பிசினஸ் தொடர்பாகப் பேசிக்கொள்வார்கள்!