
தாளவாடி இன்ஸ்பெக்டருடன் ஆடியோவில் பேசும் பெண் ஒரு போலீஸ் இன்ஃபார்மர். மாதேவா மீது கடந்த பத்து நாள்களில், சுமார் ஆறு டன் அரிசி கடத்தியதற்காக இரண்டு முறை வழக்கு பதியப்பட்டிருக்கிறது
ஈரோடு மாவட்டம், தமிழக - கர்நாடக எல்லையில் மலைப்பகுதியில் அமைந்திருப்பது தாளவாடி தாலுகா. அண்மைக்காலமாக இங்கிருந்தும் ஆசனூர் வழியாகவும் கர்நாடகாவுக்கு அரிசி கடத்தப்படுவது அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசியை மொத்தமாக வாங்கி, அதை ரைஸ் மில்களில் பாலிஷ் செய்து, லாரிகள் மூலம் கர்நாடக மாநிலத்துக்கு கடத்திச் செல்கின்றனர் எனக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்த நிலையில், ரேஷன் அரிசி கடத்துவோருக்கும், போலீஸாருக்கும் கடத்தலில் தொடர்பிருப்பதாக இரண்டு ஆடியோக்கள் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தாளவாடி அருகேயுள்ள மகாராஜன்புரம் வனப்பகுதியில் இருக்கும் சோதனைச்சாவடி வழியாக வந்த லாரி ஒன்றை தாளவாடி போலீஸார் சோதனையிட்டனர். அதில், 3,500 கிலோ இலவச ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து லாரியுடன் ரேஷன் அரிசி மூட்டைகள் கைப்பற்றப்பட்டு, ஈரோடு மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக தாளவாடி பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார், மனோஜ் ஆகிய இரண்டு பேரை போலீஸார் கைதுசெய்தனர். பின்னர் இவர்கள் இருவரும் ஸ்டேஷன் பெயிலில் விடுவிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், பெயிலில் விடுவிக்கப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவேண்டி, அரிசி கடத்தும் கும்பலின் தலைவனான மாதேவா என்பவருடன் ஈரோடு உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.ஐ சக்திவேல் செல்போனில் பேசியிருக்கிறார். இவர்கள் இருவரும் பேசிய அந்த ஆடியோ, சமூக வலைதளங்களில் வெளியானது. அதில், தாளவாடி இன்ஸ்பெக்டர் தனது ஆட்களைக் கைது செய்யாமலிருக்க, 15 நாள்களுக்கு முன்பாக 14,000 ரூபாய் பணத்தை இன்ஸ்பெக்டருக்குக் கொடுக்க ஒரு தனிநபரிடம் ஒப்படைத்ததாகவும் ஆனால், இன்ஸ்பெக்டர் செல்வம் வேண்டுமென்றே தன்னுடைய ஆட்களில் இரண்டு பேரை கைதுசெய்திருக்கிறார் என்றும் பேசுகிறார். மேலும், அவர்களில் ஒருவனுக்கு இன்னும் பத்து நாள்களில் கல்யாணம் நடக்கவிருக்கிறது. அவனை விட்டுவிடுங்கள். என் மீதும் கேஸ் போடாதீர்கள் என்றும் பேரம் பேசியிருக்கிறார்.
அதற்கு பதிலளிக்கும் எஸ்.ஐ சக்திவேல், “நம்ம மாஜிஸ்ட்ரேட் நல்லவர். அவரிடம் பேசி பெயில் வாங்கிவிடலாம். நீயும் ரெண்டு பசங்களும் மட்டும் அரெஸ்ட் ஆகுங்க” என்று பதிலளிக்கிறார். மற்றொரு ஆடியோவில், தாளவாடி இன்ஸ்பெக்டர் செல்வம், ‘பிடிபட்ட கடத்தல் லாரியை விடுவிப்பதற்கு உதவுவதாக’ பெண் ஒருவருக்கு வாக்கு கொடுக்கிறார். மேலும், ஆடியோவை ரிலீஸ் செய்யக் கூடாது என்று கோரிக்கையும் வைக்கிறார். இந்த ஆடியோ விவகாரம் மூலம் சட்டம்-ஒழுங்கு மற்றும் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு அரிசி கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதும், அவர்களுடன் கைகோத்தபடியே தாளவாடியில் ரேஷன் அரிசிக் கடத்தல் ஜோராக நடைபெறுகிறது என்பதும் பேசுபொருளாகியிருக்கிறது.

இது குறித்து விளக்கம் பெறுவதற்காக மாவட்ட எஸ்.பி சசிமோகனைத் தொடர்பு கொண்டோம். அவர் பேசும்போது, “தாளவாடி இன்ஸ்பெக்டருடன் ஆடியோவில் பேசும் பெண் ஒரு போலீஸ் இன்ஃபார்மர். மாதேவா மீது கடந்த பத்து நாள்களில், சுமார் ஆறு டன் அரிசி கடத்தியதற்காக இரண்டு முறை வழக்கு பதியப்பட்டிருக்கிறது. மேலும், அடிதடி வழக்கிலும் அவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். எனவே, இன்ஸ்பெக்டர் செல்வம் அரிசிக் கடத்தலுக்கு துணை போனார் என்று சொல்லிவிட முடியாது. இருப்பினும், ஆடியோ விவகாரம் குறித்து துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறேன். இன்ஸ்பெக்டர் செல்வம் மீது தவறு இருப்பது கண்டறியப்பட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி பாலாஜி பேசியபோது, “மாதேவாவுடன் ஆடியோவில் பேசிய உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.ஐ சக்திவேல், கடத்தலில் ஈடுபட்டவர்களை ஸ்டேஷனுக்கு வந்து கையெழுத்து போடுமாறுதான் கேட்டிருக்கிறார். இருப்பினும், எஸ்.ஐ சக்திவேலிடம் முழுமையான விளக்கம் அளிக்குமாறு கேட்கப்பட்டிருக் கிறது” என்றார் சுருக்கமாக.
கடத்தல்காரர்களிடம் காவல்துறை டீலிங்கில் இருக்கும் வரை ஒருபோதும் ரேஷன் அரிசிக் கடத்தலுக்குத் தீர்வு வராது!