அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

சென்னையின் டாப் ரௌடிகள் லிஸ்ட் ரெடி! - வேட்டைக்குத் தயாராகும் போலீஸ்...

டாப் ரௌடிகள் லிஸ்ட் ரெடி!
பிரீமியம் ஸ்டோரி
News
டாப் ரௌடிகள் லிஸ்ட் ரெடி!

கடைசியாகக் கைதுசெய்யப்பட்டுள்ள ‘காக்கா தோப்பு’ பாலாஜி மீது ஏழு கொலை வழக்குகள், 20 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 52 வழக்குகள் உள்ளன.

சென்னை பெருநகர போலீஸ் கமிஷனராக சங்கர் ஜிவால் பதவியேற்றபோதே ‘ரௌடிகளுக்கு சென்னையில் இடமில்லை’ என்று எச்சரித்திருந்தார். அடுத்த சில தினங்களிலேயே தொடங்கியது ரெளடிகள் வேட்டை... தென்சென்னையின் பிரபல தாதா ‘சிடி’ மணி என்கிற மணிகண்டனை போலீஸார் துப்பாக்கிமுனையில் வளைத்தனர். அடுத்தடுத்த நாள்களில் அவரின் நண்பரான வடசென்னையின் ரெளடி ‘காக்கா தோப்பு’ பாலாஜியையும் கைதுசெய்தது போலீஸ். இதில் பாலாஜி தப்ப முயன்றதில், அவரது கை கால்கள் உடைந்தன. “இவர்களுடன் முடிந்துவிடவில்லை போலீஸின் வேட்டை... 25-க்கும் மேற்பட்ட ரெளடிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு, அவர்களைக் கைதுசெய்ய ஸ்கெட்ச் போடப்பட்டுள்ளது” என்கிறார்கள் காவல்துறையின் உயரதிகாரிகள். யார் அவர்கள்? அந்த ரெளடிகளின் ஜாதகம் என்ன? விசாரணையில் இறங்கினோம்...

கடைசியாகக் கைதுசெய்யப்பட்டுள்ள ‘காக்கா தோப்பு’ பாலாஜி மீது ஏழு கொலை வழக்குகள், 20 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 52 வழக்குகள் உள்ளன. முத்தையால்பேட்டை காவல் நிலைய ஹிஸ்டரி ரெக்கார்டில் ‘ஏ’ ப்ளஸ் ரௌடிப் பட்டியலில் பாலாஜியின் பெயர் உள்ளது. வட சென்னையில் கொலை, ஆள் கடத்தல், வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து எனத் தொடங்கிய பாலாஜி, ஒருகட்டத்தில் துறைமுகம் பகுதியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். கன்டெய்னர் மாமூல் தொடங்கி செம்மரக் கடத்தல் வரை பாலாஜியின் நெட்வொர்க் ஆக்டிவாகவே இருந்தது. எட்டு முறை குண்டர் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள பாலாஜி, இந்த முறை சட்டத்தின் பிடியிலிருந்து தப்புவது கடினம் என்கிறார்கள் போலீஸார்!

‘சிடி’ மணி
‘சிடி’ மணி
‘காக்கா தோப்பு’ பாலாஜி
‘காக்கா தோப்பு’ பாலாஜி

சவால்விடும் `சம்பவ’ செந்தில்!

‘சிடி’ மணி மற்றும் ‘காக்கா தோப்பு’ பாலாஜி ஆகியோர் சென்ற கார் மீது வெடிகுண்டு வீசிய வழக்கு ‘சம்பவ’ செந்தில்மீது இருக்கிறது. தென்மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில், வடசென்னையின் பிரபல ரௌடி ஒருவருக்கு வழக்கறிஞராகப் பணியாற்றினார். அதன் பிறகுதான் ரௌடியிசத்தில் கால்பதித்தார். வழக்கறிஞர் என்பதால் சட்டத்தில் உள்ள ஓட்டைகள் மூலம் ‘முடிந்தால் என்னைப் பிடித்துப் பாருங்கள்!’ என்று போலீஸாருக்கு சவால் விட்டுவருகிறார். போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டையிலிருக்கும் செந்திலின் வலது மற்றும் இடது கரமாக இருக்கிறார்கள் ஈசாவும் எலியும்!

சிட்லப்பாக்கம் ‘சீசிங்’ ராஜா

சென்னை சிட்லபாக்கத்தைச் சேர்ந்த ராஜா என்கிற ‘சீசிங்’ ராஜா மீது ஆள் கடத்தல், மிரட்டிப் பணம் பறித்தல் உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. எட்டு முறை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார். 2010, ஏப்ரல் மாதம் ரெளடி சின்னாவின் வழக்கறிஞர் பகவத் சிங் கொலை வழக்கில் பூந்தமல்லி போலீஸார் ராஜாவைக் கைதுசெய்தனர். 2021, ஜனவரி மாதம் குரோம்பேட்டை ஐஸ்வர்யா நகரைச் சேர்ந்த தொழிலதிபர் சரவணன் என்பவரைத் துப்பாக்கிமுனையில் கடத்திச் சென்று, மிரட்டி 10 லட்சம் ரூபாய் பணத்தைப் பறித்தார். காவல்துறையில் காவலர்கள் முதல் உயரதிகாரிகள் வரை நட்பில் இருந்துவரும் ராஜா மீது ஆந்திராவிலும் வழக்குகள் உள்ளன.

 ‘கல்வெட்டு’ ரவி
‘கல்வெட்டு’ ரவி
‘எண்ணூர்’ தனசேகர்
‘எண்ணூர்’ தனசேகர்

பா.ஜ.க-வில் இணைந்த ‘கல்வெட்டு’ ரவி

புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஹிஸ்டரி ரெக்கார்டில் இடம்பெற்றுள்ள ‘கல்வெட்டு’ ரவி என்கிற ரவிசங்கர் மீது 35 கொலை வழக்குகள் உள்ளன. வடசென்னை யின் பிரபல ரெளடியான ரவி, சென்னை முழுக்க பந்தாவாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் மீதான கொலை வழக்குகளில் கேளம்பாக்கம் கன்னியப்பன் கொலை, தண்டையார்பேட்டை வீனஸ் கொலை, ராயபுரம் பிரான்சிஸ் கொலை, பொக்கை ரவி கொலை, வண்ணாரப்பேட்டை சண்முகம் கொலை ஆகியவை முக்கியமானவை. ஆறு முறை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட ரவி, சமீபத்தில் தான் பா.ஜ.க-வில் இணைந்தார்.

கடத்தல் ஸ்பெஷலிஸ்ட் ‘எண்ணூர்’ தனசேகர்

எண்ணூர் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ‘எண்ணூர்’ தனசேகரன் மீது ஏழு கொலை வழக்குகள் உட்பட 54 வழக்குகள் உள்ளன. வடசென்னையில் பிரபல ரௌடிகள் கறுப்பு ராஜா, பெரியமுத்து ஆகிய கொலை வழக்குகளில் தனசேகரின் பெயர் பரபரப்பாகப் பேசப்பட்டது. தென்மாவட்டத்தைச் சேர்ந்த இவர், சென்னை துறைமுகத்தில் கடத்தல் கும்பலிடமிருந்தே பொருள்களைக் கடத்துவதில் ஸ்பெஷலிஸ்ட் என்கிறார்கள் போலீஸார். தனசேகருக்கும் வியாசர்பாடியைச் சேர்ந்த பிரபல ரௌடி ‘பாம்’ சரவணனுக்கும் இடையே நீண்ட காலமாக முன் விரோதம் இருக்கிறது. தனசேகரன் வீட்டில் வெடிகுண்டு வீசி அவரைக் கொலை செய்யவும் சரவணன் டீம் ஒருமுறை முயன்றது.

ஓட்டேரி கார்த்திக்
ஓட்டேரி கார்த்திக்
பெரும்பாக்கம் ராஜேஷ்
பெரும்பாக்கம் ராஜேஷ்

லட்சங்களில் கொட்டும் மாமூல்!

காஞ்சிபுரம் மாவட்டம், பழந்தண்டலத்தைச் சேர்ந்த ரௌடி வைரம் மீது கொலை, கொலை முயற்சி எனப் பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்புதூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு தோற்றுப்போனார். ஸ்ரீபெரும்புதூரில் கோடிகளில் புழங்கும் பழைய இரும்புத் தொழில், வைரத்தின் கண்ணசைவு இல்லாமல் நடக்காது. இதன் மூலம் தினசரி மாமூலே லட்சங்களில் கொட்டும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். வைரத்தின் வலதுகரமாக ‘தாம்பரம்’ ராஜேஷ் இருக்கிறார். ராஜேஷ் மீதும் 10 வழக்குகள் உள்ளன. ராஜேஷிடமிருந்து ‘தொழில்’ கற்றவர்கள்தான் ‘நெடுங்குன்றம்’ சூர்யா, ‘ஓட்டேரி’ கார்த்திக், ‘சீசிங்’ ராஜா ஆகியோர்.

இளம் தலைமுறை ரௌடிகள்

இவர்கள் தவிர வளர்ந்துவரும் ரௌடிகள் பட்டியலில் ‘நெடுங்குன்றம்’ சூர்யா, ‘ஓட்டேரி’ கார்த்திக், ‘பெரும்பாக்கம்’ ராஜேஷ், சைலு என்கிற சைலேந்திரன் ஆகியோர் உள்ளனர். இவர்கள் அனைவரும் பிரபல ரெளடிகளிடம் கூலிப்படை யினராக வேலை பார்த்தவர்கள். தற்போது இவர்கள் ஒவ்வொருவருக்கும் தனி டீம் உண்டு. கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல், கொலை, கொள்ளை களில் ஈடுபடுவதுடன் கஞ்சா, போதை மாத்திரைகள், ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்துவதிலும் இவர்களுக்குள் கடும் போட்டி நிலவுகிறது.

சென்னையின் டாப் ரௌடிகள் லிஸ்ட் ரெடி! - வேட்டைக்குத் தயாராகும் போலீஸ்...

அதேசமயம் சென்னையைக் கலக்கிக்கொண்டிருந்த பிரபல ரௌடிகள் நாகேந்திரன், ‘கேட்’ ராஜேந்திரன், பினு, ராதாகிருஷ்ணன், தட்சணாமூர்த்தி, ‘நெடுங்குன்றம்’ சூர்யா ஆகிய முன்னாள் ரௌடி களின் சாம்ராஜ்யம் சரிந்துவிட்டது. சிலர் சிறையிலும், சிலர் உடல்நலம் மோசமடைந்தும் உள்ளனர்.

“ரெளடிகளைக் கைதுசெய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்?” என்று சென்னை போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். “நெடுங்குன்றம் சூர்யா, அரும்பாக்கம் ராதா, டிபி சத்திரம் தட்சணாமூர்த்தி, ஓட்டேரி கார்த்திக், தாம்பரம் ராஜேஷ் ஆகியோர் தற்போது கமிஷனர் அறிவிப்புக்கு முன்னரே கைது செய்யப்பட்டுவிட்டார்கள். புதிய கமிஷனர் பொறுப்பேற்ற பிறகு சிடி மணி, காக்காதோப்பு பாலாஜி ஆகியோரைக் கைதுசெய்துள்ளோம். மீதமுள்ளவர்களையும் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. எண்ணூர் தனசேகர் டெல்லியில் தலைமறைவாக இருக்கிறார். சீசிங் ராஜா ஆந்திராவில் இருக்கிறார். சம்பவ செந்தில், அவனின் கூட்டாளிகள் ஈசா, எலி மற்றும் பாம் சரவணன், கல்வெட்டு ரவி எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. தேர்தலில் போட்டியிட்ட குன்றத்தூர் வைரமும் எஸ்கேப் ஆகிவிட்டார். பெரும்பாக்கம் ராஜேஷ் கடந்த வாரம்தான் சிறையிலிருந்து வெளியே வந்தான். வந்தவுடன் நாட்டு வெடிகுண்டுகளை வீசி இரண்டு கொலை செய்திருக்கிறான். சைலு என்கிற சைலேந்திரன் கோயமுத்தூரில் பதுங்கியிருக்கிறான். இவர்கள் தவிர இளம் தலைமுறை ரௌடிகள் என 25 பேர் கொண்ட பட்டியல் தயாராக இருக்கிறது. அனைவரையும் விரைவில் கைதுசெய்வோம்” என்றார்.

***

ஈகோ மோதலில் போலீஸ்!

சென்னை மத்திய குற்றப்பிரிவில் ரெளடிகள் ஒழிப்புப் பிரிவு செயல்பட்டுவருகிறது. இது சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளது. காவல் நிலையங்களின் ஹிஸ்டரி ரெக்கார்டில் இருக்கும் ரெளடிகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுப்பது ரெளடிகள் ஒழிப்புப் பிரிவின் பணி. இன்னொரு பக்கம் டி.ஜி.பி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வுப் பிரிவு செயல்பட்டுவருகிறது. இவர்களும் ரௌடிகளைக் கண்காணிப்பதுடன், பிரபல ரௌடிகளைப் பிடித்து அந்தந்தக் காவல் நிலையங்களில் ஒப்படைப்பதுண்டு. சமீபகாலமாக இந்த இரண்டு பிரிவு போலீஸாரும் எலியும் பூனையுமாகச் செயல்பட்டுவருகின்றனர். இவர்களுக்குள் ஏற்படும் ஈகோ மோதலால், சிலர் ரௌடிகளுடன் நட்பில் இருந்துகொண்டு தகவல்களை முன்கூட்டியே சொல்லி தப்பவைத்துவிடுகின்றனர். சென்னையில் ரெளடிகள் மூலம் க்ரைம் ரேட் அதிகரிப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள் நேர்மையான அதிகாரிகள்!