Published:Updated:

கைதட்டிவிட்டோம்; விளக்கேற்றிவிட்டோம்... இனி இந்த 10 விஷயங்களை கவனிப்பீரா பிரதமர் அவர்களே?

An Indian policewoman lights lamps in Hyderabad.
An Indian policewoman lights lamps in Hyderabad. ( AP / Mahesh Kumar A )

நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துவரும் சூழலில், கொரோனாவைக் கட்டுப்படுத்தவும் தேசத்தைக் காக்கவும் பிரதமர் மோடி கவனிக்க வேண்டிய அதிமுக்கியமான 10 விஷயங்கள்...

சுதந்திர இந்தியா, ஒரு தொற்றுநோய் காரணமாக இவ்வளவு மோசமான ஒரு சூழலை இதற்கு முன்பு சந்தித்ததில்லை. ஊரடங்கு 21 நாள்களையும் தாண்டிச் செல்லாம் என்ற அச்சத்துக்கு மத்தியிலும் அகல்விளக்குகளை ஒளிரவைத்து, டார்ச் லைட்டுகளை அடித்து, தீபாவளியைப்போல பட்டாசுகளை வெடித்து பிரதமரின் விருப்பத்தை மக்கள் நிறைவேற்றியிருக்கிறார்கள். இதற்கு முன்பாக, பிரதமரின் வேண்டுகோளை ஏற்று கைதட்டியதுடன் நிற்காமல், சங்கு ஊதியும் தங்கள் தேசபக்தியை மக்கள் வெளிப்படுத்தினார்கள்.

People clap from balconies in show of appreciation to health care workers at a Chawl in Mumbai, India
People clap from balconies in show of appreciation to health care workers at a Chawl in Mumbai, India
AP / Rafiq Maqbool

பிரதமரின் வேண்டுகோளையும் தாண்டி, மக்கள் தங்கள் `கடமைகளை(!)’ ஆற்றிவிட்டார்கள். இனி பிரதமர் மோடி செய்வதற்குப் பல கடமைகள் காத்திருக்கின்றன. மக்களின் எதிர்பார்ப்புகளை பிரதமர் நிறைவேற்ற வேண்டும். கொரோனாவைக் கட்டுப்படுத்த வேண்டும், மக்களின் இயல்பு வாழ்க்கை விரைவில் திரும்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்கான சகல அதிகாரங்களும் படைத்தவர்தான் பிரதமர் மோடி. அவர் உடனடியாகச் செய்யவேண்டிய 10 முக்கிய விஷயங்களை இங்கு வரிசைப்படுத்துகிறோம்.

1. அணுகுமுறையில் அதிரடி மாற்றம்!

இந்திய சுகாதாரத்துறை எந்த அளவுக்கு பின்தங்கிய நிலையில் உள்ளது என்பதற்கு ஒரு லேட்டஸ்ட் ஆதாரம். கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்வதில் நாட்டின் முன்பாக இருக்கும் சவால்கள் குறித்து அறிந்துகொள்ள இந்தியாவின் 410 மாவட்டங்களிலும் கடந்த மார்ச் 25, 26, 27 தேதிகளில் ஒரு சர்வே நடத்தப்பட்டது. அதில், மாவட்டங்களில் சுகாதாரத்துறையின் நிலைமை குறித்து 410 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பதில் அளித்தார்கள். அதில், 266 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான உபகரணங்கள் போதுமான அளவுக்கு இல்லை என்பது தெரியவந்துள்ளது. எல்லா வைரஸ்களையும்விட மிக எளிதில் தொற்றக்கூடியது கொரோனா வைரஸ் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு PPE எனப்படும் பாதுகாப்புக் கருவிகள் பற்றாக்குறை இருப்பதாக மருத்துவர்கள் சமூகம் அலறிக்கொண்டிருக்கிறது. தங்கள் உயிரைப் பணயம் வைத்து களத்தில் போராடிவருகிறார்கள் மருத்துவர்கள்.

Kashmiri doctors and health workers
Kashmiri doctors and health workers
AP/ Dar Yasin

சீனா உள்ளிட்ட உலக நாடுகளை கொரோனா வைரஸ் மிரட்டிக்கொண்டிருந்தபோதே, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ளவில்லை. மாறாக, வென்டிலேட்டர் போன்ற அதிமுக்கிய மருத்துவ உபகரணங்களை வெளிநாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்துகொண்டிருந்தது. உலக நாடுகளை கொரோனா உலுக்கியெடுத்தபோது, நம் நாட்டுக்கெல்லாம் கொரோனா வராது என்ற மிதப்பில் இருந்தது இந்திய சுகாதாரத்துறை. ஆபத்தை மிகத் தாமதமாகவே உணரத்தொடங்கி, தாமதமாகச் செயல்பட ஆரம்பித்தது இந்திய சுகாதாரத்துறை. இந்தப் படிப்பினைகளிலிருந்து இந்திய சுகாதாரத்துறையின் அணுகுமுறையில் அதிரடி மாற்றங்களை பிரதமர் கொண்டுவருவாரா?

2. ஜி.எஸ்.டி நிலுவைத்தொகை கிடைக்குமா?

தேசம் முடக்கப்பட்டுள்ள நிலையில், கடுமையான நிதி நெருக்கடியில் மாநிலங்கள் சிக்கித்தவிக்கின்றன. ஜி.எஸ்.டி கொண்டுவரப்பட்டபோது, அதனால் ஏற்படக்கூடிய இழப்புகளை ஈடுகட்டுவதாக மத்திய அரசு உறுதியளித்தது. மாநிலங்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மத்திய அரசு இழப்பீடு அளிக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு அதை ஒழுங்காகச் செய்வதில்லை என்று பெரும்பாலான மாநிலங்கள் புகார் கூறிவருகின்றன. கடந்த வாரம், மாநில முதல்வர்களுடன் பிரதமர் வீடியோ கான்ஃபரன்ஸிங்கில் கலந்துரையாடியபோது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இது தொடர்பான கோரிக்கையை பிரதமரிடம் முன்வைத்தார். ஆனால், பிரதமரிடமிருந்து அதற்கு பதில் இல்லை.

3rd National GST Conference
3rd National GST Conference
twitter/nsitharamanoffc

கடந்த நான்கு மாதங்களாக மாநிலங்களுக்கு மத்திய அரசு தர வேண்டிய ரூ.40,000 கோடி நிலுவையில் உள்ளது. கொரோனா பாதிப்பு சூழலில் மாநிலங்களின் நிதி நெருக்கடி மேலும் கடுமையாகிவருகிறது. மேற்குவங்கத்துக்கு ரூ.2,875 கோடி நிலுவைத்தொகை தர வேண்டும் என்றும், அதை உடடினயாக வழங்குமாறும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மேற்குவங்க நிதியமைச்சர் அமித் மித்ரா கடிதம் எழுதியுள்ளார். கடந்த அக்டோபரிலிருந்து தரப்படவேண்டிய ரூ. 6,752 கோடி நிலுவைத்தொகையை உடனடியாக வழங்குமாறு பஞ்சாப் முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். பலமுறை கேட்டும் நிலுவைத் தொகை கிடைக்காத காரணத்தால், மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வது குறித்து சில மாநிலங்கள் ஆலோசித்துவருகின்றன. ஜி.எஸ்.டி நிலுவைத்தொகையை வழங்கினால்தான், மாநிலங்கள் கொஞ்சமாவது மூச்சுவிட முடியும். அந்த நிலுவைத்தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்குமா?

3. புதிய நிவாரண நிதிக்கான விளக்கம் கிடைக்குமா?

̀பிரதமர் தேசிய நிவாரண நிதி’ என்பது ஓரங்கட்டப்பட்டு, கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகளுக்காக குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் அவசரகால சூழல் நிவாரண நிதிக்காக PM CARES என்ற புதிய கணக்கு ஒன்றை மத்திய அரசு ஆரம்பித்துள்ளது. இதற்கான வங்கிக்கணக்கு உள்ளிட்ட விரங்களை பிரதமர் மோடி வெளியிட்டார். அதில் பெரும் தொழிலதிபர்களும் பிரபலங்களும் நிதியளித்துவருகிறார்கள். வெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களின்போது, பிரதமர் தேசிய நிவாரண நிதிக்குத்தான் எல்லோருமே நிதியுதவி அளித்துவந்துள்ளார்கள். பிரதமர் தேசிய நிவாரண நிதி, 1948-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. அதற்கு ஒருவர் நிதி வழங்கினால், தானியங்கி முறையில் ரசீது வழங்கப்படும். அது, ̀சி.ஏ.ஜி-யின் தணிக்கைக்கு உட்படுத்தப்படும். அதில் வெளிப்படைத்தன்மை உண்டு.

பிரதமர் நிதி
பிரதமர் நிதி

ஆனால், புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கணக்கில் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. மேலும், பிரதமர் தேசிய நிவாரண நிதி கணக்கில் ரூ.3,800 கோடி செலவிடப்படாமல் இருக்கிறது. ஏன் அது செலவுசெய்யப்படவில்லை என்பது தெரியவில்லை. புதிய இந்தியாவில் `பழைய முறைகள்’ கைவிடப்படுவதைப்போல, பிரதமர் தேசிய நிவாரண நிதியையையும் பா.ஜ.க அரசு கைவிட்டுவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிய கணக்கு ஆரம்பித்தது ஏன் என்பதை பிரதமர் விளக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். விளக்கம் அளிப்பாரா?

4. பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்படுமா?

பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயம் செய்வதற்கான அதிகாரம் மத்திய அரசிடம்தான் இருந்தது. அந்த அதிகாரத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு கைகழுவியது. சர்வதேச அளவில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இங்கு முடிவுசெய்யப்படும் என்று சொல்லப்பட்டது. அதாவது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால் இங்கு பெட்ரோல், டீசல் விலைகள் அதிகரிக்கும். கச்சா எண்ணெய் விலை குறைந்தால், இங்கு பெட்ரோல் டீசல் விலைகள் குறையும் என்றார்கள்.

ஆனால், அது மிகப்பெரிய மோசடி என்பதைத் தொடர்ந்து பார்த்துவருகிறோம். கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால், இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலைகள் அதிகரிக்கும். ஆனால், கச்சா எண்ணெய் விலை குறைந்தால் இங்கு விலைகள் குறையாது. தற்போது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாகச் சரிந்துள்ளது . கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கான சரிவு இது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை தற்போது ரூ.22. நியாயமாக பெட்ரோல், டீசல் விலைகளைக் குறைத்திருக்க வேண்டும். ஆனால், அவற்றின் விலைகளை அதிகரித்திருக்கிறார்கள். டீசல் விலை அதிகமாக இருப்பதால், அத்தியாவசிய பொருள்களின் விலையும் அதிகமாக உள்ளன. இந்த அநியாயத்தை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் விலைகளைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

5. சிறு குறு தொழில்கள் பாதுகாக்கப்படுமா?

இந்தியப் பொருளாதாரத்தில் சிறு குறு தொழில்கள் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி அமலாக்கம் என அடுத்தடுத்து மத்திய பா.ஜ.க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் சிறு குறு தொழில்கள் முதுகெலும்பு ஒடிந்துபோய் கிடக்கின்றன. இதனால் நொந்துபோய்க்கிடக்கும் சிறு குறு தொழில்முனைவோர், தங்கள் தொழில்துறையை மீண்டும் தூக்கிநிறுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தொடர்ந்து கோரிக்கை வைத்துவருகிறார்கள். இப்போது, கொரோனா வைரஸால் சிறு குறு தொழில்கள் மேலும் பாதிக்கப்பட்டு, மரணப்படுக்கையை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றன.

An Indian laborer sleeps on sacks of onions at a market during lockdown in Jammu, India.
An Indian laborer sleeps on sacks of onions at a market during lockdown in Jammu, India.
AP / Channi Anand

சிறு குறு தொழில்களை ஊக்குவித்தால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் அது உதவும். எனவே, சிறு குறு தொழில்களைப் பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்குமா?

6.பொருளாதாரம் தூக்கிநிறுத்தப்படுமா?

அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த நரேந்திர மோடி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருளாதாரமாக வளர்ச்சியடையும் என்று உறுதியளித்தார். ஆனால், இந்தியப் பொருளாதாரம் குறித்து வரும் செய்திகள் மிகவும் கவலைக்குரியதாகவே இருந்தன. இப்போது, கொரோனா பாதிப்பால் ஒட்டுமொத்த நாடும் முடக்கப்பட்டுள்ள சூழலில், இந்தியப் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.

Bombay Stock Exchange (BSE) building in Mumbai, India
Bombay Stock Exchange (BSE) building in Mumbai, India
AP /Rajanish Kakade

கொரோனாவுக்குப் பிறகு விழுந்துகிடக்கும் பொருளாதாரத்தைத் தூக்கிநிறுத்த ஏழு லட்சம் கோடி தேவைப்படும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். வழக்கம்போல 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்று பேசிக்கொண்டிருக்காமல், இந்தியப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு ஆக்கபூர்வமான திட்டங்களை வகுத்து, உடனடியாக செயல்படுத்த வேண்டும். அதற்கு மத்திய அரசு தயாராக இருக்கிறதா?

7. சமூக நல்லிணக்கம் உறுதிசெய்யப்படுமா?

கொரோனாவைவிட கொடியதாக இருக்கிறது மதவெறி அரசியல். டெல்லி நிஜாமுதீனில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற இஸ்லாமியர்கள்தான் கொரோனாவைப் பரப்புகிறார்கள் என்று பேசி சமூக நல்லிணக்கத்துக்கு சிலர் உலைவைக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், ̀̀̀`உயிர்க்கொல்லி வைரஸுக்கு சாதி, மதம், இனம் கிடையாது” என்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ள கருத்து மிகவும் வரவேற்கத்தக்கது.

டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்
டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்

மக்கள் மத்தியில் மதரீதியான பிளவையும் ஏற்படுத்தக்கூடிய, சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கக்கூடிய நடவடிக்கையில் சிலர் இறங்கியிருக்கும்போது, அதை அரசு வேடிக்கை பார்ப்பது சரியல்ல. இன ரீதியாக, மத ரீதியாகப் பரப்பப்படும் வெறுப்பு பிரசாரம் கொரோனாவைவிட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும். பிரதமர் மோடி தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்ற அறிவிப்பு வெளியானபோது, சமூகத்தில் பிளவை உண்டாக்கும் அத்தகைய கருத்துகளை யாரும் தெரிவிக்க வேண்டாம் என்று பிரதமர் வேண்டுகோள் விடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிரதமர் அது பற்றிப் பேசவில்லை. அடுத்த உரையிலாவது பிரதமர் இந்தக் கருத்தைக் குறிப்பிடுவாரா?

8. எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேசுவீர்களா?

ஜனநாயக நாடான இந்தியாவில், கொரோனா பாதிப்பு போன்ற பிரச்னைகளால் தேசம் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில், இந்தப் பிரச்னையை எப்படி எதிர்கொள்வது என்பதை எதிர்க்கட்சிகளுடன் ஆட்சியாளர்கள் கலந்தாலோசிப்பது அவசியம். ஒட்டுமொத்த தேசமும் முடக்கப்படக்கூடிய சூழலில், அரசு மட்டுமே தனியாக நின்று இந்தப் பிரச்னையை வெற்றிகரமாக வென்றுவிட முடியாது. பத்தாண்டு காலம் பிரதமராக இருந்து இந்தியாவை வழிநடத்திய மன்மோகன் சிங் போன்ற அனுபவம் மிக்க தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்திருக்க வேண்டும். இதை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தன. ஆனால், அதை மத்திய அரசு கண்டுகொள்ளாமலே இருந்தது.

Indian Prime Minister Narendra Modi
Indian Prime Minister Narendra Modi
AP / Anupam Nath

இப்போது, தாமதமாக அதை உணர்ந்திருக்கிறார் பிரதமர். முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் பிரதமர்கள், மாநில அளவிலான அரசியல் கட்களின் தலைவர்கள் எனப் பலரிடமும் பிரதமர் இப்போது பேசியிருக்கிறார். பிரதமரிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது. மேலும், 5 எம்.பி-க்களுக்கு மேல் உள்ள கட்சிகளின் தலைவர்களை அழைத்துப் பேச பிரதமர் முடிவுசெய்துள்ளார். இதுவும் வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில், 5 எம்.பி-க்களுக்கு மேல் என்று அளவுகோல் வைத்தால், சி.பி.ஐ, சி.பி.எம் போன்ற தேசியக் கட்சிகள் புறக்கணிக்கப்படும் நிலை ஏற்படும். எனவே, அந்த அளவுகோல் கைவிடப்பட வேண்டும். அனைத்து தேசியக் கட்சிகளின் தலைவர்களையும் அந்தக் கூட்டத்துக்கு அழைக்க வேண்டும். பிரதமர் இதைச் செய்வாரா?

9. பொது சுகாதாரம் வலுப்படுத்தப்படுமா?

இந்தியாவில் பொது சுகாதாரம் எந்த அளவுக்கு பின்தங்கிய நிலையில் இருக்கிறது என்பதைப் பார்த்துவருகிறோம். போதுமான அளவுக்கு வென்டிலேட்டர்கள் இல்லை. மருத்துவர்களுக்குத் தேவையான முகக்கவசங்கள் இல்லை. நினைத்த நேரத்தில் நம்முடைய அவசரத்துக்கு வென்டிலேட்டர் போன்ற கருவிகளை உற்பத்திசெய்துவிட முடியாது. அத்தியாவசியமான மருத்துவ உபகரணங்களையும், உயிர்காக்கும் மருந்துகளையும் போதுமான அளவுக்கு முன்கூட்டியே தயாரித்துவைத்திருக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவத்துறை நிபுணர்கள். ஆனால், 134 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டில், பொதுசுகாதாரத்துக்கு ஜி.டி.பி-யில் ஒரு சதவிகிதம்கூட ஒதுக்கப்படவில்லை. சர்வதேச அளவில் சராசரியாக பொது சுகாதாரத்துக்கு 7 சதவிகிதத்துக்கு மேல் நிதி ஒதுக்கப்படும் நிலையில், நம் நாட்டில் ஒரு சதவிகிதம்கூட ஒதுக்கப்படவில்லை என்றால், கொரோனா வரும்போது முகக்கவசம்கூட இல்லாமல் மக்கள் அல்லல்படுவதில் ஆச்சர்யமில்லை.

Quarantine center at the Sarusojai sports complex in Gauhati, India
Quarantine center at the Sarusojai sports complex in Gauhati, India
AP / Anupam Nath

பொது சுகாதாரத்துக்கு கூடுதல் நிதியை பட்ஜெட்டில் ஒதுக்கிவந்திருந்தால், நம் தேசத்தின் மருத்துவத்துறை கட்டமைப்புகள் இந்நேரம் பலப்பட்டிருக்கும். இப்போது அவசர அவசரமாகச் செய்யவேண்டிய தேவை இருந்திருக்காது. சர்வதேச அளவில் சராசரியாக பொதுசுகாதாரத்துக்கு 7 சதவிகிதம் ஒதுக்கப்படுகிறது என்கிறபோது, நம் அரசு 3 சதவிகிதமாவது ஒதுக்க வேண்டும். வரும் பட்ஜெட்டில் இதை எதிர்பார்க்கலாமா?

10. வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படுமா?

ஒவ்வோர் ஆண்டும் இரண்டு கோடிப் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பதுதான் 2014-ம் ஆண்டு பா.ஜ.க-வின் முக்கியமான தேர்தல் வாக்குறுதி. ஆனால், பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு வேலையின்மை கடுமையாக அதிகரித்திருப்பதாகப் புள்ளிவிரங்கள் வந்துகொண்டிருக்கின்றன. தேசம் முடக்கப்பட்டிருக்கும் தற்போதைய சூழலில், இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் மிகமோசமான அளவுக்கு பாதிக்கப்பட்டிருப்பது, புலம்பெயர் தொழிலாளர்களும் ஏழைகளும். டெல்லி உட்பட பல மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் குழந்தை குட்டிகளை இழுத்துக்கொண்டு தலையில் உடைமைகளைச் சுமந்துகொண்டு, லட்சக்கணக்கில் கூட்டம் கூட்டமாக சொந்த மாநிலங்களுக்கு நடந்தே சென்ற கொடுமையைக் கண்டு தேசம் கண்ணீர் வடித்தது.

A group of daily wage laborers walk to return to their villages in Prayagraj, India.
A group of daily wage laborers walk to return to their villages in Prayagraj, India.
AP / Rajesh Kumar Singh

இந்திய மக்களில் கணிசமான எண்ணிக்கையில் இருக்கும் இந்தத் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்திருக்கிறார்கள். கொரோனாவுக்குப் பிறகான காலத்தில், இவர்களின் வேலைவாய்ப்புக்கான, வாழ்வாதாரத்துக்கான திட்டங்களை மத்திய அரசு இப்போதே வகுக்குமா? அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமா? உணவும் தண்ணீரும் இல்லாமல் பல கி.மீ தூரம் நடந்தேசென்ற அந்த மக்கள்தாம் பிரதமர் நாற்காலியில் நரேந்திர மோடியை அமரவைத்தவர்கள். அவர்களுக்கு என்ன செய்யப்போகிறார் பிரதமர்?

இவை மட்டுமல்லாமல், பல விஷயங்களில் நம் நாட்டை மீண்டும் சகஜ நிலைக்குக் கொண்டுவர பிரதமர் செயல்பட வேண்டியிருக்கும். அடுத்தமுறை மக்களிடம் பேசும்போது பொருளாதாரம், வேலை வாய்ப்பு, பொது சுகாதாரம் போன்றவற்றில் அரசு எடுக்கும் முன்னெடுப்புகளைப் பகிர்ந்து கொண்டு, மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவார் என்பதே பலரின் எதிர்பார்ப்பு.

நம்பிக்கையோடு காத்திருப்போம்!

அடுத்த கட்டுரைக்கு