Published:Updated:

10% இடஒதுக்கீடு:உடன்பிறப்புகளுடன் உரசும் தோழர்கள்!

மீண்டும் அதே கேள்விதான், 'சாதியா, வர்க்கமா?'. வர்க்கத்தை முதன்மைப்படுத்தும் கம்யூனிஸ்ட்கள் எப்படி 'பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை' மறுக்க முடியும்? மீண்டும் தமிழக அரசியலில் கம்யூனிஸ்ட்கள் தெரிந்தே செய்யும் தவறு இது.

CPM
CPM

`மதவாத அரசியலை எதிர்ப்போம்' என்று கைகோத்து நின்ற கம்யூனிஸ்ட்களும் திராவிட இயக்கத்தவரும் இப்போது எதிரும் புதிருமாக நிற்கிறார்கள். ``முன்னேறிய சாதியில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு' அளிப்பதை அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்துப் பேசியதுதான் இப்போது பெரும் விவாதமாக வெடித்திருக்கிறது. தேர்தல் நேரத்தில் தோழமை பாராட்டிய இருதரப்பும் இப்போது சமூகவலைதளங்களில் கடுமையான விமர்சனங்களால் மோதிக்கொண்டிருக்கின்றன.

Stalin
Stalin

கம்யூனிஸ்ட்களுக்கும் திராவிட இயக்கத்துக்குமான உறவுக்கு ஒரு நீண்ட மரபு இருப்பதைப் போலவே முரணுக்கும் நெடிய மரபு உண்டு. 'தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்' என்று அழைக்கப்படும் சிங்காரவேலரும் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் ஜீவாவும் பெரியாருடன் முரண்பட்டு சுயமரியாதை இயக்கத்திலிருந்து வெளியேறியவர்கள். 'சாதியா, வர்க்கமா, எதை முதன்மைப்படுத்திப் போராடுவது?' என்கிற விவாதம் 30கள், 40களில் பெரியாரியக்க இதழான 'குடியரசு'க்கும் கம்யூனிஸ்ட் கட்சி இதழான 'ஜனசக்தி'க்கும் நடைபெற்றதை எஸ்.வி.ராஜதுரை - வ.கீதா எழுதிய 'பெரியார் :சுயமரியாதை சமதர்மம்' நூலின் பின்னிணைப்புகளில் காணலாம்.

சாதியா - வர்க்கமா என்பதில் மட்டுமல்ல, இந்திய விடுதலைப் போராட்டம் குறித்த நிலைப்பாடு, இந்திய தேசியம், தேசிய இனப்பிரச்னைகள், மொழிப்பிரச்னை, திராவிட நாடு கோரிக்கை, 'பார்ப்பன' எதிர்ப்பு, இந்து மதத்தின் மீதான விமர்சனங்கள் எனப் பல்வேறு விஷயங்களில் கம்யூனிஸ்ட்களுக்கும் திராவிடர் இயக்கத்துக்கும் எக்கச்சக்கமான முரண்பாடுகள் உள்ளன. அதில் முக்கியமானது 'சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு'. இதை எப்போதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொண்டதில்லை. பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்னும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடுகளை விமர்சித்த திராவிடர் கழகம், 'சி.பி.எம் என்றால் கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் மனுதர்மா' என்று விளக்கமே தந்தது.

கம்யூனிஸ்ட்
கம்யூனிஸ்ட்

சி.பி.எம் இத்தகைய நிலைப்பாடுகளை எடுப்பதற்குக் காரணம் 'பார்ப்பன'த் தலைவர்கள்தான் என்பதும் பெரியாரிஸ்ட்கள் அவ்வப்போது முன்வைக்கும் குற்றச்சாட்டு.

தேர்தல் அரசியலிலும் தி.மு.க.வுக்கும் கம்யூனிஸ்ட்களுக்கும் இடையிலான முரண்பாடுகளுக்கும் நீண்ட வரலாறு உண்டு. சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் சென்னை மாகாணத்தில் கம்யூனிஸ்ட்கள் கணிசமான இடங்களை வென்றதும் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதும்தான் வரலாறு. மக்கள் செல்வாக்கு மிக்க கம்யூனிஸ்ட்களின் வளர்ச்சியை, தி.மு.கவின் எழுச்சி பாதித்தது. இந்தி எதிர்ப்பு, திராவிட நாடு கோரிக்கை ஆகிய தி.மு.க.வின் அரசியல் செயற்பாடுகளை கம்யூனிஸ்ட்கள் கடுமையாக விமர்சித்தனர்; கிண்டலடித்தனர்.

'கடவுள் இருக்கு என்பதும் இல்லை என்பதும் கதைக்குதவாத வெறும் பேச்சு; கஞ்சிக்கில்லாதார் கவலை தீர்க்கவே கருத வேண்டியதை மறந்தாச்சு' என்பது கம்யூனிசக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய பாடல். கம்யூனிஸ்ட்களுக்குள் ஆழமாக ஊடுருவிப்போன திராவிட இயக்க வெறுப்புக்குச் சரியான உதாரணம் ஜெயகாந்தன். தங்கள் வளர்ச்சியைத் தி.மு.கவின் கவர்ச்சிகரமான அரசியல் தடுத்ததாக கம்யூனிஸ்ட்களுக்கு எண்ணம் உண்டு.

ஆனால், உண்மையில் மொழியுணர்வு, சாதிப்பிரச்னை, ஈழப்பிரச்னை போன்றவற்றில் கம்யூனிஸ்ட்கள் எடுத்த நிலைப்பாடுகளுக்கும் தமிழக மக்களுக்கும் இடையில் ஆழமான இடைவெளி இருந்தது. தி.மு.க.வுக்கு எதிராக எம்.ஜி.ஆர் வந்தபோதும் வைகோ வந்தபோதும் விஜயகாந்த் வந்தபோதும் கம்யூனிஸ்ட்கள் அவர்கள் பின்னால் நின்றதை இன்னமும் தி.மு.கவினர் வெறுப்புடன்தான் விமர்சிக்கின்றனர்.

A day with Vaiko
A day with Vaiko

90கள் வரைக்கும் கம்யூனிஸ்ட்களும் திராவிட இயக்கமும் எலியும் - பூனையும் நிலைதான் என்று சொல்லலாம். 92 அம்பேத்கர் நூற்றாண்டுவிழாக் கொண்டாட்டத்தையொட்டி எழுந்த தலித் அரசியல் எழுச்சி, இன்னொருபுறம் பாபர் மசூதி இடிப்பையொட்டி நிகழ்ந்த இந்துத்துவ அரசியல் எழுச்சி ...இவ்விரண்டும் இடதுசாரிகளை புதிய நிலைப்பாட்டை எடுக்கவைத்தன.

குறிப்பாக பி.ஜே.பி பெரும் அரசியல் சக்தியாக எழுந்தபோது கம்யூனிஸ்ட்கள் பெரியாரை மறுவாசிப்பு செய்ய ஆரம்பித்தனர். கம்யூனிஸ்ட் கட்சிகளின் அணிகளான இளைஞர் சங்கம், மாணவர் சங்க சுவரொட்டிகளிலும் பலகைகளிலும் அம்பேத்கருக்கும் பெரியாருக்கும் இடம் கிடைத்தது. 'பிராமணர்கள்' என்றே உச்சரித்துப் பழகிய கம்யூனிஸ்ட்களில் சிலர் 'பார்ப்பனர்கள்' என்று சொல்ல ஆரம்பித்தனர். மாட்டுக்கறி உண்ணும் விழாக்களை நடத்தினர். பெரியார் சிலைக்கு கம்யூனிஸ்ட் தலைவர்கள் மாலையிட்டனர். தொலைக்காட்சி விவாதங்களில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் திராவிட இயக்க நியாயங்களைத் தங்கள் குரலில் முன்வைத்தனர். இப்படி கறுப்பும் சிவப்பும் கைகோத்து நிற்கும் நிலையில்தான், இப்போது இட ஒதுக்கீட்டையொட்டி சிறுபிளவு.

பெரியார் கருணாநிதி
பெரியார் கருணாநிதி

மீண்டும் அதே கேள்விதான், 'சாதியா, வர்க்கமா?'. வர்க்கத்தை முதன்மைப்படுத்தும் கம்யூனிஸ்ட்கள் எப்படி 'பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை' மறுக்க முடியும்? மீண்டும் தமிழக அரசியலில் கம்யூனிஸ்ட்கள் தெரிந்தே செய்யும் தவறு இது. சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டில் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி தமிழகம். கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு.

தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் இட ஒதுக்கீடு எல்லாப் பிரச்னைகளையும் தீர்த்துவிடவில்லை என்றாலும் சமூக அமைப்பிலும் இயக்கத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியது. அதிகாரப் பரவல் நடந்தது, உற்பத்தி உறவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தியது, நிலப்பிரபுத்துவ அமைப்பிலிருந்து முதலாளித்துவ அமைப்புக்குத் தமிழகத்தை நகர்த்தியது, முதலாளித்துவ ஜனநாயக உரிமைகளை ஓரளவுக்கு எல்லாச் சாதிகளும் அனுபவிக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தது இட ஒதுக்கீடே என்பதை மார்க்சிய அடிப்படையிலேயே கம்யூனிஸ்ட்கள் உணர்ந்திருக்கலாம். ஆனாலும் பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு என்பதிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கள் பிடிவாதமாக இருக்க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோ திராவிட இயக்க நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது.

முல்லைப் பெரியாறுக்கு நிலைப்பாட்டை மாற்றும்போது, இட ஒதுக்கீட்டுக்கு நிலைப்பாட்டை மாற்றக்கூடாதா தோழர்களே?

பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்பதை கொள்கையளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொண்டாலும் மோடி ஆட்சி கொண்டுவந்துள்ள 'பொருளாதார அளவுகோல்' ஒரு போங்கு ஆட்டம் என்பது அவர்களுக்குத் தெரிகிறது. ஆண்டு வருமானம் எட்டு லட்சம் என்பது எப்படி பொருளாதார ரீதியாகப் பின் தங்கிய நிலைமை ஆகும்? ஆண்டு வருமானம் எட்டு லட்சம் என்ற அளவுகோலை மாற்ற வேண்டும் என்றும் சி.பி.எம். தன் நிலைப்பாட்டை முன்வைத்துள்ளது.

தமிழர்களுக்கு இருக்கும் பல ஆதார விஷயங்களில் ஒன்று இட ஒதுக்கீடு, சமூகநீதி. பெரியாரிக்கமும் தி.மு.க.வும் தொடர்ந்த இந்த நிலைப்பாட்டை எம்.ஜி.ஆர் மாற்றிப்பார்த்தார். இட ஒதுக்கீட்டில் கிரிமிலேயரைக் கொண்டுவந்தார். அடுத்து வந்த தேர்தலில் தோல்வியைச் சந்தித்தார். பிறகு....? ஏற்கெனவே இருந்த இட ஒதுக்கீட்டின் அளவை இன்னும் உயர்த்தினார். ஜெயலலிதா திராவிட அரசியல் கட்சியின் தலைமைப்பொறுப்பில் இருந்தாலும் திராவிட அரசியல் அடிப்படைகளுக்கு எதிரான பல செயற்பாடுகளை மேற்கொண்டார். ஆனால் அவரும்கூட இட ஒதுக்கீட்டில் கைவைக்கவில்லை. மாறாக 69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்தபோது, அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்து 'சமூகநீதி காத்த வீராங்கனை' ஆனார். இவையெல்லாம் கம்யூனிஸ்ட்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். 'மக்களிடம் செல்லுங்கள்; மக்களிடம் கற்றுக்கொள்ளுங்கள்' என்ற மாவோவின் வரிகளை அவர்களுக்கு நினைவுபடுத்த வேண்டுமா, என்ன?

ஜெயலலிதா
ஜெயலலிதா

எப்படி இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின்போது தமிழக மக்களின் உணர்வுகளோடு தங்களைப் பிணைத்துக்கொள்ள கம்யூனிஸ்ட்கள் தவறினார்களோ, ஈழப்போராட்டத்தின்போது தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள தவறினார்களோ, இப்போது மீண்டும் அதே தவறிழைக்கத் தயாராகியிருக்கிறார்கள். மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டை மற்றவர்கள் ஏற்பது இருக்கட்டும், கட்சியின் உள்ளிருப்பவர்களே முழுமனதுடன் ஏற்கவில்லையே! தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா பத்து சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு எதிரான தன் நிலைப்பாட்டை சமூகவலைதளங்களில் வெளிப்படையாகவே முன்வைக்கிறார்.

'தேசிய அளவில் ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டோமே; தமிழகத்தில் மட்டும் அதற்கு மாறாக எப்படி நிலைப்பாடு எடுப்பது?' என்பது சி.பி.எம்.மின் தயக்கமாக இருக்கலாம். ஆனால், 'இந்தியா என்பது பல்வேறு மதங்கள், மொழிகள், தேசிய இனங்கள், பண்பாடுகளைக் கொண்ட நாடு. இந்தப் பன்மைத்துவத்தை அழித்து ஒற்றை இந்தியாவைக் கட்டமைக்கப் பார்க்கிறது' என்று பா.ஜ.க.வை விமர்சித்துவிட்டு, அதே தவறை மார்க்சிஸ்ட்கள் செய்தால் எப்படி? 'முன்னேறிய சாதியினர்' என்பது இந்தியா முழுவதும் ஒரேமாதிரியாக இல்லை. அப்படியிருக்கும்போது 'பத்து சதவிகிதம்' என்பதும் எப்படி இந்தியா முழுவதும் ஒரேமாதிரியாக இருக்கும்?

CPIM
CPIM

தமிழகத்தில் பெரும்பாலான சாதியினர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினச் சாதியினர் என்ற வரையறைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். இட ஒதுக்கீடு வரம்புக்கு வெளியே உள்ள, 'முன்னேறிய சாதியினருக்கு'ப் பத்து சதவிகித இட ஒதுக்கீடு என்பது, தமிழகத்தைப் பொறுத்தவரை அதிகம். அதிலும் எட்டு லட்சம் ஆண்டு வருமானம் என்பது மோசடியான அளவுகோல். எனவே தமிழகத்தைப் பொறுத்தவரையாவது சி.பி.எம் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். 'மாநிலத்துக்கு மாநிலம் நிலைப்பாட்டை மாற்றுவது' மார்க்சிஸ்ட்களுக்குப் புதிதா என்ன? முல்லைப்பெரியாறுக்கு நிலைப்பாட்டை மாற்றும்போது, இட ஒதுக்கீட்டுக்கு நிலைப்பாட்டை மாற்றக்கூடாதா தோழர்களே?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைக் கடுமையாக விமர்சிக்கும் திராவிட இயக்கத்தவர்களுக்கும் சில கேள்விகள் :

* 90களுக்குப் பின் அரசுத் துறைகள் பலவும் தனியார்மயமாக்கப்பட்டுவிட்டன. இந்தத் தனியார்மயத்தில் திராவிடக் கட்சிகளுக்கும் திராவிடக் கட்சிகள் கூட்டணியில் பங்கேற்ற மத்திய அரசுகளுக்கும் பங்குண்டு. தனியார் மயம் என்பது இட ஒதுக்கீட்டை, சமூகநீதியை ஒழித்துக்கட்டாதா? தனியார் துறையில் இட ஒதுக்கீடு இல்லாதபோது, 'இட ஒதுக்கீடு, சமூகநீதி' என்று பேசுவது வெற்றுக்கூச்சல் ஆகாதா?

* தனியார்ப் பள்ளிகள், சுயநிதிக்கல்லூரிகள் ஆகியவை 80களில் இருந்தே கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழகத்தை ஆக்கிரமித்துவிட்டன. திராவிடக் கட்சிகளைச் சேர்ந்த பலர் இந்தப் பள்ளிகளையும் சுயநிதிக் கல்லூரிகளையும் நடத்துகின்றனர். இங்கெல்லாம் இட ஒதுக்கீடு முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா? இவற்றைக் கண்காணிக்க ஏற்பாடுகள் உள்ளனவா?

* சமூக நீதி என்பது வெறும் இட ஒதுக்கீடு மட்டும்தானா? 'பார்ப்பன கம்யூனிஸ்ட் கட்சி' என்று திராவிட இயக்கத்தவரால் கிண்டலடிக்கப்படும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 'தீண்டாமை ஒழிப்பு முன்னணி'யை ஏற்படுத்தி உத்தப்புரம் முதல் அந்தியூர் வரை சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் தீண்டாமை, ஆணவக்கொலைகளுக்கு எதிராகவும் போராடுகிறது. ஆனால் திராவிடக் கட்சிகள் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகவும் தீண்டாமைக்கு எதிராகவும் போராடுவதில்லையே? ஒரு கட்சி 'ஆணவக்கொலையே நடப்பதில்லை' என்று மூடிப்பார்க்கிறது. இன்னொரு கட்சி தன் சாதனையாகச் சொல்லிக்கொள்ளும் சமத்துவபுரத்திலேயே ஆணவக்கொலை நடக்கிறது. வெறுமனே இட ஒதுக்கீட்டை ஆதரித்தால் மட்டும் போதுமா?

உதயநிதி
உதயநிதி

* 'சமூகநீதி' என்பதன் அடிப்படை வெறுமனே இட ஒதுக்கீடு மட்டுமா, அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்படுவதுதானே சமூக நீதியின் அடிப்படை? வெளியில் 'சமூக நீதி'யைத் தேடும் திராவிடக் கட்சிகள் தங்கள் கட்சியில் 'சமூக நீதி'யை நடைமுறைப்படுத்தியுள்ளனவா? கட்சிகளின் அனைத்துப் பதவிகளிலும் அனைத்துச் சாதியினருக்கும் போதுமான பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளதா? குடும்ப அரசியல், வாரிசு அரசியல் என்பது சமூக நீதிக்கு எதிரானது என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?