Published:Updated:

`பதல்காடி’ இயக்கத்தின் 10,000 பேர்மீது தேசத்துரோக வழக்கு..! காரணம் என்ன?

ஜார்க்கண்ட் மாநிலத்தில் குந்தி என்கிற ஒரே மாவட்டத்தில் 10,000 பழங்குடி மக்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. `பதல்காடி இயக்கம்' என்ற பெயரில், கிராம சபைகளுக்கு உரிமை அளித்து, மத்திய, மாநில அரசுகளை நிராகரித்துள்ளதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது அரசு.

பழங்குடிகளின் `பதல்காடி' இயக்கம்!
பழங்குடிகளின் `பதல்காடி' இயக்கம்! ( Photo Credit: The Wire )

நடுகல் வழிபாடு பண்டைக்கால சமூகங்களின் பண்பாட்டு வழக்கம். பழங்குடிகளால் நடுகல் வழிபாட்டு முறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. கடவுளையோ, இறந்துபோன பழங்குடி வீரனையோ நினைவுகூர, நடுகல்கள் நடப்படுகின்றன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சில பிரிவுகளை நடுகல்லில் எழுதி, தங்கள் நிலங்களைக் காக்க முயன்றதற்காக ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஏறத்தாழ 10,000 பழங்குடி மக்கள் மீது தேசதுரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

நடுகல் என்பதை `பதல்காடி' என்று அழைக்கின்றனர் ஜார்க்கண்டின் பழங்குடியினர். இறந்த வீரர்களுக்காக நடுகல் எழுப்பப்பட்ட காலங்கள் போய், அரசியலுக்காக நடுகல் எழுப்புகின்றனர் இந்தப் பழங்குடி மக்கள். `பதல்காடி' இயக்கம் என்ற பெயரில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 4 பிரிவுகளை எழுதி நட்டுள்ளனர் மக்கள். இதன்படி, தங்கள் நிலங்கள் மீதான அதிகாரம், தங்கள் கிராம சபையிடம் மட்டுமே இருப்பதாகவும், அதில் மத்திய அரசும் மாநில அரசும் தலையிட முடியாது என்கின்றனர் மக்கள். `அட்டவணைப் பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட கிராமங்கள் சட்டம் 1996' என்ற சட்டத்தின் வாக்கியங்கள் பதல்காடி கல்களில் எழுதப்பட்டிருக்கின்றன.

`பதல்காடி' இயக்கம்
`பதல்காடி' இயக்கம்

பழங்குடிகள் பதல்காடி நடுகல்களை எழுப்புவதற்கான காரணம், அவர்களின் நிலங்கள் மீது இருக்கும் அரசின் பார்வை. இந்தப் பிரச்னைகளுக்கு பிரிட்டிஷ் காலத்தை முதல் காரணமாகக் கருதுகின்றனர் அந்த மக்கள். அதுவரை வெளியில் இருந்து எந்தப் பிரச்னையும் இல்லாமல் வாழ்ந்த பழங்குடி மக்களின் நிலம் மீதான ஆக்கிரமிப்பு, பிரிட்டிஷ் காலத்தில் தொடங்குகிறது. பொதுப் பயன்பாட்டில் பழங்குடி மக்கள் பயன்படுத்தி வந்த நிலத்தை, பிரிட்டிஷ் அரசு தனிச்சொத்தாக மாற்றி, பழங்குடி மக்களிடையே பிரித்து அளித்தது. அதுவே, பழங்குடி அல்லாதவர்களிடம் பழங்குடி நிலங்கள் விற்பனை ஆவதற்கும் வழிவகுத்தது,

பிரிட்டிஷ் காலத்திலேயே, பழங்குடி மக்கள் நிலவுரிமைக்காக எழுப்பிய மக்கள் திரள் போராட்டத்தால், இரண்டு சட்டங்கள் இயற்றப்பட்டு, பழங்குடி நிலங்கள் பழங்குடி அல்லாதோருக்கு விற்பனை செய்வதைத் தடை செய்வதை உறுதிசெய்தன. 1996-ம் ஆண்டு, ஜார்க்கண்டின் பூரியா கமிட்டி பழங்குடி மக்களின் கிராம நிர்வாகத்துக்காக சில பரிந்துரைகள் செய்தது. ஜார்க்கண்ட் மாநில அரசு அந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில், `அட்டவணைப் பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட கிராமங்கள் சட்டம் 1996' என்னும் சட்டத்தை இயற்றியது. இதன்படி, பழங்குடி மக்கள் தங்கள் நிலங்களில் இருந்து விரட்டுவது தடுக்கப்பட்டு, ஒவ்வொரு கிராம சபைக்கும் தனியாக அதிகாரம் வழங்கப்பட்டது.

'பதல்காடி' இயக்கம்
'பதல்காடி' இயக்கம்

ஜார்க்கண்ட் மாநிலத்தின் கனிம வளங்களுக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய சந்தை உண்டு. கனிம வளங்களுக்கான சுரங்கங்கள் கட்டுவதற்காக, பல்வேறு பழங்குடிகள் தங்கள் இடங்களிலிருந்து விரட்டப்படுகின்றனர். இதுவே அங்கு மாவோயிஸ்ட்கள் தோன்றுவதற்கான காரணமாகச் சொல்லப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டு, ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரம் ராஞ்சியில் `உலக முதலீட்டாளர்கள் மாநாடு' நடைபெற்றது. கனிம வளங்களுக்கான சுரங்கங்கள், தொழிற்சாலைகள் கட்டுவதற்கான வெளிநாட்டு முதலீடுகள், ஒப்பந்தங்கள் இதில் கையெழுத்திடப்பட்டன.

2016-ம் ஆண்டின் இறுதியில், ஜார்க்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ், பழங்குடி மக்களின் நிலங்களைக் காக்க பிரிட்டிஷ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டங்களைத் திருத்தி உத்தரவிட்டார். அதன்படி, பழங்குடி நிலங்கள் `வளர்ச்சித் திட்டங்களுக்காக' மட்டும் கையகப்படுத்தலாம் எனச் சட்டம் மாற்றியமைக்கப்பட்டது. இதை எதிர்த்து பழங்குடி அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டன.

'பதல்காடி' இயக்கம்
'பதல்காடி' இயக்கம்
புலிகளுக்காகப் பலிகொடுக்கப்பட்ட பழங்குடி வாழ்வு - பூர்வகுடிகளின் பூர்வீகம் அறிவோம்!

2017-ம் ஆண்டு, ஜார்க்கண்ட் மாநிலத்தின் குந்தி மாவட்டத்திலுள்ள பழங்குடி கிராமங்களில் நடுகல்கள் நடப்பட்டன. பதல்காடி இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பழங்குடி மக்களுக்கும் அவர்களது நிலங்களுக்கும் அளித்திருக்கும் உரிமைகளின் அடிப்படையில் தங்கள் நிலங்களைப் பாதுகாப்பதாக அறிவித்தனர் பழங்குடி மக்கள். மத்திய அரசும் மாநில அரசும் தங்கள் நிலங்களின் மீது அதிகாரம் செலுத்த முடியாது எனவும், தங்கள் நிலங்களைத் தங்கள் கிராம சபைகளே நிர்வகிக்கும் எனவும் அறிவித்தனர்.

பதல்காடி இயக்கத்தினர் தங்களைத் தாங்களே `உண்மையான' இந்திய அரசு எனவும், தங்கள் போராட்டம் தங்களது `நீர், காடு மற்றும் நிலம்' ஆகியவற்றை உரிமைகொள்வதற்கானது எனவும் பிரகடனப்படுத்துகின்றனர்.

பதல்காடி இயக்கம் படிப்படியாக ஒவ்வொரு கிராமத்துக்கும் பரவியது; அடுத்தடுத்த மாவட்டங்களும் பதல்காடி இயக்கத்தினரைப் பின்பற்றத் தொடங்கினர். தற்போது ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், ஒடிசா, மத்தியப் பிரதேசம் முதலான மாநிலங்களின் சில பகுதிகளில் பதல்காடி இயக்கம் உயிர்ப்புடன் இருக்கிறது. கிராமங்களில் பழங்குடி அல்லாதோரின் நடமாட்டம் வெகுவாகக் குறைந்தது. ஜார்க்கண்டின் பி.ஜே.பி அரசுக்கு இந்தத் திட்டம் பெரும் தலைவலியாக மாறியது. இதன்மீது மாவோயிஸ்ட்களின் திட்டம் என விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. மேலும், மாவோயிஸ்ட்களின் நிதிக்காக, இந்தப் பழங்குடி மக்கள் கஞ்சா பயிரிட்டு, விளைவிப்பதாகவும் அரசு குற்றம் சாட்டுகிறது.

பிர்சா முண்டா
பிர்சா முண்டா
Vikatan

பதல்காடி இயக்கத்தினர் மறைந்த பழங்குடி வீரர் பிர்சா முண்டாவைத் தங்கள் வழிகாட்டியாகக் கருதுகின்றனர். குடியரசுத் தலைவருக்குத் தங்கள் 11 கோரிக்கைகளை அனுப்பி வைத்துள்ளனர் பதல்காடி இயக்கத்தினர். அதன்படி, கிராம நிர்வாகத்துக்கு நிதி தேவை; பழங்குடிகளை நக்சல்கள் என்று கூறி, கைது செய்யக் கூடாது; நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்; பழங்குடி நிலங்களில் குவிக்கப்பட்டிருக்கும் காவல்துறை, துணை ராணுவம் முதலானற்றை விலக்க வேண்டும்; பழங்குடி குழந்தைகளுக்காகத் தனி பாடத்திட்டத்தோடு கல்வி வழங்கப்பட வேண்டும் முதலானவை அவர்கள் விடுத்துள்ள கோரிக்கைகள்.

பழங்குடி மக்களின் இந்தப் போராட்டத்தை எதிர்கொள்ள அரசு எடுத்துள்ள ஆயுதம் - தேசத்துரோகச் சட்டம். பதல்காடி இயக்கம் தொடங்கப்பட்ட சில நாள்களிலேயே ஒவ்வொரு கிராமமாக, தனித்தனி மனிதர்கள் மீது தேசத்துரோக சட்டம் பிறப்பிக்கப்பட்டது. காவல்துறையின் அறிக்கையின்படி, பழங்குடியினர் காவல்துறையினரைக் கடத்தினர் என்றும், தாக்கினர் என்றும் வழக்கு பதிவு செய்யப்பட்டன. மேலும், பலரும் வன்முறையைத் தூண்டும்படி பேசுவதாகவும், வழக்குகள் பதியப்பட்டுள்ளன. பலரும் கைதுசெய்யப்பட்டு, சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. எனினும், பதல்காடி இயக்கத்தினர் தங்கள் கொள்கைகளைக் கைவிடவில்லை.

பழங்குடி மக்களின் சந்திப்பு
பழங்குடி மக்களின் சந்திப்பு

ஒவ்வொரு மனிதர் மீதும், தேசத்துரோகச் சட்டம் பயன்படுத்தப்பட்டு தற்போது பதல்காடி இயக்கம் தொடங்கப்பட்ட குந்தி மாவட்டத்தில் மட்டும் ஏறத்தாழ 10,000 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஜார்க்கண்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, பழங்குடி மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

10,000 பழங்குடிகள் மீது தேசத்துரோக வழக்கைப் பதிவுசெய்யும் எந்த அரசும் இந்த நாட்டின் கூட்டு மனசாட்சியை உலுக்கியிருக்க வேண்டும்.
ராகுல் காந்தி

10,000 பழங்குடி மக்கள் மீது தேசத்துரோக வழக்கு பிறப்பித்துள்ள ஜார்க்கண்டின் மாநில பி.ஜே.பி அரசைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ``அரசு ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் 10,000 பழங்குடிகள் மீது தேசத்துரோக வழக்கைப் பதிவுசெய்யும் எந்த அரசும் இந்த நாட்டின் கூட்டு மனசாட்சியை உலுக்கியிருக்க வேண்டும். ஆனால், உலுக்கவில்லை" என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Vikatan

ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களின் பல்வேறு பழங்குடி கிராமங்கள் மாவோயிஸ்ட்களின் கட்டுப்பாட்டில் செல்வதை அரசு கண்காணித்து வந்தது. மாவோயிஸ்ட்கள் பழங்குடியினரைத் திசைதிருப்புவதாக மத்திய, மாநில அரசுகள் கருத்து தெரிவித்தன. தற்போது, இந்திய அரசியலமைப்பின் அடிப்படையில் திரண்டிருக்கும் பழங்குடிகளைத் தேசத் துரோகிகள் எனக் கூறுகிறது அரசு. ஒரே ஒரு கிராமத்தில் தொடங்கிய பதல்காடி இயக்கம், தற்போது பல்வேறு இடங்களில் பரவியிருக்கிறது. பழங்குடி மக்களின் உரிமைகளைப் பின்னுக்குத் தள்ளி, `வளர்ச்சித் திட்டங்களை' முதன்மைப்படுத்தியதால், இந்தப் பிரச்னை நிகழ்ந்திருக்கிறது என்பதை ஜார்க்கண்ட் மாநில அரசு உணர வேண்டும். ஜார்க்கண்ட் அரசு மட்டுமல்ல, தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களும் உணர வேண்டும்; ஏனெனில், மக்களின் உரிமையை `வளர்ச்சித் திட்டங்களின்' பெயரால் தடுத்தால், மக்கள் அரசியலமைப்புச் சட்டம் தரும் உரிமைகளின் வழியாகவே திரள்வார்கள்; அதற்குப் பதல்காடி இயக்கமே சாட்சி.