மின் கட்டண உயர்வு ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் தமிழக மக்கள் மீது அடுத்த அடி விழுந்துள்ளது. முன்னறிவிப்பு எதுவுமின்றி 70 ரூபாய் வரை சிமென்ட் மூட்டை விலையை தனியார் நிறுவனங்கள் ஏற்றியுள்ளன. இந்த வருடத்தில் சிமென்ட் விலை உயர்த்தப்படுவது இது மூன்றாவது முறை. இதனால், ஒட்டுமொத்த கட்டுமானத் துறையும் அரண்டு போயிருக்கிறது.

சிமெண்ட் விலை உயர்வு

 இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு 36 கோடி டன் சிமென்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்களில்தான் பெருமளவு சிமென்ட் உற்பத்தியாகிறது. சிமென்ட் தொழில் மிகவும் லாபகரமானது. சிமென்ட்டுக்கான மூலப்பொருட்களில் ஒன்று நிலக்கரி சாம்பல். சிமென்ட்டில் 35 சதவிகித அளவுக்கு நிலக்கரிச் சாம்பல் கலக்கப்படுகிறது. அந்தச் சாம்பலை அடிமாட்டு விலைக்கு அனல்மின் நிலையங்களில் இருந்து சிமென்ட் நிறுவனங்கள் வாங்குகின்றன. ஒரு டன் நிலக்கரி சாம்பலின் விலை 700 ரூபாய். அப்படியென்றால், மூன்று மடங்குக்கும் அதிகமான லாபத்தை ஈட்டுகிறார்கள்.

சென்னை கட்டுமானப் பொறியாளர்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் வெங்கடாச்சலம், ''தமிழகத்தில் உள்ள ஏழு தனியார் சிமென்ட் கம்பெனிகள் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளன. கிட்டத்தட்ட 20 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், 80 லட்சம் பேர் மறைமுகமாகவும் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். சிமென்ட் விலையை உயர்த்தி ஒரு கோடி பேரின் வயிற்றில் அடித்திருக்கிறார்கள். இந்த விலை உயர்வால் ஒட்டுமொத்த கட்டுமானத் தொழிலும் ஆட்டம் கண்டிருக்கிறது. சிமென்ட் விலையைக் கட்டுப்படுத்த விலை நிர்ணையக்குழுவை அமைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும், அது கண்டுகொள்ளப்படாமலே இருக்கிறது. ஏற்கெனவே தமிழக அரசு அறிவித்த 'அம்மா சிமென்ட்’ திட்டத்தை உடனடியாக அமலுக்குக் கொண்டு வரவேண்டும். அரசுக்குச் சொந்தமான ஆலங்குளம் மற்றும் அரியலூர் சிமென்ட் ஆலைகளை விரிவுபடுத்தி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்' என்றார்.    

சிமெண்ட் விலை உயர்வு

அகில இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கத்தின் முன்னாள் தலைவர் மோகன், ''சென்னையில் ரியல் எஸ்டேட் தொழிலும் பணப்புழக்கமும் வெகுவாகக் குறைந்துள்ளது. தமிழக அரசு பல்வேறு வரிகளை விதித்து ஃபிளாட்களின் விலையை பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே, ஃபிளாட் வாங்குவதற்கு மக்கள் தயங்குகின்றனர். இத்தகைய சூழலில், சிமென்ட் விலையை உயர்த்தி கொள்ளை லாபம் பார்த்துவிட தனியார் சிமென்ட் நிறுவனங்கள் துடிக்கின்றன. 2012-ல் சிமென்ட் உற்பத்தியை வேண்டுமென்றே குறைத்து விலையை அதிகரித்து விற்பனை செய்ததற்காக மத்திய அரசின் போட்டியாளர் ஆணையம் 11 சிமென்ட் நிறுவனங்கள் மீதும் ரூ.6,307 கோடி அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது. அதன் பிறகும், சிமென்ட் விலையை உயர்த்துகிறார்கள். ஏற்கெனவே மணல் தட்டுப்பாடு நிலவிவரும் சூழலில் நடுத்தர வகுப்பினருக்கு இந்த விலையேற்றம் மேலும் அதிர்ச்சியை அளித்துள்ளது. அரசு சிமென்ட் மூட்டை ஒன்று ரூ.240க்கு விற்கப்பட்டு, இன்றைய தேதி வரை பல கோடி ரூபாய் லாபத்தில் இயங்கி வருகிறது. இந்தநிலையில், தனியார் நிறுவனங்கள் சிமென்ட் விலையை உயர்த்துவது அப்பட்டமான பகல் கொள்ளை' என்றார் ஆக்ரோஷமாக.

சிமெண்ட் விலை உயர்வு

தொழில் துறை அமைச்சர் தங்கமணியிடம் பேசினோம். ''மொத்தமாக கொள்முதல் செய் பவர்களுக்கு சிமென்ட் நிறுவனங்கள் கமிஷன் கொடுத்து வந்தன. தற்போது அது நிறுத்தப்பட்டுள்ளது. சிமென்ட் நிறுவனங்களிடம் பேசி, சிமென்ட் விலையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்போம். விரைவில் 'அம்மா சிமென்ட்’ கிடைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அரசு சிமென்ட் உற்பத்தியை அதிகரிப்பதற்கு ஆலங்குளத்திலும் அரியலூரிலும் உள்ள அரசு சிமென்ட் தொழிற்சாலைகள் விரிவுபடுத்தப்படும்' என்றார். ஆட்சியாளர்களுக்குத் தெரியாமல் சிமென்ட் விலையை உயர்த்தும் முடிவை தனியார் நிறுவனங்கள் எடுத்திருக்க மாட்டார்கள் என்கிறார்கள் உள் விவரம் அறிந்தவர்கள்.  

பால் விலை உயர்வு, மின்சாரக் கட்டணம் உயர்வு, சிமென்ட் விலை உயர்வு.... அடுத்தது என்ன?

படங்கள்: சசிமாரீஸ்

விலையேற்றம் ஏன்?

சிமென்ட் விலை தடாலடியாக உயர்த்தப்பட்டதற்கு சில காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு, அங்கு கட்டுமானத் தொழில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. எனவே, அங்கிருந்து தமிழகத்துக்கு வந்து கொண்டிருந்த சிமென்ட் அளவு குறைந்துவிட்டது. அம்மா சிமென்ட் திட்டத்துக்கு தனியாரிடம் இருந்து தமிழக அரசு சிமென்ட் கொள்முதல் செய்ய உள்ளது. எனவே, அந்த உற்பத்திக்கு ஆகிற செலவைக் கட்டுப்படுத்தவே இந்த விலையேற்றம் என்று விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு