Published:Updated:

29 ஆயிர்ம் கோடிக்கு குடிக்க வேண்டும் என்பதுதான் இலக்கா?

செளமியா அன்புமணி ஆவேசம்

பிரீமியம் ஸ்டோரி

தேர்தல் குதிரையில் ஏறி​விட்டது பா.ம.க. அதை வெற்றிப்பாதைக்குக் கொண்டு செல்ல மதுவிலக்கை கையில் எடுத்துவிட்டார் அன்புமணி ராமதாஸ்!

29 ஆயிர்ம் கோடிக்கு குடிக்க வேண்டும் என்பதுதான் இலக்கா?

கடந்த 31ம் தேதி மதுக்கடைகளுக்கு எதிரான பா.ம.கவின்  ஆர்ப்பாட்டம்

தர்மபுரி​யில் நடந்துபோது, ஏதாவது அசம்பாவிதம் நடக்கலாம் என்பதால், தர்மபுரியில் உள்ள மதுக்கடைகளை எல்லாம் மூடிவிட்டார்கள். ஆர்ப்பாட்டத்தில், அன்புமணியின் மனைவி செளமியா  ஆவேசமாகப் பேசினார். கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போதே செளமியா, தர்மபுரி மக்களிடம் பிரபலம் ஆகிவிட்டார். தர்மபுரியிலேயே தங்கியிருந்து, 'எனது கணவருக்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள்’ என அவர் செய்த பிரசாரமும் அன்புமணிக்கு ஓரளவுக்குக் கைகொடுத்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஆர்ப்பாட்டத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே தர்மபுரி வந்த செளமியா, அங்குள்ள குட்டூர், ஜெட்டி அள்ளி, ஏலகிரியான்கொட்டாய் உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்று மக்களின் ஆதரவைத் திரட்டினார். மதுவால் பாதிக்கப்பட்ட சில பெண்கள், ஆர்ப்பாட்டம் தொடங்கிய சற்றுநேரத்தில் மேடையில் ஒப்பாரி பாட்டுப் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதற்கடுத்து சில பெண்கள் மதுவால் அவர்களுக்கு நேர்ந்த பாதிப்புகளைப் பேசிச் சென்றார்கள்.

செளமியா அன்புமணி பேசும்போது, ''தமிழகத்தில் இன்றைக்கு எந்தக் குடும்பத்திலும் குடிக்காதவர்கள் இல்லை என்ற சூழல்தான் நிலவுகிறது. இது இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்தால் பள்ளிக்கூடம் போகிற உங்கள் குழந்தைகள், பேரக்குழந்தைகள், அவ்வளவு ஏன் பெண் குழந்தைகள்கூட குடிக்க ஆரம்பித்துவிடுவார்கள் போலிருக்கிறது. அந்த அளவுக்கு இந்தக் குடி நம்முடைய கலாசாரத்தைக் கெடுத்து வைத்திருக்கிறது. இது நல்ல அரசாக இருந்தால், விவசாயிகளுக்கான மறுவாழ்வுத் திட்டத்தை நிறைவேற்றுவதை இலக்காகக்கொண்டுதான் செயல்பட வேண்டும். ஆனால், இந்த அரசாங்கம் இன்றைக்கு என்ன இலக்கு வைத்திருக்கிறது? தமிழ்நாட்டு மக்கள் 25,000 கோடி ரூபாய்க்குத்தான் குடிக்கிறார்கள். 29,000 கோடி ரூபாய்க்கு அவர்கள் குடிக்க வேண்டும் என்று இலக்கு வைக்கிறார்கள். இது எந்த வகையில் நியாயம்? அவர்கள் எதிர்பார்ப்பதுபோல் இன்னும் 4,000 கோடி ரூபாய்க்கு சேர்த்து நீங்கள் குடிக்க வேண்டுமென்றால், சின்னக் குழந்தைகள் எல்லாம் குடித்தால்தான் அது நடக்கும். இது தேவையா? இது எப்பேர்ப்பட்ட கொடுமை? அப்படி நடந்தால், தமிழ்நாடு என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள். சாராயம் குடிக்கும் ஆண்கள் எல்லோரும் 50 வயதை எட்டுவதற்குள் உயிரிழந்துவிடுகிறார்கள் என்று ஆய்வுகள் சொல்கின்றன. தமிழகத்தில்தான், குடியால் அதிகமான பெண்கள் விதவைகள் ஆகிறார்கள். அதுவும் தர்மபுரியில் அதிக அளவு இளம் விதவைகளை உருவாக்கியிருப்பது இந்த சாராயம்தான். மதுக்கடைகளை மூடவேண்டும் என்று நாம் இங்கு எழுப்பும் குரல், சென்னை வரை கேட்க வேண்டும். நீங்கள் எல்லாம் சேர்ந்து மீண்டும் ஒருமுறை மருத்துவர் அன்புமணி ராமதாஸின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்'' என்று முடித்தார்.

29 ஆயிர்ம் கோடிக்கு குடிக்க வேண்டும் என்பதுதான் இலக்கா?

''நாம் இன்றைக்கு இங்கு போராட்டம் நடத்துகிறோம் என்பதால் தர்மபுரியில் இருக்கும் மதுக்கடைகளை எல்லாம் மூடி இருக்கிறார்கள். இது நமக்குக் கிடைத்திருக்கும் சிறிய வெற்றிதான். தமிழகம் முழுக்க மதுக்கடைகளை மூடவில்லை என்றால், எங்கள் பெண்கள் படையைக் கொண்டு நாங்களே இழுத்து மூடுவோம் என்பதை அரசுக்கு எச்சரிக்கையாக வைக்கிறேன். முதன்முதலாக நானும் என் மனைவியும் இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம். தர்மபுரியில் தொடங்கியிருக்கும் இந்தப் போராட்டம், இனி தமிழகம் முழுக்கத் தொடரும். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பக்கம் தாலிக்குத் தங்கம் கொடுத்தார்கள். இன்னொரு பக்கம் மதுக்கடைகள் மூலம் லட்சக்கணக்கான பெண்களின் தாலியை அறுத்து வருகிறார்கள். பா.ம.க ஆட்சிக்கு வந்தால் தாலிக்குத் தங்கம் தரமாட்டோம். தாலியைப் பாதுகாப்போம். ஒரு படிக்காத மேதைக்கு, ஓர் அறிஞருக்கு, ஒரு கலைஞருக்கு, ஒரு நடிகருக்கு, ஒரு நடிகைக்கு என வாய்ப்பு கொடுத்தீர்கள். முதல்முறையாக மருத்துவரான எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள். மாற்றத்தை நிகழ்த்திக்காட்டுகிறேன்'' என்றார் அன்புமணி ராமதாஸ்.

மது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மாநிலம் முழுவதும் நடத்தத் திட்டமிட்டுள்ளது பா.ம.க.!

எம்.புண்ணியமூர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு