Published:Updated:

போக்குவரத்தைப் புரட்டப்போகும் புதிய மசோதா

இனி...டிரைவிங் ஸ்கூல்கள், மெக்கானிக் ஷாப்புகள், ஆர்.டி.ஓ அலுவலகங்கள் -இல்லை!

நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்துக்கு அடுத்தபடியாக, மக்களின் கடும் எதிர்ப்பைச் சந்திக்கத் தொடங்கிவிட்டது மத்திய அரசு கொண்டுவர இருக்கும், சாலைப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதா - 2014. ‘ஆர்.டி.ஓ அலுவலகங்களில் ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது, அதற்கு விரைவில் முடிவு கட்டப்படும்’ என்ற கருத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, அடிக்கடி உதிர்த்துக்கொண்டே இருந்தார். அதைக்கேட்டு ஒரே குழப்பமாக இருந்தது. ஆர்.டி.ஓ அலுவலகங்கள் மாநில அரசின் கீழ் செயல்படுபவை. அதன் நிர்வாகத்தில் ஒரு மத்திய அமைச்சர் எப்படி தலையிட முடியும் என்று கட்கரியின் பேச்சு பலரையும் யோசிக்க வைத்தது. இப்போது தெளிவாகிவிட்டது. 

ஆர்.டி.ஓ அலுவலகங்களில் நடக்கும் ஊழல்களை மட்டுமல்ல, ஆர்.டி.ஓ அலுவலகங்களையே ஒழிப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்ற தகவல் பரவி வருகிறது.

இந்த மசோதா, பொதுமக்களின் கருத்தை அறிவதற்காக கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பிறகு, எதிர்க் கட்சிகள், தொழிற்சங்கங்கள் உட்பட பலரது எதிர்ப்பையும் சந்தித்து வருகிறது. இந்த மசோதாவில் மிகமோசமான அம்சங்கள் பல இருப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. குறிப்பாக, மாநில உரிமைகளைப் பறிக்கும் ஆபத்து இருப்பதால் இந்த மசோதாவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த மசோதாவுக்கு எதிராக இந்தியா முழுவதும் வரும் 30-ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் நடக்கவிருக்கிறது. அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள், ஆட்டோ, டாக்ஸி மற்றும் டெம்போ ஓட்டுநர்கள் என இந்த மசோதாவால் பாதிப்புக்கு ஆளாகவிருக்கும் தரப்பினர் அனைவரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
போக்குவரத்தைப் புரட்டப்போகும் புதிய மசோதா

அப்படி என்னதான் இருக்கிறது இந்த மசோதாவில்?

“இந்தச் சட்டம் அமலுக்கு வந்துவிட்டால், இப்போது ஓட்டுநர் உரிமங்களை வைத்துள்ள அனைவரும் புதிய ஓட்டுநர் உரிமங்களை எடுக்க வேண்டும். புதிய ஓட்டுநர் உரிமம் பயோமெட்ரிக் முறையில் இருக்கும். முதலில் எல்.எல்.ஆர் எடுக்க வேண்டும். இப்போது, எல்.எல்.ஆர் எடுத்து ஒரு மாதத்தில் ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் புதிய முறையில், எல்.எல்.ஆர் எடுத்து 9 மாதங்கள் கழித்துத்தான் ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்க முடியும். எல்.எல்.ஆர் எடுப்பதற்கே தேர்வு எழுத வேண்டும். அந்தத் தேர்வை தனியார்தான் நடத்துவார்கள். அவர்கள்தான் உரிமங்களையும் வழங்குவார்கள்.

கண்டக்டர் என்ற பணியாளர்கள் இனி தேவையே இல்லை என்று இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், இந்தியாவில் கண்டக்டர்களே இருக்க மாட்டார்கள். தற்போது உரிமம் பெற்று பணியில் இருக்கும் பல லட்சம் கண்டக்டர்களின் எதிர்காலம் குறித்து மசோதாவில் எதுவும் சொல்லப்படவில்லை.

தற்போது, பஸ் வழித்தடங்கள் அனைத்தும் தேசியமயம் ஆக்கப்பட்டுள்ளன. இந்தச்சட்டம் அமலுக்கு வந்தால், பெர்மிட் அனைத்தும் தேசிய ஆணையத்தின் கைக்குப் போய்விடும். பெர்மிட்களை எடுக்க உலகளாவிய அளவில் டெண்டர் விடப்படும். அதில் கலந்துகொள்பவர்கள் அதிக விலை கேட்பவர்களாக இருப்பார்கள். எனவே, அவர்களுக்குத்தான் டெண்டர் கிடைக்கும். தனியார் பஸ், அரசு பஸ் இரண்டுக்கும் இப்போது அரசுதான் கட்டணங்களை நிர்ணயிக்கிறது. இனி, டெண்டர் எடுப்பவரே கட்டணங்களை நிர்ணயம் செய்வார். பொதுப் போக்குவரத்து முழுவதும் பெருமுதலாளிகளின் வசம் போய்விடும்” என்கிறார், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார்.

போக்குவரத்தைப் புரட்டப்போகும் புதிய மசோதா

‘‘மோட்டார் சைக்கிள் உட்பட எந்தவொரு வாகனமாக இருந்தாலும், அதில் சிறிய சாதாரண பழுது ஏற்பட்டால்கூட, கம்பெனி சர்வீஸ் சென்டரில்தான் பழுதுபார்க்க வேண்டும். மேலும், கம்பெனி உதிரி பாகங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். டூப்ளிகேட் உதிரி பாகங்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும். சிறைத்தண்டனையும் வழங்கப்படும். இதனால் உதிரி பாகங்கள் தயாரிக்கும் சிறு குறு தொழிற்சாலைகளுக்கு மூடுவிழா நடத்தப்படும். சிறிய அளவிலான உதிரி பாகக் கடைகளோ, மெக்கானிக் ஷாப்புகளோ இருக்காது” என்கிறார், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன (சி.ஐ.டி.யு) மாநில துணைப் பொதுச்செயலாளர் எம்.சிவாஜி.

இந்த மசோதாவில் வாகன ஓட்டிகளை பயமுறுத்தும் முக்கியமான அம்சங்கள் என்பது கடுமையான சிறைத்தண்டனையும் லட்சக்கணக்கான ரூபாய் அபராதமும். பாதுகாப்பற்ற முறையில் வாகனத்தை ஓட்டினால் ரூ.1 லட்சம் அபராதம் 6 மாதங்கள் சிறைத்தண்டனை. விபத்தில் குழந்தை கொல்லப்பட்டால், வாகனத்தை ஓட்டியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.3 லட்சம் அபராதம். ஹெல்மெட் அணியவில்லை என்றால், ரூ.2,500, லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் என தண்டனைகள் தாராளம்.

கடந்த ஆண்டு மத்திய அரசு இந்த மசோதா தொடர்பாக நடத்திய கூட்டம் ஒன்றில், தமிழக அரசின் சார்பில் கலந்துகொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “மாநிலப் போக்குவரத்துத் துறை நிதி, சட்டம் மற்றும் நிர்வாக அதிகாரங்கள் பெருமளவுக்கு பறிக்கப்படுகின்றன. அனைத்து வகை கட்டணங்கள் மற்றும் மோட்டார் வாகன வரி போன்றவை தேசிய ஆணையத்தால் மின்னணு முறையில் வசூலிக்கப்பட்டால், மாநிலங்களின் வருவாய் பெருமளவில் பாதிக்கப்படும்.  மாநில போக்குவரத்துக் கழகங்களின் உரிமைகளைப் பறிக்கும் விதமாகப் பல்வேறு அம்சங்கள்  இந்த வரைவு மசோதாவில் உள்ளதால் இது சாதாரண மக்களுக்கு போக்குவரத்து வசதிகள் வழங்குவதை வெகுவாக பாதிக்கும். டீசல் விலை உயர்ந்தால், அதன் கூடுதல் சுமையை அரசே ஏற்றுக்கொள்கிறது. ஆனால், அரசின் இந்தச் சலுகையைப் பறிக்கும் அம்சங்கள் மசோதாவில் உள்ளதால், சாதாரண ஏழை மக்களுக்குக் குறைந்த செலவில் போக்குவரத்து வசதிகள் வழங்குவது பாதிக்கப்படும்” என்று பேசினார்.

அகில இந்திய அளவில் ஏப்ரல் 30-ம் தேதி நடக்கவிருக்கும் போராட்டம், மத்திய அரசை அசைக்குமா?

- ஆ.பழனியப்பன், படம்: ப.சரவணகுமார்