Published:Updated:

டிஜிட்டல் முறையில் உறுப்பினர் சேர்க்கை! கிராமங்களைக் குறிவைக்கும் ரஜினி மக்கள் மன்றம்

எம்.வடிவேல்
டிஜிட்டல் முறையில் உறுப்பினர் சேர்க்கை! கிராமங்களைக் குறிவைக்கும் ரஜினி மக்கள் மன்றம்
டிஜிட்டல் முறையில் உறுப்பினர் சேர்க்கை! கிராமங்களைக் குறிவைக்கும் ரஜினி மக்கள் மன்றம்

டிஜிட்டல் முறையில் ரஜினி மக்கள் மன்றத்துக்கு உறுப்பினர் சேர்க்கை நடத்தி அசத்தி வருகிறது கிருஷ்ணகிரி ரஜினி மக்கள் மன்றம். ரஜினி அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்ததை அடுத்து ரஜினி ரசிகர் மன்றம், இனி ரஜினி மக்கள் மன்றம் என்று செயல்படும் என்றும் ரஜினி மக்கள் மன்றத்துக்குத் தமிழகம் முழுவதும் உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என்றும் தனது மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார் ரஜினி. 


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரஜினிகாந்த் பிறந்ததாகக் கூறப்படும் நாச்சிகுப்பம் கிராமத்தில் முதல் உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கிய மாவட்டத் தலைவர் கே.வி.எஸ்.சீனிவாசன் கிராமங்கள், ஊராட்சி, பேரூராட்சிகள், நகராட்சிகள் எனக் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை ஏற்பாடு செய்தார். ஆனால், பல கிராமங்களில் போட்டோ மற்றும் ஜெராக்ஸ் வசதிகள் இல்லாததால் ரஜினி மக்கள் மன்றத்துக்கு உறுப்பினர் சேர்க்கை மிகவும் தாமதம் ஏற்பட்டது. இதனால் மொபைல் வாகனத்தை ஸ்பெஷலாக உருவாக்கி கிராமம்தோறும் உறுப்பினர் சேர்க்கை நடத்தி அசத்தி வருகின்றார்.

இதற்காக மின்சாரம் இணைப்பு வசதியுன் கூடிய ரஜினி மக்கள் மன்ற மொபைல் வாகனத்தில் டிஜிட்டல் முறையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 18 வயது பூர்த்தியான ஆண்கள், பெண்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் அனைவரும் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினராக முடியும். உறுப்பினராக, வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை நகல், பாஸ்போட் சைஸ் போட்டோ கட்டாயம் தேவைப்படும் என்பதால் மொபைல் வாகனத்தில் தயாராக இருக்கும் கேமராமேன் புகைப்படம் எடுத்துவிடுவார். ஆவணங்கள் ஜெராக்ஸ் எடுக்கப்படும். பிறகு விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்திசெய்து புகைப்படத்தை ஒட்டி உறுப்பினரிடம் கையெழுத்து பெற்று வாங்கப்படும். 

இறுதியாக விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யப்பட்ட தகவல்களைக் கணினியில் பதிவேற்றம் செய்து புகைப்படத்துடன் ஐடி கார்டு உறுப்பினருக்கு வழங்கப்படும். இதில் உறுப்பினர் விவரங்கள் கொண்ட க்யூ.ஆர் (QR) கோடும் வழங்கப்பட்டு இருக்கும். இந்த மொபைல் வாகனம் மூலம் ரஜினி மக்கள் மன்றத்துக்கு உறுப்பினர் சேர்க்கும் நடவடிக்கை பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.