Published:Updated:

பாலியல் வன்கொடுமை, ’காண்டம்’ பயன்பாடு, பெண் கல்வி..! திருமண உறவு தொடர்பான கருத்துக்கணிப்பு சொல்லும் 10 செய்திகள்

எம்.ஆர்.ஷோபனா
பாலியல் வன்கொடுமை, ’காண்டம்’ பயன்பாடு, பெண் கல்வி..! திருமண உறவு தொடர்பான கருத்துக்கணிப்பு சொல்லும் 10 செய்திகள்
பாலியல் வன்கொடுமை, ’காண்டம்’ பயன்பாடு, பெண் கல்வி..! திருமண உறவு தொடர்பான கருத்துக்கணிப்பு சொல்லும் 10 செய்திகள்

குடும்ப நலம் மற்றும் ஆண் - பெண் முன்னேற்றங்கள் பற்றி 'தேசியக் குடும்பச் சுகாதார மையம்' சமீபத்தில் நடத்திய ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் அமைச்சகத்தின் இந்தக் கருத்துக்கணிப்பில், திருமணமான மற்றும் திருமணம் ஆகாத ஆண் - பெண்களிடம் பாலினம் குறித்தும், திருமண உறவில் பாலியல் வன்புணர்வு, குடும்ப வன்முறை ஆகியவற்றைக் குறித்து கேட்கப்பட்டுள்ளது. 15 வயது முதல் 49 வயது வரையான பல்வேறு குடும்பப் பின்னணி சேர்ந்தவர்களிடம் எடுக்கப்பட்ட இந்த சர்வேயில், பல முக்கிய விஷயங்கள் வெளியாகியுள்ளன. அவை... 

1. பெண்கள் தனியாக வெளியில் செல்வது சாகசமாகப் பார்க்கப்படுகிறது! 

இந்தக் கருத்துக்கணிப்பின்படி... வீட்டைவிட்டுத் தனியாக கடைவீதி, மருத்துவமனைக்குச் செல்வதும், தங்கள் கிராமம் அல்லது இடத்தைவிட்டு வேறு ஊருக்குச் செல்வதும், தங்களுக்கு ‘அளிக்கப்படும்’ பெரும் சுதந்திரமாகப் பெண்கள் கருதுகின்றனர். இந்தியாவில் 41 சதவிகிதம் பெண்கள் இந்தச் சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர். ஓர் அடிப்படை உரிமைக்கே இத்தனை சதவிகிதம் பேர்தான் பயனடைகிறார்கள் என்பது வேதனையான விஷயம். 

2. திருமண உறவில் பாலியல் வன்கொடுமை பற்றின விழிப்புஉணர்வு பெண்களிடம் இருக்கிறது! 

பெரும்பாலான ஆண்களும் பெண்களும் திருமண உறவில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவது தவறானது என்று கருதுகிறார்கள். 68.4% பெண்களும் 63% ஆண்களும், கணவன் பாலியல் உறவுக்கு அழைக்கும்போது, மனைவி மறுப்பதற்கு உரிமை இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். அதற்குக் காரணங்களாக, மனைவி சோர்வாக இருப்பது, கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது, கணவருக்குப் பாலியல் ரீதியான நோய் இருப்பது போன்றவற்றைச் சொல்கிறார்கள். திருமண உறவில் பாலியல் வன்கொடுமை குறித்து சட்டம் இயற்றுவதற்குப் பல விவாதங்கள் நடந்துவரும் வேளையில், 63% ஆண்களின் கருத்துகளை அரசு எடுத்துக்கொள்ள வேண்டும். 

3. திருமணமான ஆண்கள், காண்டம் பயன்படுத்துவதை விரும்புவதில்லை! 

இந்தியாவில் 94.1% ஆண்களுக்குக் காண்டம் பயன்படுத்துவது பற்றிய விழிப்புஉணர்வு இருக்கிறது என்கிறது இந்த சர்வே. ஆனால், பெரும்பாலான ஆண்கள் பயன்படுத்த விரும்புவதில்லை. வெறும் 5.6% ஆண்கள் மட்டுமே பயன்படுத்துகின்றனர். இது, பெண்களே கருத்தடைக்கான முன்னெடுப்புகள் எடுக்கின்றனர் என்பதைக் காட்டுகிறது. பெண்களுக்குச் செய்யப்படும் நிரத்தரக் கருத்தடை காரணமாக, சுவாசப் பிரச்னை, தசை சேதம் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

4. கருத்தடை செய்த பெண்களும் பின்விளைவு பற்றிய விழிப்புஉணர்வும்! 

82.2% பெண்கள் அரசு பொது மருத்துவமனைகளிலேயே கருத்தடை செய்துகொண்டுள்ளனர். இதில் மிகவும் கொடுமையான விஷயம் என்னவென்றால், 58% பெண்களுக்கு இந்தக் கருத்தடை செய்வதால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்துத் தெரியப்படுத்தவில்லை. 65% பெண்களுக்கு இந்தப் பின்விளைவு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்ற விழிப்புஉணர்வை சுகாதார மையங்கள் ஏற்படுத்தவில்லை. 51.6% பெண்களுக்கு, ஆண்களுக்கான கருத்தடை, காண்டம் பயன்பாடு பற்றித் தெரியவேயில்லை என்பது அதிர்ச்சியான விஷயம். 

5. கல்வி விகிதத்தில் ஆண்களைவிடவும் பெண்கள் பின்தங்கியிருக்கின்றனர். 

இந்தக் கருத்துக்கணிப்பின்படி, அடிப்படை கல்வி பயிலும் பெண்களின் விகிதம், ஆண்களைவிடக் குறைவாகவே இருக்கிறது. 12 வருடங்கள் அடிப்படை கல்வி பயிலும் வாய்ப்பு 22% பெண்களுக்கும் 30% ஆண்களுக்கும் கிடைத்திருக்கின்றன. பள்ளியிலிருந்து குழந்தைகள் நிறுத்தப்படுவதற்கான காரணங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. 6 வயது முதல் 17 வயது வரை உள்ள குழந்தைகளில் 3.8% பெண் குழந்தைகள், வீட்டு வேலைச் செய்வதற்காக நிறுத்தப்படுகின்றனர். 4.9% சதவிகிதம் பெண் குழந்தைகள், பள்ளியில் அடிப்படை வசதி இல்லாதது, பாதுகாப்பின்மை போன்றவற்றுக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். 

6. கருக்கலைப்பு இன்றும் பெண்களின் முக்கியப் பிரச்னை 

கடந்த ஐந்து வருடங்களில் 25.7% பெண்கள் வீட்டிலேயே கருக்கலைப்பு செய்துகொண்டதாக இந்தக் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இந்தியப் பெண்களுக்குப் பாதுகாப்பான கருக்கலைப்பு முறை பற்றி விழிப்புஉணர்வு ஏற்படவேண்டும் என்பதையே இது வெளிப்படுத்துகிறது. 

7. ஆண்களைவிடப் பெண்கள் குறைவாகச் சம்பாதிக்கிறார்கள் 

ஆண்கள் செய்யும் அதே வேலையைப் பெண்கள் செய்தாலும், அவர்களுக்குச் சமமான ஊதியம் வழங்கப்படுவதில்லை என்பது உலகம் முழுவதும் நடைபெறும் விவாதம். அதையே இந்தக் கருத்துக்கணிப்பும் சொல்கிறது. வீட்டு வேலையும் செய்துவிட்டு வேலைக்கும் செல்லும் பெண்களுக்குப் போதிய ஊதியம் வழங்கப்படுவதில்லை. வேலைக்குச் செல்லும் 16% பெண்களுக்கு அதற்கான சம்பளம் மறுக்கப்படுகிறது. 

8. பெண்களுக்குத் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தைச் செலவு செய்யும் உரிமை இல்லை 

வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் பெண்களில் 82% பேர், தங்களின் குடும்பச் செலவுகள் தொடர்பான முடிவுகளை கணவரைச் சார்ந்தே முடிவெடுப்பதாகக் கூறுகின்றனர். 21% பெண்கள் மட்டுமே செலவுகள் குறித்து தனியாக முடிவெடுப்பதாகக் கூறுகின்றனர். 

9. குடும்ப வன்முறை சர்வசாதாரணமாக நடக்கின்றன! 

51.7% பெண்களின் கணவர்கள், மனைவியை அடிப்பது தவறில்லை என்ற கருத்துடன் இருக்கிறார்கள். பாலுறவுக்கு மறுப்பது, சரியாகச் சமைக்காதது, வெளியில் செல்வது, சந்தேகம் போன்றவற்றை இதற்கான காரணங்களாகச் சொல்கிறார்கள். பெரும்பாலான பெண்கள், இந்தக் குடும்ப வன்முறையை அனுமதிக்கிறார்கள் என்பதுதான் வேதனையான விஷயம். 

10. ஆதார் பற்றி பொதுமக்களின் கருத்து! 

இந்தக் கருத்துக்கணிப்பில், சம்பந்தமே இல்லாமல் ஆதார் அட்டை வைத்திருப்பது நல்ல விஷயம் என்பது போன்ற அடிப்படையிலும் பிரித்திருக்கின்றனர். ஏற்கெனவே, ஆதார் அட்டையை அலைபேசி எண்ணுடன் இணைப்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர்கள் வழக்குத் தொடர்ந்திருக்கின்றனர். ஆதார் அட்டை பொதுமக்களின் விவரங்களை வெளியிடுவதாக சர்ச்சை எழும் நிலையில், அது குடும்பங்களுக்குப் பயனளிக்கிறது என்ற பிம்பத்தை உருவாக்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.