Published:Updated:

அல்வா கிண்டுவது முதல் அச்சடிப்பது வரை... ‘பட்ஜெட்டின் ரகசியம்’ காக்கும் ராஜதந்திரங்கள்! #Budget2018

அல்வா கிண்டுவது முதல் அச்சடிப்பது வரை... ‘பட்ஜெட்டின் ரகசியம்’ காக்கும் ராஜதந்திரங்கள்! #Budget2018
அல்வா கிண்டுவது முதல் அச்சடிப்பது வரை... ‘பட்ஜெட்டின் ரகசியம்’ காக்கும் ராஜதந்திரங்கள்! #Budget2018

இந்தியாவில் மிக மிக பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் பொருள் எது தெரியுமா? இன்று இந்தக் கட்டுரை வெளியாவதால் எளிதில் யூகிக்கக்கூடியதுதான். பட்ஜெட் பேப்பர்ஸ்.

பேச்சிலர்களின் ரூம் பட்ஜெட்டுக்கே சில மணி நேரமும், சில வெள்ளைக்காகிதங்களும் தேவைப்படும். இந்தியா போன்ற பெரிய நாட்டுக்கான பட்ஜெட் என்பது எவ்வளவு பெரியது? அதை எப்படி ரகசியமாக கடைசி நாள் வரை பாதுகாக்கிறார்கள்? யார் யார் இதில் பங்குபெறுகிறார்கள்? பெரிய பட்ஜெட் படங்களின் வீடியோக்கள் அசால்ட்டாக லீக் ஆகும்போது, பட்ஜெட் போன்ற பெரிய விஷயத்தை லீக் செய்ய ஆட்கள் இருக்க மாட்டார்களா? அப்படி, என்னதான் இருக்கிறது இந்தப் பட்ஜெட்டின் பின்னால்?

பிக்பாஸ் பார்த்தவர்கள் அப்படி ஒரு வீட்டை நினைத்துக்கொள்ளுங்கள். புது டெல்லியில் இருக்கும் செக்ரெட்டிரியேட்டின் “North block"ல் தான் நிதி அமைச்சகம் இருக்கிறது. அந்த அறையில் தான் பட்ஜெட்டுக்கான வேலைகள் நடக்கும். கிட்டத்தட்ட பிக்பாஸ் வீடுதான்.

பாதுகாப்புக்காக நார்த் பிளாக்கில் ஒரு தனி தொலைபேசி எக்சேஞ்ச் அமைக்கப்பட்டிருக்கும். அருகிலிருக்கும் பகுதிகளின் அத்தனை மொபைல்களும் கண்காணிக்கப்படும்; எந்த நெட்வொர்க் ஆக இருந்தாலும். மொபைல் மட்டுமல்ல, உள்ளிருக்கும் நூற்றுக்கணக்கான லேண்ட்லைனும் இந்தக் கண்காணிப்பிலிருந்து தப்ப முடியாது. 

நிதித்துறையின் வாசலில் எலக்ட்ரானிக் குடை ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். உள்ளிருந்து வெளியேவோ, வெளியிலிருந்து உள்ளேயோ எதையும் மறைத்து எடுத்துச் சென்றுவிட முடியாது.

வழக்கமாக, நார்த் கேட் வழியாக யார் வேண்டுமென்றாலும் பாஸ் வாங்கி உள்ளே செல்லலாம். பட்ஜெட் காலங்களில் அப்படி யாரும் சென்றுவிட முடியாது. பட்ஜெட் வேலையில் ஈடுபடுபவர்களுக்கு பிரத்யேக ஐடி கார்டு வழங்கப்பட்டிருக்கும். உளவுத்துறையின் அதிகாரிகள் இந்தப் பாதுகாப்பு ஏற்பாட்டில் பங்கேற்பார்கள்.

ஜனவரி 20-ம் தேதி, அருண் ஜெட்லி அல்வா கிண்டினார் என்ற செய்தியைப் படித்திருப்பீர்கள் (பட்ஜெட்டே ஒரு அல்வாதானே). அது ஒரு சம்பிரதாயம். பட்ஜெட் வேலைகள் முடிந்து அவை பிரிண்ட் செய்யும்  வேலையைத் தொடங்குமுன் இந்த அல்வா கிண்டப்படும் (அடுத்த வருஷம் பக்கோடாவும் சேர்ப்பாங்களோ?!). இதைச் சாப்பிட்டுவிட்டுதான் ஊழியர்கள் வேலையைத் தொடங்குவார்கள். இதன்பின் இதற்கான வேலையில் ஈடுபடும் ஊழியர்கள் வெளியே போக அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதை Quanrantine period என்பார்கள்.

நேஷனல் இன்ஃபார்மேட்டிக்ஸ் சென்டர் (NIC) மற்றும் PIB சேர்ந்த 100 ஊழியர்கள் ஒரு வாரத்துக்கு முன்பு இந்தப் பாதுகாக்கப்பட்ட ஏரியாவுக்குள் வந்திருக்கிறார்கள். பிரஸ் ரிலீஸுக்குத் தேவையான விஷயங்களையும், அதற்கு உதவும் இன்ஃபோகிராபிக்ஸ்களையும் இவர்கள் உருவாக்குவார்கள்.

உள்ளிருக்கும் பல கணினிகளில் மின்னஞ்சலும் இணையமும் துண்டிக்கப்படும். தேவையென்றால் பயன்படுத்த ஒரு சில தொலைபேசிகளும் இணையம் இருக்கும் கணினிகளும் மட்டுமே இருக்கும். அவசரம் என்றால், ஊழியர்கள் உறவினர்களுக்குச் சொல்ல விரும்பும் தகவலை ஒலிப்பதிவு செய்யலாம். ஆனால், அவர்களுடன் பேச முடியாது.

ஒருவேளை உள்ளிருக்கும் ஊழியர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அவர்களுக்காகவே ஒரு ஸ்பெஷல் மருத்துவர் உள்ளிருப்பார். தேவைப்பட்டால், அருகிலிருக்கும் ராம் மனோஹர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார். ஆனால், பார்வையாளர்களுக்கு அங்கேயும் அனுமதி கிடையாது.

குறைந்தது 4-5 முறையாவது நிதி அமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்யும் உரையை ஒத்திகைப் பார்ப்பார். நேற்று மாலைவரை இது தொடர்ந்திருக்கும்.

வழக்கமாக, 8000 முதல் 10000 காப்பி பட்ஜெட் பிரின்ட் செய்யப்படும். சமீபகாலமாக இந்த என்ணிக்கை குறைந்திருக்கிறது. இந்த ஆண்டு 2500 பிரதிகள் அச்சிடப்பட்டிருக்கும். மற்றவை, டிஜிட்டலாகவே வாசிக்கப்படுகின்றன.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பட்ஜெட்டின் ஒரு காப்பி சீல் செய்யப்பட்ட கவரில் வைத்து தரப்படும். பொதுமக்களும் பணம் செலுத்தி பட்ஜெட் காப்பியைப் பெறலாம்.

பட்ஜெட் தினத்தன்று காலையில்தான் பட்ஜெட் பேப்பர்கள் பாதுகாப்பாக பாராளுமன்றத்துக்கு கொண்டு வரப்படும்.

1950-ல் ஒருமுறை பட்ஜெட் பேப்பர் அச்சகத்திலிருந்து லீக் ஆனது. அதன்பின் இடம் மாற்றினார்கள். இப்போது, நார்த் பிளாக்கின் ஒரு பிரிவிலே அச்சகம் இருக்கிறது. அங்குதான் பிரின்ட் செய்யப்படுகிறது.