Published:Updated:

மத்திய பட்ஜெட்: பிரபலங்களின் ஆதரவும்... எதிர்ப்பும்!

மத்திய பட்ஜெட்: பிரபலங்களின் ஆதரவும்... எதிர்ப்பும்!
மத்திய பட்ஜெட்: பிரபலங்களின் ஆதரவும்... எதிர்ப்பும்!

மத்திய பட்ஜெட்: பிரபலங்களின் ஆதரவும்... எதிர்ப்பும்!த்தியில் ஆளும் பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, தனது கடைசி மற்றும் ஐந்தாவது முழு பட்ஜெட்டை நேற்று (01-02-2018) தாக்கல் செய்தது. இந்த மத்திய பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்களுடைய ஆதரவும்... எதிர்ப்பும் இதோ...


ராகுல் காந்தி (காங்கிரஸ் தலைவர்): “பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகியும், எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. மிக்க நன்றி. இன்னும் ஓர் ஆண்டுதான் இருக்கிறது”.

தேவகவுடா (மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர்): “விவசாயிகளை மேம்படுத்த நிதியமைச்சர் முயற்சி செய்துள்ளார். ஆனால், கிராமப்புற விவசாயிகளின் பிரச்னை பெரியது”. 

ப.சிதம்பரம் (முன்னாள் நிதியமைச்சர்): “நிதிப் பற்றாக்குறையைச் சமாளிப்பதில் நிதியமைச்சர் தோல்வி அடைந்துள்ளார். பட்ஜெட்டில் கணிக்கப்பட்டுள்ளதைவிட நிதிப் பற்றாக்குறை அதிகமாக இருக்கிறது”.

டி.ராஜா (தேசியச் செயலாளர், இ.கம்யூனிஸ்ட்): “இது வளர்ச்சிக்கான பட்ஜெட் அல்ல. தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும், பழங்குடியினருக்கும் எந்தத் திட்டங்களும் பட்ஜெட்டில் இல்லை”.

மாயாவதி (தலைவர், பகுஜன் சமாஜ்): “பொய்யான வாக்குறுதிகளையும், வெற்றுப் பேச்சுகளையும் பேசுவதைத் தவிர்த்து, தேர்தலின்போது மக்களுக்கு வாக்களித்த நல்ல காலம் எப்போது வரும் என்பதை பிரதமர் மோடி தெரிவிக்க வேண்டும்”.

அரவிந்த் கெஜ்ரிவால் (டெல்லி முதல்வர்): “டெல்லிக்கு சிறப்பு நிதி உதவித் திட்டம், சிறப்புக் கட்டமைப்பு வசதி திட்டம் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்தேன். ஆனால் இன்னும் மத்திய அரசு மாற்றாந்தாய் மனநிலையில் நடப்பது வேதனை அளிக்கிறது”.

அகிலேஷ் யாதவ் (தலைவர், சமாஜ்வாடி): “இது, அழிவுக்கான பட்ஜெட். பி.ஜே.பி-க்கு இதுதான் கடைசி பட்ஜெட்டாக இருக்கும். தேர்தலில் மக்கள் நல்ல பதில் அளிப்பார்கள்”. 

நிதின் கட்கரி (மத்திய அமைச்சர்): “10 கோடி குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீடு மிகப்பெரிய திட்டம். வரலாற்றுச் சாதனை மிக்க பட்ஜெட்”. 

பொன்.ராதாகிருஷ்ணன் (மத்திய அமைச்சர்): “மத்திய பட்ஜெட், ஏழைகளின் வளர்ச்சி சார்ந்ததாகவும் நடைமுறைக்கு ஏற்றதாகவும் இருக்கிறது”.

நிதிஷ்குமார் (பீகார் முதல்வர்): “கல்வி, சுகாதாரம், விவசாயம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. 10 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில், தேசிய சுகாதாரத் திட்டம் அறிவிக்கப்பட்டது மிகப்பெரிய சாதனை”.  

எடப்பாடி பழனிசாமி (தமிழக முதல்வர்): “நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும் பட்ஜெட்.  பட்ஜெட்டில் விவசாயம், ஊரக வளர்ச்சி, சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது”.

மு.க.ஸ்டாலின் (செயல் தலைவர், தி.மு.க.): “பி.ஜே.பி., ஒருமுறை தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தமிழகத்துக்கு அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனை இதுவரை வரவில்லை. பட்ஜெட்டில் தமிழக மக்களின் நலம் புறக்கணிக்கப்பட்டுள்ளது”.  

நாராயணசாமி (புதுச்சேரி முதல்வர்): “மத்திய அரசின் கடைசி பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது. யூனியன் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளன”.

கிரண்பேடி (ஆளுநர், புதுச்சேரி): “அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பட்ஜெட் விவசாயம், கிராம, நகர்ப்புற வளர்ச்சி, இளைஞர்கள், பெண்களுக்கு முன்னேற்றம் அளிக்கிறது”.

டி.டி.வி.தினகரன் (எம்.எல்.ஏ., ஆர்.கே.நகர் தொகுதி): “பட்ஜெட்டில் தமிழகம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.  மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் பற்றிய அறிவிப்பு தெளிவானதாக இல்லை. மக்களுக்கான புதிய சுகாதார காப்பீட்டுத் திட்டம் நடைமுறைக்குப் பொருந்தாதது”. 

அரவிந்த் செளந்த் (சிவசேனா எம்.பி.): தேர்தலை மனதில்கொண்டு தயாரிக்கப்பட்ட தேர்தல் பட்ஜெட். அதனால், தொழில் துறையில் இருந்து விவசாயம், சுகாதாரம், கல்வி ஆகியவை மீது அரசு கவனம் செலுத்தியுள்ளது”.

சஞ்சய் சிங் (ஆம் ஆத்மி எம்.பி.): “வேலைவாய்ப்பு பற்றியோ, விவசாய கடன் தள்ளுபடி பற்றியோ பட்ஜெட்டில் எதுவுமே இல்லை. இது, ஒரு பக்கோடா பட்ஜெட்”. 

ஓ.பிரையன் (திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.): “இந்தப் பட்ஜெட், ஒரு சூப்பர் ஃபிளாப். முடிவடையும் தருவாயில் உள்ள அரசின் மரண வாக்குமூலம்”.

ஜி.ராமகிருஷ்ணன் (மாநிலச் செயலாளர், மா. கம்யூனிஸ்ட்): “இந்த பட்ஜெட் சாதாரண, ஏழை, எளிய நடுத்தர மக்களின் நலன்களை பற்றி கவலைகொள்ளாத பட்ஜெட்டாக உள்ளது”. 

வைகோ (பொதுச் செயலாளர், ம.தி.மு.க.): “ ‘விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்’  என ஜெட்லி கூறுவது, அதானி குழுமத்தையா? ‘விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும்’ எனக் கூறும் ஜெட்லி, எந்த உலகத்தில் இருக்கிறார்?”.

மருத்துவர் ராமதாஸ் (பா.ம.க. நிறுவனர்): “வேளாண் அறிவிப்புகளைத் தவிர, பட்ஜெட் பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது”.

தமிழிசை செளந்தரராஜன் (மாநில பி.ஜே.பி. தலைவர்): “இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமான ஒரு பட்ஜெட். இதன்மூலம், வரும் ஆண்டுகளில் இந்தியா உலகப் பொருளாதாரத்தில் முக்கிய இடத்தைப் பெறும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை”.

திருநாவுக்கரசர் (மாநில காங்கிரஸ் தலைவர்): “2019 தேர்தலைக் கொண்டு பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. ரயில் திட்டங்களை ஒரு வருடத்தில் நிறைவேற்ற முடியுமா? இது கார்ப்பரேட் அரசாங்கம்”. 

தொல்.திருமாவளவன் (தலைவர், விடுதலைச் சிறுத்தைகள்): “விவசாயிகளின் கடன்களை ரத்துசெய்யும் எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை. அதேபோல், விவசாயிகளைப் பாதுகாக்கும் எந்த நடவடிக்கையும் இல்லாமல் பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது”.

விஜயபாஸ்கர் (தமிழக அமைச்சர்): “மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது”.

முகம்மது சலிம் (மக்களவைத் தலைவர், மா.கம்யூனிஸ்ட்):“வேலைவாய்ப்புக்கும், முதலீட்டுக்கும் இடையே மிகப்பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது”. 

தேஜஸ்வி யாதவ் (தலைவர், ராஷ்ட்ரிய ஜனதா தளம்): “பீகார் மாநிலத்துக்கு எந்தத் திட்டமும் இல்லை. மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தும், சிறப்பு நிதி உதவியும் இல்லை”.
 

அடுத்த கட்டுரைக்கு