Published:Updated:

போக்குவரத்துத் துறையின் பஸ் பாஸ் கண்ணாமூச்சி! கொதிக்கும் பயணிகள்...

போக்குவரத்துத் துறையின் பஸ் பாஸ் கண்ணாமூச்சி! கொதிக்கும் பயணிகள்...

போக்குவரத்துத் துறையின் பஸ் பாஸ் கண்ணாமூச்சி! கொதிக்கும் பயணிகள்...

போக்குவரத்துத் துறையின் பஸ் பாஸ் கண்ணாமூச்சி! கொதிக்கும் பயணிகள்...

போக்குவரத்துத் துறையின் பஸ் பாஸ் கண்ணாமூச்சி! கொதிக்கும் பயணிகள்...

Published:Updated:
போக்குவரத்துத் துறையின் பஸ் பாஸ் கண்ணாமூச்சி! கொதிக்கும் பயணிகள்...

அரசுப் பேருந்துப் பயணிகளுக்கான தினசரி, வார பாஸ் அட்டைகளுக்கான கட்டண விவரத்தை அறிவிக்காமல் போக்குவரத்துத் துறை இழுத்தடிப்பதால், பயணிகள் கடும் கோபத்துடன் உள்ளனர். 

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் போராட்டத்தைக் காரணமாக வைத்து, கடந்த மாதம் 20-ம் தேதி பயணக்கட்டணத்தை அரசு திடீரென உயர்த்தியது. கட்டண உயர்வைக் கண்டித்து மாநிலம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் வெடித்தது. அதையடுத்து அரசியல் கட்சிகளும் கட்டண உயர்வைக் கண்டித்து போராட்டங்கள் நடத்தின. தொடர் போராட்டத்தை அடுத்து உயர்த்தப்பட்ட கட்டணத்தில் ஒரு ரூபாய் அளவுக்கு மட்டும் குறைப்பதாக அரசு அறிவித்தது. போராட்டங்கள் தொடர்ந்தபடி இருக்க, பயணச்சீட்டுக் கட்டணத்தில் அதன்பிறகு எந்த மாற்றத்தையும் அரசு செய்யவில்லை. இதற்கிடையில் தினசரி, வாராந்திர, மாதாந்திர சலுகைப் பயண அட்டை கட்டணம் குறித்து போக்குவரத்துத் துறை மெளனம் சாதித்தது. 

பெருநகரங்களில் குறிப்பாக சென்னையில் தினசரி(ரூ.50), வாராந்திர(ரூ.300), மாதாந்திர (ரூ.1,000) அட்டைகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 5 இலட்சத்துக்கும் மேல் இருக்கும் எனத் தோராயமாக மதிப்பிடப்படுகிறது. தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் இரண்டு மூன்று பேருந்துகள் மாறி பணியிடங்களுக்குச் செல்லவேண்டிய நிலையில், இந்த அட்டைகள் அவர்களுக்குப் பெரிய அளவில் பயன்பட்டுவருகிறது. இதைப்போலவே வெளியூர்களிலிருந்து சென்னைக்கு வந்துசெல்பவர்கள், நாள் முழுக்க நகரில் பல இடங்களுக்கும் போகவேண்டியிருப்பவர்களுக்கு தினசரி சலுகை அட்டை பெரிதும் பயன்படுகிறது. இதில் தினசரி அட்டைக்கு ரூ.80 ஆகவும் வாராந்திர அட்டைக்கு ரூ.500 ஆகவும் மாதாந்திர அட்டைக்கு ரூ.1300 ஆகவும் கட்டணத்தை உயர்த்த முடிவு எனப் போக்குவரத்துத் துறையிலிருந்து தகவல்கள் வெளியிடப்பட்டன. ஆனால், இது குறித்து எழுத்துப்பூர்வமாக எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை. 

சலுகைப் பயண அட்டை வாங்கச் செல்லும் பயணிகளிடம் பணிமனைகளில் உள்ள ஊழியர்கள் அதிகாரபூர்வமற்ற தகவலாக இதைச் சொன்னதுடன், விரைவில் ஆணை வந்துவிடும் என்றும் கூறிவந்தார்கள். இன்று முதல் புதிய கட்டணத்துடன் சலுகை அட்டைகள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஒரேயடியாக கட்டண உயர்வைக் கொண்டுவந்தால் மாதாந்திர பயண அட்டைப் பயனாளர்களின் அதிருப்தியை எதிர்கொள்ளவேண்டும் எனப் பின்வாங்கிய அரசுத் தரப்பு, சலுகை அட்டைக்கும் கட்டண உயர்வு இருக்கும் என்பதை ஏற்கும் மனநிலையை மக்களிடம் உருவாக்கிய பின்னர், உயர்வை அறிவிக்கலாம் என முடிவுசெய்ததாகப் போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அதே நேரம் சலுகை அட்டைகளைப் புதுப்பிக்கவேண்டிய காலம் வந்துவிட்டதால், அதைப்பற்றி அறிவிக்க வேண்டிய கட்டாயமும் உண்டானது. எனவே, மாதாந்திர பயண அட்டையின் கட்டணத்தில் மாற்றமில்லை எனப் போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பிலும் மாதாந்திர அட்டைக்கு ஆயிரம் ரூபாய் கட்டணமே தொடரும் என்று அறிவிக்கப்பட்டு, நேற்று முதல் வழங்கப்பட்டுவருகின்றன. 

ஆனால், இருப்பதிலேயே அதிக அளவில் விநியோகமாகும் தினசரி பயண அட்டையில் போலி இருப்பதால் அவற்றைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அமைச்சர் தெரிவித்தார். ஒரு துறையின் அமைச்சரே அந்தத் துறையில் போலிகள் உருவாகி இருப்பதாகக் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்துடன் வாராந்திர பயண அட்டைக்கான கட்டணம் குறித்தும் போக்குவரத்துத் துறை தொடர்ந்து மெளனம் காத்துவருவதால், பயணிகள் கடும் அதிருப்தியிலும் கோபத்திலும் உள்ளனர்.