Published:Updated:

"கட்சி, தேர்தல் மட்டுமே அரசியல் அல்ல..!" - 'நீயா நானா' கோபிநாத்தின் புது ரூட்

"கட்சி, தேர்தல் மட்டுமே அரசியல் அல்ல..!"  - 'நீயா நானா' கோபிநாத்தின் புது ரூட்
"கட்சி, தேர்தல் மட்டுமே அரசியல் அல்ல..!" - 'நீயா நானா' கோபிநாத்தின் புது ரூட்

"கட்சி, தேர்தல் மட்டுமே அரசியல் அல்ல..!" - 'நீயா நானா' கோபிநாத்தின் புது ரூட்

வெறும் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளராக மட்டும் இல்லாமல் இளைஞர்களை நல்வழிப்படுத்துதல், மாணவர்களிடம் நல்ல கருத்துகளை எடுத்துரைத்தல், சமூகத்தின் மீது அக்கறை... எனத் தன் பங்கை சரியாகச் செய்துவருகிறார், கோபிநாத். இந்தப் பண்புகளே அவரை 'தூய்மை இந்தியா' திட்டத்தின் திருச்சி நகரத் தூதுவராக பொறுப்பேற்க வைத்துள்ளது.
 

'தூய்மை இந்தியா' திட்டத்திற்கு திருச்சி நகரின் தூதுவராகச் செயல்பட யார் உங்களை அப்ரோச் செய்தார்கள்? 

"இந்தியாவின் தூய்மையான நகரங்களில் முக்கியமான இடம் திருச்சிக்கு இருக்கிறது. இதன் அடுத்தகட்டமாக, மாதிரிக்கு எடுத்துக்கொள்ளப்படும் நகரங்களின் பட்டியலும் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இன்னும் அதை வேகப்படுத்த வேண்டும் என்ற காரணத்துக்காக என்னைத் தூதுவரா அறிவித்திருக்கிறார்கள். திருச்சி மாநகர ஆணையர்தான் என்னைத் தொடர்புகொண்டு பேசினார். எனக்கு நெருக்கமான ஊர் திருச்சி. என்னை எனக்கு அடையாளம் காட்டிய ஊர். அந்த ஊருக்கு என்னால் ஒரு விழிப்புஉணர்வு ஏற்படுத்த முடியும் என்றால், அது நல்லதுதானே! அதனால் அவர் சொன்னவுடனேயே 'சரி' எனச் சொல்லிவிட்டேன்."

திருச்சி நகரத் தூதுவராக அடுத்து என்னென்ன திட்டங்கள் வைத்துள்ளீர்கள்?  

"இது ஓர் அறிவிப்புடன் மட்டும் நின்றுவிடாமல், ஒரு நல்ல விஷயத்திற்காக அடியெடுத்து வைத்துவிட்டால் அது முழுமை அடையணும். நான் அடிக்கடி இது தொடர்பாக திருச்சி வந்து மக்களைச் சந்திக்கிறேன், நீங்கள் இதுக்காக என்ன நிகழ்ச்சி நடத்தினாலும் அதில் நிச்சயமாக கலந்துகொள்கிறேன் என்று அவர்களிடமே சொன்னேன். திருச்சி மக்களுக்கு தங்களின் நகரத்தின் மேல் மிகுந்த அக்கறை இருப்பதை அவர்கள் செயல்பாடுகளில் நான் பார்க்கிறேன். அடிக்கடி மக்களைச் சந்தித்து இது குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே மாநகராட்சியின் திட்டமாக இருக்கிறது. அதற்கு என்னுடைய தரப்பிலிருந்து முழு ஆதரவையும் அளிப்பேன் "

2016, டாப் 10 தூய்மையான நகரங்கள் பட்டியலில் மூன்றாவது இடத்திலிருந்த திருச்சி, 2017-ல் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறதே?

"கணக்கிலிடப்படும் நகரங்களின் எண்ணிக்கை அதிகமானதால் கொஞ்சம் பின் தள்ளப்பட்டிருக்கிறதே தவிர, செயல்பாடுகளில் இன்னும் முன்னால்தான் இருக்கிறது. எத்தனை நகரங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டாலும் தூய்மை நகர பட்டியலில் திருச்சி முதலிடத்தைப் பெறவேண்டும் என்பதற்காக இதுபோல தூதுவர்களை நியமித்திருக்கிறார்கள். உண்மையிலேயே, திருச்சி கார்ப்பரேஷன் நிறைய திட்டங்களை வைத்துக்கொண்டு மிக அருமையாகச் செயல்படுகிறது. இளைஞர்கள் அனைவரும் ஆர்வத்தோடு களத்தில் இறங்கி வேலை செய்கிறார்கள். சாதாரணமாகக் குப்பைகளைப் பிரித்து அதை உரமாக மாற்றி விவசாயிகளுக்கு இலவசமாகக் கொடுக்கிறார்கள். குப்பைகள் மூலமாகக் கிடைக்கும் வருமானத்தை துப்புரவுத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கிறார்கள். இதை எல்லாம் பார்க்கவே ரொம்பவும் சந்தோசமாக இருக்கிறது. அதனால்தான், நான் மட்டுமல்ல சமூகத்தின் மீது அக்கறைகொண்ட ஒவ்வொருவரும் தூதுவர்தான் என்று சொல்லியிருந்தேன்"
 

இப்போதுள்ள இளைஞர்கள் அரசியல் பார்வை, சுற்றுச்சுழல் எனச் செயல்பட்டு வருகின்றனர். ஒரு சமூகநல ஆர்வலராக இதனை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 "அவங்களுக்குப் பெரிய பங்களிப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து, 'இந்த விஷயம் சரியானதா முதலில் நான் கை கொடுக்கத் தயாராக இருக்கிறேன்' என்று முன் வருகிறார்கள். இளைஞர்களின் சமூகப் பங்களிப்பு என்பது முன்பைவிட அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அவரவர் லெவலிலிருந்து, தான் என்ன செய்யமுடியுமோ அதைக் கச்சிதமாகச் செய்ய நினைக்கிறார்கள், செய்கிறார்கள். தனிப்பட்ட முறையில் நிறைய இயக்கங்கள் மூலம் இந்தச் சமூகத்திற்கு அவர்களது பங்களிப்பை அளித்து வருகிறார்கள். கட்சி, தேர்தல் மட்டும் அரசியல் அல்ல. சமூகப் பணியைச் செய்யத்தான் தேர்தல் என்ற ஒன்றே நடக்கிறது. அந்தச் சமூகப் பணியைத்தான் இளைஞர்கள் செய்து வருகிறார்களே! அப்போ அவர்கள் அரசியலில் இருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம். "

ஏற்கெனவே இருக்கும் கட்சிகளைத் தாண்டி சினிமாக்காரர்களின் அரசியல் பிரவேசம் தொடங்கி உள்ளது. இந்தச் சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

"யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்களால் இவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்களா? மக்களுக்குத் தேவையானவற்றை செய்யத் தயாராக இருக்கிறார்களா? என்பதுதான் முக்கியம். மக்கள் எப்போதும் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். நாம் மேலிருந்து அரசியலை கவனிப்பதைவிட, அரசியலோடு தொடர்பில் இருக்கும் மக்களுக்கு, யார் வந்தால் இந்த நேரத்தில் சரியா இருக்கும் என்பது தெரியும். அதற்குத் தகுந்த மாதிரி அவர்கள் அடையாளம் கண்டுகொள்வார்கள்"  

அடுத்த கட்டுரைக்கு