Published:Updated:

''நீட் தேர்வு... வீரமணி சொல்லும் மகாராஷ்டிரா அரசின் உத்தரவு என்ன..?'

''நீட் தேர்வு... வீரமணி சொல்லும் மகாராஷ்டிரா அரசின் உத்தரவு என்ன..?'
''நீட் தேர்வு... வீரமணி சொல்லும் மகாராஷ்டிரா அரசின் உத்தரவு என்ன..?'

மருத்துவ மேற்பட்டப்படிப்புக்கு மகாராஷ்டிராவில் எம்.பி.பி.எஸ் படித்தவர்களுக்கு மட்டுமே சீட் உண்டு' என்று அம்மாநில உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அதற்கான ஆணையைப் பிறப்பித்துள்ளது மகாராஷ்டிரா அரசு.

'நீட் தேர்வின் அடிப்படையில் எம்.பி.பி.எஸ், பல் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும்' என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுபோலவே, மருத்துவ உயர்கல்விக்கும் (பட்ட மேற்படிப்பு) நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் , '612 எம்.டி சீட், 338 எம்.எஸ் சீட், 342 பி.ஜி டிப்ளமோ சீட்' என்று மொத்தம் 1,582 சீட்கள் உள்ளன. இந்த மொத்த சீட்களையும், மத்திய அரசும் மாநில அரசும் ஆளுக்குப் பாதியாக நிரப்பிக்கொள்கிறார்கள். இதில், மாநில அரசு கோட்டாவிலும் மத்திய அரசின் கோட்டாவிலும் பட்ட மேற்படிப்புக்கான நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே சேர முடியும். அதுவும், நீட் தேர்வில் வெற்றி பெற்ற மற்ற மாநில மாணவர்களும் மாநில கோட்டாவில் கலந்துகொள்ள முடியும் என்ற நிலை உள்ளது. 

இதுகுறித்து, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ''மத்திய அரசின் சுகாதாரத் துறையில், நீட் தேர்வு என்பது ஆக்டோபஸ் என்ற எட்டுக்கால் பிராணியின் கால்கள்போல் விரிந்து, பரந்து பல துறைகளையும் அடைத்துக்கொள்ளும் சமூக அநீதி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் நிகழ்ந்து வருகின்றது. உச்சநீதிமன்றத்தில் வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரி போட்ட வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, உச்சநீதிமன்றம் அவசரக் கோலத்தை அள்ளித் தெளித்தது போன்ற ஒரு தீர்ப்பை மாநிலங்கள் மீது திணிக்கும் நிர்பந்தச் சூழ்நிலையால், கிராமப்புற மாணவர்கள், ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்கள் நிலை பரிதாபமாக பல அனிதாக்களை உருவாக்கி விடுமோ என்ற அச்சத்தை உண்டாக்கியிருக்கிறது.

இந்நிலையில், எம்.பி.பி.எஸ் ஆரம்பித்து, பட்ட மேற்படிப்பிலும் அதன் மூக்கு நுழைக்கப்படும் நிலையில், மகாராஷ்டிரா மாநில அரசு வெளியிட்டுள்ள ஓர் ஆணை மிக முக்கியமானதாகும். 'மருத்துவ பட்ட மேற்படிப்பு ( P.G .) படிக்க முன்வருவோர், அந்த மாநிலத்தில் எம்.பி.பி.எஸ் படித்தவராக இருந்தால்தான் வாய்ப்பு கிட்டும்; மனு போடும் தகுதியே அதனடிப்படையில்தான்' என்று அந்த அரசு ஆணை வற்புறுத்துகின்றது. இதன்படி பட்ட மேற்படிப்புக்கு மனு போடுவோர், மகாராஷ்டிரா மாநிலத்தில் எம்.பி.பி.எஸ் படித்தவராகவே இருக்க வேண்டும் (இது, 22-2-2018 இல் வெளியிடப்பட்டுள்ள ஆணையாகும்). 

இதை, நமது தமிழ்நாடு அரசு அப்படியே தமிழ்நாடு அரசுக்குரிய ஆணையாகப் போடலாம். உடனடியாகத் தாமதிக்காமல் போட வேண்டும். அதே வழிகாட்டும் முறைகளை தமிழ்நாட்டு அ.தி.மு.க அரசு, சுகாதாரத் துறை பின்பற்றினால், குறைந்தபட்சம் நமது மாநிலத்தில் எம்.பி.பி.எஸ் படித்த நமது மாணவ, மாணவிகள் பலனடைய வாய்ப்பு ஏற்படும். அதிகமான அரசு மருத்துவக் கல்லூரிகள் (சுமார் 26) தமிழ்நாட்டில்தான் உள்ளன. அதில், பட்ட மேற்படிப்புக்கான இடங்களும் (P.G. Seats) இரட்டை இலக்கத்தில் உள்ளது நமது தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகளில்தாம். எனவே, இந்த இடங்களை நோகாமல் வந்து பிற மாநிலத்தவர் அபகரித்துக்கொள்ளாமல் தடுக்க இப்படியோர் அரசு ஆணை அவசரம், அவசியம். 

தமிழ்நாடு முதலமைச்சர், மருத்துவக் கல்லூரிக்குரிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மற்றும் அமைச்சரவை உடனடியாக இதில் கவனம் செலுத்தி, அரசாணை வெளியிடலாம். உயர்நீதிமன்றத்தில் யார்  வழக்குப் போட்டாலும்கூட, மகாராஷ்டிரா மும்பை உயர்நீதிமன்றத்தில் ஆன்-லைன் மூலம் போடும் விண்ணப்பம் பற்றிய தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, நமது நோக்கம் நிறைவேற்றப்பட வாய்ப்பும்கூட ஏற்படும்'' என்று கூறியுள்ளார்.

சமுக சமத்துவத்துக்கான மருத்துவர் அமைப்பின் பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத், '' வீரமணி சொல்லியிருக்கும் கருத்து வெளிமாநில மாணவர்களைத் தடுக்க முழுமையானத் தீர்வாக இருக்காது. அதாவது, நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில், அகில இந்திய இட ஒதுக்கீட்டில் தமிழகத்தில் படிப்போர், தமிழ்நாட்டில் மருத்துவம் படித்ததாகவே இருக்கும். எனவே, தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் படித்தவர்களுக்கு என்று சொன்னால் வெளிமாநிலத்தவரும் வர வாய்ப்பு இருக்கிறது. எனவே, 10 ம் வகுப்பு, 12 ம் வகுப்பு, எம்.பி.பி.எஸ் ஆகிய படிப்புகளை தமிழகத்தில் படித்திருக்க வேண்டும் என்று அரசாணை வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும். மேலும், தமிழகத்தில் ஐந்தரை ஆண்டுகள் இருந்தாலே 'தமிழகத்தில் குடியிருப்பவர்'  என்று சான்றிதழ் கொடுக்கிறார்கள். ஏனென்றால், தமிழகத்தில் மருத்துவம் படிக்கும் வெளிமாநில மாணவர்கள், இங்கே மருத்துவப் படிப்பை ஐந்தரை ஆண்டுகள் படிக்கிறார்கள். இந்த ஐந்தரை ஆண்டுக் கணக்கை வைத்துப் பார்த்தால், அவர்களும் தமிழகத்தில் வாழ்ந்தார்கள் என்ற இருப்பிடச் சான்று பெற்றுவிடுவார்கள் என்பதால், இப்போதுள்ள விதிகளின்படி மாநிலக் கோட்டாவிலேயே அவர்களுக்கும் இடம் கிடைத்துவிடும். எனவே, இந்த ஐந்தரை ஆண்டு என்பதை உயர்த்த வேண்டும் என்று தமிழகச் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். எனவே, தமிழக மாணவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாக்க தமிழக அரசு விழிப்புடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

செய்யுமா எடப்பாடி பழனிசாமி அரசு..?