Published:Updated:

'ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் உண்ணாவிரதம் ஏன்?' காவிரி போராட்டத்தில் நிறம்மாறும் காட்சிகள் #WeWantCMB

'ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் உண்ணாவிரதம் ஏன்?' காவிரி போராட்டத்தில் நிறம்மாறும் காட்சிகள் #WeWantCMB
'ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் உண்ணாவிரதம் ஏன்?' காவிரி போராட்டத்தில் நிறம்மாறும் காட்சிகள் #WeWantCMB

'ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் உண்ணாவிரதம் ஏன்?' காவிரி போராட்டத்தில் நிறம்மாறும் காட்சிகள் #WeWantCMB

மிழகத்தில் காவிரி நீருக்கான போராட்டம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, தமிழக அரசியல் கட்சிகள், விவசாயச் சங்கங்கள், வணிகர் சங்கங்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என்று பல்வேறு தரப்பினர் போராடி வருகிறார்கள். 'உண்ணாவிரதம், கடையடைப்பு,  வழக்கறிஞர்களின் நீதிமன்றப் புறக்கணிப்பு, மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போடும் போராட்டம், கவர்னர் மாளிகை முற்றுகை...' என வெவ்வேறு நிலைகளில் போராட்டக் களமாகி இருக்கிறது தமிழ்நாடு. இதில் உச்சகட்டமாக, தஞ்சை மாவட்டத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் தேசியக் கொடியை எரித்து, அந்தப் படத்தை வாட்ஸ்அப்பில் வெளியிட்டது இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு சுங்கவரி (டோல்கேட் வரி) செலுத்த மாட்டோம் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியினர் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர். மேலும், பல இடங்களில் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். 

இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி, ஏப்ரல் 3-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரதப் போராட்டத்தை அ.தி.மு.க நடத்தியது. இந்தப் போராட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் எம்.பி-க்களும் எம்.எல்.ஏ-க்களும் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது பெயர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்போர் பட்டியலில் இடம் பெறவில்லை. ஆனால், அவர்கள், இருவரும் சென்னையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் காலையிலேயே வந்து கலந்துகொண்டனர். திடீர் என்று அவர்கள், இந்த உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. 

காவிரி நதிநீர் பிரச்னையில், 'டிசம்பர் 11-ம் தேதி 1991-ம் ஆண்டு, இடைக்காலத் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது. அதன்படி, கர்நாடக அரசு உரிய அளவு தண்ணீரைத் தர மறுத்தது. இதையடுத்து, ஜூலை 1993 -ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் சமாதி அருகே, காவிரி நீருக்காக உண்ணாவிரதம் இருந்தார். மேலும், மார்ச் 18-ம் தேதி 2007-ம் ஆண்டு அப்போதைய தமிழக எதிர்கட்சித் தலைவர் ஜெயலலிதா காவிரி இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிடக்கோரி  ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார்' என்பதையும் சுட்டிக்காட்டி அ.தி.மு.க மூத்த தலைவர்கள் சிலர் தற்போது இவர்கள் இருவரும் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறார்கள். மேலும், போராட்டங்களுக்கு எதிராக நீதிமன்றம் எவ்விதத் தடையும் விதிக்காததால் எந்தச் சட்டச்சிக்கலும் இல்லை என்றும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.  

மேலும், எம்.நடராஜன் மரணம் அடைந்து துக்கம் அனுசரித்துக் கொண்டிருந்த நிலையிலும் டி.டி.வி.தினகரன் தஞ்சையில் காவிரிக்காக உண்ணாவிரதம் இருந்து தனது பலத்தைக் காட்டிவிட்டார். தி.மு.க.  உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் இந்தப் பிரச்னையில் தீவிரமாக உள்ளன என்றும் தமிழக அரசியல் சூழ்நிலையை அவர்கள், எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். ஆனாலும், அவர்கள் இருவருக்கும் ஒரு தயக்கம் இருந்திருக்கிறது. அதாவது, முதல்வரும் துணை முதல்வரும் உண்ணாவிரதம் இருந்தால் டெல்லி மேலிடத்தின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமோ என்பதுதான் அவர்களின் கலக்கத்துக்கு காரணம்.

இப்போது, பி.ஜே.பி-யின் நிழல் அரசு என்று இந்த அரசை குறை சொல்வது போல மக்கள், மீம்ஸ் போட்டு கலங்கடிக்கிறார்கள். இத்தகைய குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடவும், காவிரிக்காக துணிச்சலாக இருவரும் உண்ணாவிரதம் இருப்பது அ.தி.மு.க செல்வாக்கை தூக்கி நிறுத்தவும் நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள்.மேலும், கவர்னரின் சமீபத்திய செயல்பாடுகள் ஆளுங்கட்சிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது அ.தி.மு.க அரசின் அன்றாட நிர்வாக நடவடிக்கைகளில் கவர்னர் தலையிடுவதாக ஆளுங்கட்சி பார்க்கிறது. கடந்த ஞாயிறு அன்று காவிரிப் பிரச்னை போராட்டத்துக்கு இடையே தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் போன்றவர்களை கவர்னர் அழைத்துப் பேசியதை ஆளுங்கட்சி ரசிக்கவில்லை. எனவேதான் இந்த அரசியல் சூழலை எல்லாம் அலசி ஆராய்ந்து  இருவரும் தங்கள் மனதை மாற்றிக்கொண்டு 8.15 மணிக்கு உண்ணாவிரதத்துக்கு வந்தார்கள்.

அ.தி.மு.க. இன்னொரு அரசியல் கணக்கையும் முன்வைத்துள்ளது. அதாவது, ''காவிரிப் பிரச்னையை முன்வைத்து எழுந்துள்ள சட்டம் ஒழுங்குச் சிக்கலை காரணம் காட்டி கவர்னரின் ஆலோசனையை ஏற்று அ.தி.மு.க ஆட்சியை கலைத்தால், அடுத்து வரும் தேர்தலைச் சந்திக்க இந்த உண்ணாவிரதப் போராட்டம், ’தேர்தல் துருப்பு சீட்டு’ ஆக இருக்கும் என்ற உற்சாகத்தில்தான் இந்த உண்ணாவிரதத்தை இந்த அளவுக்கு பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருக்கிறது ஆளும்கட்சி தரப்பு. அதற்கு ஏற்றாற்போல், பந்தலை நூதன முறையில் வடிவமைத்துள்ளனர். வருத்தத்தை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிபோல அல்லாமல், உற்சாகமாகக் கொண்டாடும் விழா போல, பந்தல் போட்டுள்ளார்கள். மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில் எந்த ஒரு வாசகமும் இடம்பெறாமல் ’மத்திய அரசை வலியுறுத்தி’ என்று ஒரு வார்த்தையை மேடையில் வைத்துள்ள பேனரில் பயன்படுத்தி உள்ளார்கள்.  அ.தி.மு.க மாநாடு, பேரணி போல இந்த உண்ணாவிரத்துக்கான ஏற்பாடுகள் உள்ளன.

அடுத்த கட்டுரைக்கு