Published:Updated:

பலப்படுத்தப்படும் ரஷ்யாவின் அணு ஆயுதக் கிடங்கு... குற்றம்சாட்டும் அமெரிக்கா!

பலப்படுத்தப்படும் ரஷ்யாவின் அணு ஆயுதக் கிடங்கு... குற்றம்சாட்டும் அமெரிக்கா!
பலப்படுத்தப்படும் ரஷ்யாவின் அணு ஆயுதக் கிடங்கு... குற்றம்சாட்டும் அமெரிக்கா!

1991 இல் சோவியத் யூனியன் கலைக்கப்படுகிறது. சோவியத் யூனியனிலிருந்து உக்ரைன், உஸ்பெகிஸ்தான், ஜார்ஜியா, லித்துவேனியா உள்ளிட்ட பல நாடுகள் சுதந்திரம் பெறுகின்றன. அதில் போலந்துக்கும் லித்துவேனியாவுக்கும் இடையே இருக்கும் `சிறு துண்டு' போன்ற நகரம்தான் கலினின்கிராட். தற்போது நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக் கோப்பையின் முக்கிய மைதானம் இங்குதான் இருக்கிறது. இது ரஷ்ய நாட்டுக்கு உட்பட்ட பகுதி. கடந்த இரண்டு வருடங்களாக கலினின்கிராட் பகுதியில் ரஷ்யா தனது அணு ஆயுத அடித்தளத்தைப் பலப்படுத்தி வருகிறது. இந்த அணு ஆயுதக் கிடங்கானது ரஷ்யா - போலந்து எல்லையிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. 

பால்டிக் கடற்கரை அருகில் போலந்துக்கும் - லித்துவேனியாவுக்கும் இடையில் குளிக்கோவோ எனும் ஊரில் இருந்த அணு ஆயுதக் கிடங்கு ஆழமாக்கப்பட்டு, கான்கிரீட் மூலம் மேற்கூரை அமைக்கப்பட்டிருப்பது `அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு' வெளியிட்ட செயற்கைக்கோள் புகைப்படத்தின் மூலம் தற்போது தெரியவந்துள்ளது. 

தனியார் புகைப்பட நிறுவனம் மூலம் பெறப்பட்ட புகைப்படங்கள் மற்றும் சில செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் 2016 இல்  கிடங்குக்காகக் குழி தோண்டப்பட்டதும், 2018 இல் அதைப் புதுப்பித்து மேற்கூரை அமைத்திருப்பதையும் காண முடிகிறது. வெகு விரைவில் செயல்படும் நிலைக்கு இந்த அணு ஆயுதக் கிடங்கு வரவிருக்கிறது. 

இதற்கு முன்பு 2002 ம் ஆண்டு மற்றும் 2010 ம் ஆண்டுக்கு இடையே வெளிப்புறப் பாதுகாப்புச் சுவர் புதுப்பிக்கப்பட்டது. மிகவும் பலமான சுற்றுப்புற வேலியாக இது இருக்கிறது. ஏனெனில், இந்தக் கிடங்கு மூன்று அடுக்குச் சுற்றுச்சுவர் பாதுகாப்பு கொண்டது. பொதுவாக ரஷ்யாவின் அணு ஆயுதக் கிடங்குகள் இப்படியான பலமான பாதுகாப்புடன்தான் வடிவமைக்கப்பட்டிருக்கும். நாள்கள் ஆக ஆக சீரமைக்கும் சாதாரண வேலையா அல்லது அணு ஆயுத வளர்ச்சியை போர் உத்திக்காக ரஷ்யா பயன்படுத்தப் போகிறதா என்பதன் விவரம் வெளியாகவில்லை. செயற்கைக்கோள் படங்களை வைத்து மட்டுமே ஒரு முடிவுக்கு வர முடியாது. அதனால் கலினின்கிராடை ரஷ்யா தனது போர்த்தந்திரத்துக்காகவும், ஏற்கெனவே பலவகையான ஆயுதங்களை சேமித்து வைத்திருக்கும் தனது மத்தியக் கிடங்குக்கு மாற்றாகவும் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது.

இந்த கலினின்கிராட் கிடங்கானது ரஷ்யாவின் வான்படை, கப்பல்படை, கடலோரப் பாதுகாப்புப் படை ஆகியவற்றுக்கு அணு ஆயுதம் வழங்கும் அளவுக்குத் திறன் வாய்ந்தது. ``கலினின்கிராட் குளிக்கோவோவில் அணு ஆயுதக் கிடங்கு இன்று நேற்று அமைக்கப்படவில்லை. எப்போதோ அமைக்கப்பட்டுவிட்டது." என்றார் அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பின் ஆணு ஆயுதத் தகவல் இயக்குநர் ஹான்ஸ்.எம்.கிறிஸ்டன்சென். ஃபிஃபா உலகக் கோப்பையின் முக்கிய மைதானங்களுள் ஒன்றான கலினின்கிராட்டில் அணு ஆயுதக் கிடங்கு விரிவாக்கம் சற்று பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், கலினின்கிராட் கிழக்கு ஐரோப்பாவின் மையப்பகுதி.

இந்த ஆண்டு ஜனவரியில் ரஷ்ய ராணுவம் கூறுகையில், `` `இஸ்காண்டர்-எம்' வகை ஏவுகணைகளை நிரந்தரமாக நிறுவுவதற்கு ஏற்ப தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவோம். 500 கிலோமீட்டர் தொலைவு வரை தாக்கி அழிக்கும் வகையில் அந்த அணு ஆயுதங்கள் இருக்கும். இந்த ஆண்டின் முற்பகுதியிலேயே இது தயார்நிலைக்கு வந்துவிடும்." என்று அறிவித்திருந்தது.

இதுபற்றி அமெரிக்கா, `` `இஸ்காண்டர்ஸ்' வகை ஏவுகணைகள் அதிகத் தொலைவு சென்று தாக்கும் திறனுடையவை. அவற்றை பயன்படுத்துவதன் மூலம் 1987 இல் போடப்பட்ட `இடைநிலை வரம்பு அணு சக்தி ஒப்பந்த'த்தை ரஷ்யா மீறுகிறது" என்று கூறியுள்ளது. அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் இருக்கிறது.

ரஷ்யாவின் ராணுவமும், கப்பற்படையும், அணு ஆயுதங்கள் மட்டுமல்லாமல் போர் உத்திகளை சிறப்பாகக் கையாளும் கப்பல்களைத் தாக்கும் ஏவுகணைகள், நிலத்தில் தாக்கும் ஏவுகணைகள், விண்ணில் தாக்கும் ஏவுகணைகள் ஆகியவற்றையும் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.