Published:Updated:

``வழக்கறிஞர் ஆயிட்டேன்... அதைப் பார்க்கத்தான் அம்மா இல்லை!" - திவ்யபாரதி

``வழக்கறிஞர் ஆயிட்டேன்... அதைப் பார்க்கத்தான் அம்மா இல்லை!" - திவ்யபாரதி

``வழக்கறிஞர் ஆயிட்டேன்... அதைப் பார்க்கத்தான் அம்மா இல்லை!" - திவ்யபாரதி

``வழக்கறிஞர் ஆயிட்டேன்... அதைப் பார்க்கத்தான் அம்மா இல்லை!" - திவ்யபாரதி

``வழக்கறிஞர் ஆயிட்டேன்... அதைப் பார்க்கத்தான் அம்மா இல்லை!" - திவ்யபாரதி

Published:Updated:
``வழக்கறிஞர் ஆயிட்டேன்... அதைப் பார்க்கத்தான் அம்மா இல்லை!" - திவ்யபாரதி

``நீங்கள் என்னைத் தண்டியுங்கள்; அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. ஏனெனில்  வரலாறு எனக்கு நீதி வழங்கும்" - ஃபிடல் காஸ்ட்ரோ என்னும் மாபெரும் புரட்சியாளனின் வீரமிக்க உரை இது. இப்போது இந்த உரை, ``கக்கூஸ்" ஆவணப்பட இயக்குநர் திவ்யாவைப் பார்க்கும்போது நம் நினைவுக்கு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே சட்டப்படிப்பை முடித்தபோதிலும் அவருக்கு எதிராகப் போடப்பட்டுள்ள வழக்கை காரணம்காட்டி, வழக்கறிஞராக அவர் பணியாற்றுவதற்குத் தடை ஏற்பட்டது. அவருடைய கடுமையான சட்டப் போராட்டத்துக்குப் பிறகு தற்போது வழக்கறிஞராக அவர் பதிவு செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த திவ்யபாரதி ஒரு சமூகச் செயற்பாட்டாளர். `கக்கூஸ்' என்ற ஆவணப்படத்தை இயக்கியதன் மூலம் துப்புரவுப் பணியாளர்களின் அவலங்களை தோலுரித்துக் காட்டினார். அந்தப் படத்துக்குத் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டபோது, கேரளாவில் திரையிடப்பட்டு விருதைப் பெற்றது. பன்முகத் திறமைகளைக்கொண்ட திவ்யா, தன் சட்டப்படிப்பை 2015- ல் முடித்தார். 2016- ம் ஆண்டில் வழக்கறிஞராகப் பணியாற்றுவதற்கு தமிழ்நாடு - புதுச்சேரி பார்கவுன்சிலில் பதிவுசெய்தார். ஆனால், அவர்மீது வழக்குகள் இருப்பதாகக் கூறி, திவ்யாவின் பார்கவுன்சில் பதிவுக்கான கோப்புகள் கிடப்பில் போடப்பட்டன. அதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அவர் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம். பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு, திவ்யா வழக்கறிஞராகப் பதிவுசெய்வதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து ஜூன் 27- ம் தேதி திவ்யா, முறைப்படி வழக்கறிஞராகப் பணியாற்ற உறுதி ஏற்றுக்கொண்டார்.

இதுகுறித்துப் பேசிய திவ்யபாரதி, ``2015- ல் நான் சட்டப்படிப்பை முடித்த ஆண்டில், உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் பொதுவான உத்தரவு ஒன்றைப் போடுகிறார். குற்றப்பின்னணி உள்ள சட்டப்படிப்பு மாணவர்கள் யாரையும் வழக்கறிஞராகப் பதிவு செய்ய அனுமதிக்கக் கூடாது என்பதே அந்த உத்தரவாகும். அந்த நேரத்தில் என்மீது இரண்டு வழக்குகள் இருந்தன. இதனால், நான் சட்டப் படிப்பை முடித்தபோதிலும், முறையாக பார்கவுன்சிலில் அதைப் பதிவு செய்ய முடியாமல் போனது. அந்த நேரத்தில் நீதிமன்றத்தில் இருந்து இடைக்கால உத்தரவு வந்திருந்தது. அதில் `உங்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவாகி இருந்தாலும், தண்டனைக் காலம் குறைவாக இருந்தால் பார்கவுன்சிலில் பதிவு செய்ய முடியும்' என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பார்கவுன்சில் மாதிரிப் படிவம் கிடைத்தபோது, என் மீதுள்ள வழக்குகள் மூன்றாக அதிகரித்திருந்தது. இந்த மூன்று வழக்குகளுமே விளிம்புநிலை மக்களின் மீதான தாக்குதலை எதிர்த்துப் போராடியதற்காகப் போடப்பட்ட வழக்குகளே.

அந்த மூன்றில் ஒரு வழக்கில் ஏழு ஆண்டுகள் தண்டனைக் காலமாக இருந்தது. பின்னர் அந்தத் தண்டனையிலிருந்து விடுக்கப்பட்டேன். இதனால், வழக்கறிஞராகப் பதிவுசெய்ய முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டபோது, கக்கூஸ் ஆவணப்படம் திரையிடுவதற்குத் தடை ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கின் விசாரணை நடைபெறுவதால், வழக்கறிஞராகப் பதிவு செய்வதற்கு தடை தொடர்ந்தது. இந்தநிலையில்தான் வழக்கறிஞராகப் பதிவு செய்வது தொடர்பாக நீதிபதி கிருபாகரன் அளித்த உத்தரவை எதிர்த்து நான் வழக்கு தொடர்ந்தேன். அதில் தற்போது எனக்கு நீதி கிடைத்துள்ளது. எந்த நீதிபதி அந்த உத்தரவைப் பிறப்பித்தாரோ, அவரது தலைமையிலேயே எனக்கு வழக்கறிஞருக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடந்தது.

நீதிபதி கிருபாகரனின் உத்தரவால், ஐந்தாண்டு காலம் சட்டப்படிப்பு படித்த ஏராளமானோர் பெற்ற பி.எல். பட்டம் எதற்கும் பயன்படாமல் கிடக்கிறது. அரசியல்ரீதியான, சமூகப் பாதுகாப்புக்காக நடைபெறும் போராட்டங்களில் பங்கேற்கும் என்னைப் போன்றவர்களைக் குற்றவாளியென முத்திரை குத்துவதால், வழக்கறிஞராகப் பணியாற்றக்கூடிய எங்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுகின்றன. சட்டப்படிப்பு முடித்த எங்களைப்  போன்றவர்கள்மீது இந்த அரசு, பொய் வழக்குகளை பதிவுசெய்து வருகிறது. இப்படியான சூழலில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், நான் பெற்ற உத்தரவு, என்னைப் போன்ற ஏராளமானோருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. எனக்குக் கிடைத்த தீர்ப்பின் அடிப்படையில், மேலும் பலரும் வழக்கு தொடுத்து வழக்கறிஞராகப் பதிவு செய்யக்கூடிய உரிமையைப் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.

தவிர, நான்தான் என் குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி. அதிலும் சட்டப்படிப்பை முடித்துள்ளேன். என்னை வழக்கறிஞராக்கிப் பார்க்க வேண்டும் என்று என் அம்மா மிகவும் ஆசைப்பட்டார். ஆனால், நான் படித்துக்கொண்டிருந்தபோதே, அவர் மரணடைந்து விட்டதால், அவரின் கனவு நிஜமாவதை அவரால் பார்க்க முடியாமல் போய் விட்டது.

வழக்குகள் காரணமாக, நான் வழக்கறிஞராகப் பதிவுசெய்வதற்குத் தடை ஏற்பட்டபோது, தினமும் என்னுடைய அப்பா புலம்ப ஆரம்பித்து விட்டார். `நான் சாகறதுக்குள்ள நீ வழக்கறிஞராகி விடுவியாம்மா' என்று இந்த நான்கு ஆண்டுகளில் ஓராயிரம் முறையாவது அவர் என்னிடம் கேட்டிருப்பார். அதற்காகவாவது, பார்கவுன்சிலில் பதிவு செய்வதற்கான முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று தவித்துக்கொண்டிருந்தேன். தற்போது, அதில் எனக்கு வெற்றி கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. சமூகப் பிரச்னைகளை தொடர்ந்து திரையிலும், நீதிமன்றத்திலும் பேசுவதே இனி என் கடமையாக இருக்கும். குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராகச் செயல்படுவதே என்னுடைய முக்கியக் குறிக்கோள்" என்றார்.