Published:Updated:

"'கறுப்பை'க் கண்டாலே தமிழக அரசு அலறுவது ஏன்? " ஓய்வுபெற்ற நீதிபதி கேள்வி !

"'கறுப்பை'க் கண்டாலே தமிழக அரசு அலறுவது ஏன்? " ஓய்வுபெற்ற நீதிபதி கேள்வி !
"'கறுப்பை'க் கண்டாலே தமிழக அரசு அலறுவது ஏன்? " ஓய்வுபெற்ற நீதிபதி கேள்வி !

ல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதிநாளில், கறுப்புச் சட்டை அணிந்திருப்பவர்களை பார்த்தாலே போலீஸார் துரத்தி துரத்தி அடித்தனர். அந்தப் போராட்டம் ஓய்ந்தாலும் கறுப்புச் சட்டை மீதான வெறி போலீஸாருக்கு இன்னும் ஓயவே இல்லை!

மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக தமிழகத்தில் எங்கு போராட்டம் நடந்தாலும் அங்கு கறுப்புச் சட்டை அணிந்திருப்பவர்கள் நின்றிருந்தால்,  போலீஸார் துருவித் துருவி விசாரிக்கின்றனர். குறிப்பாக ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தியபோது இரண்டு, மூன்று பேர் கறுப்புச் சட்டை அணிந்து கொண்டு மெரினா கடற்கரையில் வலம் வந்தால் போதும் போலீஸார் விரட்டி அடித்தனர். இப்படியான சூழலில், தற்போது தலைமைச் செயலகத்தில் கறுப்புச் சட்டை அணிந்து சென்றால், தடுத்து நிறுத்தப்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்தத் தடை உத்தரவு கடந்த மூன்று ஆண்டுகளாக  அமலில் இருப்பதாகவும் போலீஸார் கூறுகின்றனர். 

இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'கறுப்புச் சட்டை மற்றும் கறுப்பு உடை அணிந்து வரக்கூடாது என்ற தடை உத்தரவு இருப்பதாகக் கூறி, அங்குள்ள காவலர்கள் கறுப்புச் சட்டை அணிந்து வருவோரைத் தடுப்பதாக வந்துள்ள செய்தி மிகவும் கண்டனத்துக்குரியது. இது பகுத்தறிவுக்கும் மனித உரிமைகளுக்கும் விரோதமான மனித உரிமைப் பறிப்பு நடவடிக்கை ஆகும். இவையெல்லாம் முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்கும் தெரிந்துதான் நடக்கிறதா? இதுகுறித்து முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும். மேலும் இதுகுறித்து அரசுத் தரப்பிலிருந்து வாய்மொழி உத்தரவாகவோ ஆணையாகவோ வெளியிடப்பட்டிருந்தால் அதனை அகற்ற வேண்டும்' எனக் கூறியுள்ளார்.

மேலும் அதே அறிக்கையில்,

'முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மற்ற அ.தி.மு.க-வினர் தொடங்கி, அனைத்து அரசியல் கட்சியினரும் அவ்வப்போது தங்கள் கோரிக்கைகளுக்காக கறுப்பு உடை அணிந்துதானே வருகிறார்கள்? ஈழத் தமிழர் பிரச்னையில், அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் கறுப்புச் சட்டை அணியவில்லையா? எண்ணுவதும், உண்ணுவதும் அடிப்படை உரிமையாக இருக்கும்போது, உடை அணிவதும், எந்த நிற சட்டைப் போடுவதென்பதும் அவரவர் உரிமையே...! அதைத் தடுப்பது அரசமைப்புச் சட்ட அடிப்படை உரிமைப்படி தவறு மட்டும் அல்ல, சட்ட விரோதமும் ஆகும். இச்செயலுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்' எனவும் கூறியுள்ளார் கி.வீரமணி. 

இதுகுறித்து ஓய்வுப் பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமனிடம் பேசியபோது, "தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்துக்குள் (secretariat) செல்வோர் கறுப்பு நிற உடை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியார் பெயரிலும், அண்ணா பெயரிலும் ஆட்சி நடத்துபவர்கள் கறுப்பைக் கண்டு மிரளுவது ஏன் ?தந்தை பெரியார் உயிருடன் இன்று இருந்திருந்தால், அவரால் கோட்டைக்குள் செல்லமுடியாது. காரணம் அவர் எப்போதும் கறுப்புநிறச் சட்டையே அணிந்திருப்பார்.

ஒருவர் எந்த நிற ஆடை அணிய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது அவருடைய அக உரிமை (Right to Privacy). அக உரிமையை அரசமைப்புச் சட்டம் பிரிவு 21, அடிப்படை உரிமையாக வரையறுத்துள்ளது. 'இந்த அக உரிமையை அரசு, பறிக்க முடியாது' என்று அண்மையில் உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அமர்வு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசு இப்போது விதித்திருக்கும் இத்தகைய உடை கட்டுப்பாடு என்பது அத்தீர்ப்புக்கு விரோதமானது 

மேலும், ஐயப்பப் பக்தர்கள்கூட கறுப்பு நிற ஆடையை அணிகிறார்கள். இது அவர்களின் மத நம்பிக்கை சார்ந்த விவகாரம். அப்படி அவர்கள் மத நம்பிக்கையின் அடிப்படையில் உடை அணிவதை அரசமைப்பு சட்டத்தின் பிரிவு 25 அடிப்படை உரிமை என்று பிரகடனப்படுத்துகிறது. அந்த அடிப்படை உரிமையையும் அரசு, பறிக்க முடியாது.

வேட்டி அணியக் கூடாது என்று உடை சம்பந்தமானக் கட்டுப்பாட்டை கிளப்புகள் (clubs)    விதித்ததற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்ததுடன், உரிய சட்டம் இயற்றி வேட்டி அணியும் உரிமையை நிலை நாட்டினார். ஆனால், ஜெயலலிதாவின் பெயரில் ஆட்சி நடத்தும் தமிழக அரசு, கறுப்பு உடை அணிவதை தடை செய்வது சரியா? 

'தமிழ்நாடு அரசு விதித்துள்ள உடை கட்டுப்பாடு தவறு என்றும் அதைப் பேசி சரி செய்யலாம்' என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பது ஆறுதல் அளிக்கும் செயல். எனவே இதனை தமிழக அரசு உடனடியாக நீக்க வேண்டும்." என்றார்