Published:Updated:

அச்சுறுத்தும் விலையேற்றம் - பணமதிப்பிழப்பால் தடுமாறும் வெனிசுலா!

மிகச்சிறிய அளவிலான பணப் பரிமாற்றத்துக்கும் கூட எலெக்ட்ரானிக் பரிவர்த்தனை செய்துகொள்ளும் மக்கள் ஒருபுறமிருக்க, சொற்ப வருமானத்தில் அன்றாட தேவைகளையே பெற முடியாதவர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள்.

அச்சுறுத்தும் விலையேற்றம் - பணமதிப்பிழப்பால் தடுமாறும் வெனிசுலா!
அச்சுறுத்தும் விலையேற்றம் - பணமதிப்பிழப்பால் தடுமாறும் வெனிசுலா!

ரு நாளில் இந்தியர்கள் அனைவரையும் பீடித்துக்கொண்ட கலவர மனநிலையை ஏற்படுத்தியது பணமதிப்பிழப்பு அறிவிப்பு. வரிசை வரிசையாக ஏ.டி.எம் வாசல்களில் நின்ற ஒவ்வொருவரிடம் ஆயிரம் அவஸ்தையும், கதைகளும் இருந்தன. குறைந்தது சில வருடங்களுக்காவது மறந்துவிட முடியாத இன்னல்களை அனுபவித்த இந்தியர்களின் நிலையில்தான் தற்போது இருக்கிறார்கள் வெனிசுலா நாட்டு மக்கள்.

இந்தியாவில் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டுக் கொஞ்ச நாள்களில், வெனிசுலா தனது நூறு 'பொலிவர் பில்' பணங்களைச் செல்லாது என அறிவித்தது. மக்கள் போராட்டங்களில் இறங்கியதும், அறிவிப்பைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்தது வெனிசுலா. பணமதிப்பிழப்பு அறிவித்தபோது, தனது 100 பொலிவருக்கு மாற்றாக 500 பொலிவர் புழக்கத்தில் இருக்கும் என அறிவித்தது வெனிசுலா அரசு. ஆனால், 500 பொலிவர்கள் புழக்கத்துக்கு வருவதற்கு முன்பே பழைய பொலிவர்கள் தடை செய்யப்பட்டன. இது மிகப் பெரிய பிரச்னைகளையும் கிளர்ச்சியையும் ஏற்படுத்தியது. ``எண்ணெய் வளம் அதிகம் இருந்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கூட்டுசேர்ந்து, நாட்டை அதிபர் நிக்கோலஸ் மதுரோ சீரழித்துவிட்டார்” என அந்நாட்டின் எதிர்க்கட்சியான ஒருங்கிணைந்த ஜனநாயக வட்டமேசை குற்றம்சாட்டியது. வங்கிகளில் வரிசையில் நின்ற மக்களும் தங்களிடம் இருந்த செல்லாத பணத்துக்கு மாற்றுப்பணம் கிடைக்காததால், போராட்டத்தில் இறங்கினார்கள். இதனால் வெனிசுலாவில் 4 பேர் மரணமடைந்தனர். 286 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவை அனைத்தும் எதிர்க்கட்சியின் பொறுப்பற்ற நிலைப்பாட்டால்தான் நிகழ்ந்தது என அதிபர் மதுரோ சளைக்காமல் குற்றம்சாட்டினார்.

``இனிமேல் சில காலத்துக்கு நீங்கள் உங்கள் அன்றாடத் தேவைகளுக்கு 100 பொலிவர்களையே உபயோகித்துக் கொள்ளலாம்” என மறுபடி அறிவித்தார் அதிபர் நிக்கோலஸ் மதுரோ. இதனால் வெனிசுலாவில் செல்லாது என அறிவிக்கப்பட்ட 100 பொலிவர் பில் நோட்டுகள் மீண்டும் புழக்கத்தில் இருந்தன. இதைத் தொடர்ந்து, இம்மாதம் 20-ம் தேதி மறுபடி கொண்டுவரப்பட்ட, மறு பணமதிப்பு மாற்றத்தால், சரிந்திருக்கிறது வெனிசுலாவின் பொருளாதாரம்.

சோவெரின் பொலிவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ள, 2, 5, 10, 20, 50, 100, 200 மற்றும் 500 என்னும் மதிப்பிலான பணமும், இரண்டு புதிய நாணயங்களும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஒவ்வொரு இருபத்தி ஆறு நாள்களுக்கும் ஒருமுறை சராசரியைவிட இரண்டு மடங்கு அதிகரிக்கும் விலையேற்றத்தைக் கண்டு நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள் அம்மக்கள். அடிப்படைத் தேவைகளான உணவு, மற்ற வீட்டு உபயோக அத்தியாவசியப் பொருள்களுக்கும் கூடச் செலவழிக்க வழியின்றி ஒருவேளை உணவுக்கு தங்களைத் தாங்களே சுருக்கிக்கொண்டிருக்கிறார்கள். மிகச்சிறிய அளவிலான பணப் பரிமாற்றத்துக்கும் கூட எலெக்ட்ரானிக் பரிவர்த்தனை செய்துகொள்ளும் மக்கள் ஒருபுறமிருக்க, சொற்ப வருமானத்தில் அன்றாடத் தேவைகளையே பெற முடியாதவர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள்.

கால்களால் வாக்குப் பதிவு செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கியிருக்கிறார்கள் வெனிசுலா பிரஜைகள். ஐ.நாவின் கணக்கெடுப்பின்படி, பொருளாதாரச் சிக்கல் தொடங்கிய 2014-ம் ஆண்டிலிருந்து, 2.3 மில்லியன் வெனிசுலா மக்கள் நாட்டைவிட்டு வெளியேறி கொலம்பியா, ஈக்வடார், பெரு, சிலி போன்ற பக்கத்து நாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். அதே சமயம் வெனிசுலாவுக்குள் வசிப்பவர்களில் ஒரு தரப்பினர், ``அதிபர் மதுரோவோ, முன்னாள் அதிபர் சாவேஸோ இந்நிலைக்குக் காரணமில்லை. ஏகாதிபத்திய நாடுகளின் செயல்பாடுகளாலும், கட்டியமைக்கமுடியாத கடனை வழங்கியுமே வெனிசுலா இந்த நிலைக்கு ஆளாகியுள்ளது” என்ற வாதத்தை முன்வைக்கிறார்கள்.