Published:Updated:

"20 ஆண்டுகளாக போராடுகிறோம்!" - சாலை பராமரிப்பு ஊழியர்களின் அவஸ்தை

"20 ஆண்டுகளாக போராடுகிறோம்!" - சாலை பராமரிப்பு ஊழியர்களின் அவஸ்தை
"20 ஆண்டுகளாக போராடுகிறோம்!" - சாலை பராமரிப்பு ஊழியர்களின் அவஸ்தை

"20 ஆண்டுகளாக போராடுகிறோம்!" - சாலை பராமரிப்பு ஊழியர்களின் அவஸ்தை

சாலை பராமரிப்புப் பணியை தனியாருக்கு வழங்குவதைக் கைவிடுதல், ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சென்னை, சேப்பாக்கத்தில் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு முறையீடு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

சாலையிலுள்ள குழிகளை தார் ஊற்றிச் சீரமைப்பது, சாலையோர முட்புதர்களை அகற்றுவது, சாலையோர மரங்களில் வண்ணம் பூசுவது, சாலைகளின் நடுவில் கோடுகள் வரைவது, வழிகாட்டும் மைல்கற்கள் அமைப்பது, மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் பாதுகாப்பது  உள்ளிட்ட சாலை பராமரிப்பு தொடர்பான அனைத்துப் பணிகளையும் செய்பவர்கள்தாம் சாலை பராமரிப்பு ஊழியர்கள்.

இவர்கள், ``சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை, பணி ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதிய பலன்களுக்குப் பொருந்தக்கூடிய வகையில் அமைத்து அரசாணை வெளியிட வேண்டும். சென்னையில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி கட்டுமானம் மற்றும் மண்டலக் கோட்ட அலுவலகங்களில் உள்ள தரகட்டுப்பாட்டுக்குத் தமிழகம் முழுவதும் காலியாக உள்ள லேப் அட்டண்டர் பணியிடத்துக்குச் சாலைப்பணியாளர்களை நிரப்பிட வேண்டும். பணி நீக்கக் காலத்தில் இறந்த சாலைப்பணியாளர்கள் வாரிசுகளுக்குக் கருணை அடிப்படையில் விதிமுறை தளர்த்தி பணி நியமனம் வழங்க வேண்டும். சாலைப் பராமரிப்புப் பணியைத் தனியாருக்கு வழங்குவதைக் கைவிட்டு, தொடர்ந்து அரசே ஏற்று நடத்த வேண்டும்” உள்ளிட்ட 9 கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போராட்டம் நடத்தினர்.
 
போராட்டத்துக்குத் தலைமை வகித்த தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத் தலைவர் வைரவன் நம்மிடையே பேசும்போது, ``சாலைப் பணியாளர்களாகிய நாங்கள் 1997ல் பணி நியமனம் செய்யப்பட்டோம். அரசால் 2002-ல் பணி நீக்கம் செய்யப்பட்டோம். பின்னர், அன்றைய முதல்வர் சாலைப் பணியாளர்கள் மீது கருணை கொண்டு எங்களுடைய பணியை மீண்டும் வழங்கினார். பணி வழங்கப்பட்ட பிறகு பணி நீக்கத்தில் இருந்த எங்களுடைய 41 மாதக்காலத்தைக் கருத்தில் கொண்டு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையே சாலைப் பணியாளர்களுக்கு `திறன்மிகு இல்லாப் பணியாளர்கள்’ என்று பெயர் மாற்றம் செய்து ஊதியம் வழங்க அரசாணை 338ன் படி உத்தரவிடப்பட்டது. இந்த அரசாணை இன்றுவரை சாலைப் பணியாளர்களுக்குச் செயல்படுத்தித் தரவில்லை.

பல ஆண்டுகளாகப் போராடிவருகிறோம், அதிகாரிகளைச் சந்திக்கிறோம், முறையிடுகிறோம். இன்று நிதிச்செயலகம் இந்தக் கோரிக்கைகளை எங்களுக்கு வழங்கும் சூழல் இருக்கிறது. இது சம்பந்தமாக அதிகாரிகளைச் சந்தித்து நேற்று விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. வருகிற டிசம்பர் மாதத்துக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றிக் கொடுக்கப்படும் என்ற தகவலையும் முதன்மை இயக்குநர் கொடுத்துள்ளார். இன்று நெடுஞ்சாலைத்துறை முதன்மைச் செயலாளரைச் சந்தித்து கோரிக்கை மனுவையும் கொடுக்க இருக்கிறோம். மனுவைப் பரிசீலித்து எங்கள் கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம்” என்று பேசினார்.

பொதுச்செயலாளர் விஜயகுமார் பேசும்போது, ``1997-ல் குறைந்த கல்வித்தகுதி அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறையில் நாங்கள் சேர்ந்தோம். கோரிக்கைகளும் 20 ஆண்டுகள் தீர்க்கப்படாமல்தான் இருக்கின்றன. பணியில் சேர்ந்தது முதல் நாங்கள் போராடிக்கொண்டுதான் இருக்கிறோம். 2021ல் பெரும்பகுதியானவர்கள் ஓய்வுபெறப் போகிறவர்களாகவும் உள்ளனர்.

இதையெல்லாம் பலமுறை நாங்கள் எடுத்துக் கூறியுள்ளோம். ஏற்கெனவே பணி நீக்கம் செய்த காலத்தில் 82 பேர் மரணமடைந்தனர். அவர்களுடைய குடும்பம் இன்று நிற்கதியாக நிற்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் ஏற்படக் கூடாது. ஒருபுறம் சாலைப் பராமரிப்புப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கவும் அரசு சில திட்டங்களைக் கொண்டுள்ளது. எங்களுடைய பணிகளைப் பாதுகாக்கின்ற பொறுப்பு எங்களிடம் உள்ளது. முதல்வரின் கட்டுப்பாட்டில்தான் தமிழக நெடுஞ்சாலைத்துறை உள்ளது. அவரிடம் நேரடியாகவே மனுக்களை நாங்கள் கொடுத்துள்ளோம். எனவே, எங்களது கோரிக்கைகளை டிசம்பர் மாதத்துக்குள் முதல்வர் நிறைவேற்றித் தரவேண்டும்” என்றார்.

வேளாண்மைத்துறை, ஆய்வகநுட்பனர்துறை ஆகியவற்றைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினரும் ஊதியம், பணியிடம் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு