Published:Updated:

`பஃபூன் போலவே செயல்படுகிறார் எடப்பாடி பழனிசாமி!'- மு.க.ஸ்டாலின்

`பஃபூன் போலவே செயல்படுகிறார் எடப்பாடி பழனிசாமி!'- மு.க.ஸ்டாலின்
`பஃபூன் போலவே செயல்படுகிறார் எடப்பாடி பழனிசாமி!'- மு.க.ஸ்டாலின்

`பஃபூன் போலவே செயல்படுகிறார் எடப்பாடி பழனிசாமி!'- மு.க.ஸ்டாலின்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத அளவுக்கு ஊழல் வழக்கில் சிபிஐ விசாரிக்க நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது வெட்கக்கேடானது. ஊழல்குறித்து தி.மு.க மீதும் வழக்கு போடப்படும் என்று பூச்சாண்டி காட்டுகிறார். தைரியம் இருந்தால் வழக்கு போடுங்கள். நாங்கள் மிசாவையே பார்த்தவர்கள் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக  தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தஞ்சாவூர் வந்தார். அவருக்கு நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர்  தொண்டர்களிடம் தேர்தல் நிதியைப் பெற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், அதன்பிறகு மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் தி.மு.க-வில் இணைந்தனர். இதைத் தொடர்ந்து, இன்று வெவ்வேறு இடங்களில் நடந்த தி.மு.க நிர்வாகிகளின் இல்லத் திருமணத்தை மு.க.ஸ்டாலின்  நடத்திவைத்தார். அப்போது, ``இந்தத் திருமனம் சீர்திருத்த, சுயமரியதை, அழகு தமிழ்த் திருமணம். இதை நான் நடத்திவைத்ததில் பெருமைகொள்கிறேன். அதோடு, நாம் குடும்பமாக இருந்து செயல்படுகிறோம் என்பதை இவை காட்டுகிறது. தி.மு.க குடும்பத்தைப் பார்த்து எத்தனையோ தலைவர்கள் ஏளனமாகப் பேசினார்கள். அவர்களின் நிலை என்ன ஆனது என அனைவருக்கும் தெரியும். இப்போது, முதலமைச்சராக இருக்கும் எடுபிடி பழனிசாமி ஜெயலலிதா மறைந்ததாலும், சசிகலா சிறை சென்றதாலும் அதிர்ஷ்டத்தில் முதலமைச்சராக ஆனவர். அப்படிப்பட்ட பழனிசாமி நம்மைப் பார்த்து கம்பெனி என விமர்ச்சிக்கிறார். இதை நான் ஏற்றுக்கொள்கிறேன். கம்பெனி என்றால் அதற்கு ஒரு அந்தஸ்து உண்டு. அதற்கென பங்குதாரர்கள் இருக்கிறார்கள்.

அவர்கள் சர்க்கஸ் கூடாரம் நடத்துகிறார்கள். அதற்கான ரிங் மாஸ்டர் டெல்லியில் இருக்கிறார். இந்த எடுபிடி ஆட்சியை சர்க்கஸ் ரிங் மாஸ்டர் மோடி  இயக்கிவருகிறார். சர்க்கஸில் ரிங் மாஸ்டரைத்தான்  மோடி மஸ்தான் எனச் சொல்வோம். பல்வேறு விலங்குகளை வைத்து, சர்க்கஸ் நிகழ்ச்சிகள் நடக்கும். அதில், இடையிடையே வந்து பபூன் மக்களை சிரிக்க வைப்பார். அந்த பபூன் போலவே செயல்படுகிறார் எடப்பாடி பழனிசாமி. இதை ஆட்சி என்று சொல்லக் கூடாது. கொள்ளை அடிக்கிற கூடாரம் என்றுதான் சொல்ல வேண்டும். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரைவிட அதிகமாக கொள்ளையடிப்பதிலும் ஊழல் செய்வதிலும் தற்போது பதவியில் உள்ளவர்கள் செய்துவருகிறார்கள். இன்று, ஊழல் செய்ததற்காக எடப்பாடி சிபிஐ முன் நிறுத்தப்பட்டிருக்கிறார். ஊழல்குறித்து தி.மு.க மீதும் வழக்கு போடப்படும் என்று எடப்பாடி பழனிசாமி பூச்சாண்டி  காட்டுகிறார். தைரியம் இருந்தால் வழக்குப் போடுங்கள். நாங்கள் மிசாவையே பார்த்தவர்கள். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஒரு முறை சென்னையில் புதிதாகக் கட்டப்பட்ட 9 மேம்பாலங்களில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, மறைந்த தலைவர் கருணாநிதி மற்றும் என்னையும் கைதுசெய்தார்கள். மேலும், புதிதாகக் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தில் முறைகேடு நடந்துள்ளதாகப் புகார் கூறி, விசாரணை கமிஷன் வைத்தார்கள். அவை எல்லாம் எந்த ஆதாரங்களும் இல்லாததால் கலைக்கப்பட்டன. 2ஜி வழக்கு என்னவாயிற்று. அந்த வழக்கு, தேர்தல் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. அந்த வழக்கில் இருந்து கனிமொழி விடுதலைசெய்யப்பட்டார்.

உறவினர்களுக்கு அரசு ஒப்பந்தப் பணிகள் தரக்கூடாது என விதியிருந்தும் எடப்பாடி பழனிசாமி கொடுத்துள்ளார். சாலைகள் போடப்பட்டதில் 3200 கோடி ரூபாய் ஊழல்  நடந்திருக்கிறது என வழக்கு போட்டோம். தைரியம் இருந்தால் இதற்கு நீங்கள் அப்பீல் போக வேண்டியதுதானே. இன்று, அமைச்சர்கள் அனைவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. தமிழகத்தில் எத்தனையோ முதலமைச்சர்கள் மீது ஊழல் புகார் வந்திருக்கிறது. ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத அளவுக்கு ஊழல் வழக்கில் சிபிஐ விசாரிக்க நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது வெட்கக்கேடானது. இதைவிட தலைகுனிவு வேறு என்னவாக இருக்க முடியும். யார் என்ன சொன்னாலும் முதல்வர் பதவி வகிப்பது ஊழல் புரிவதற்காகத்தான். விரைவில் தேர்தல் வர இருக்கிறது. அது எந்தச் சூழ்நிலையில் வரும் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தல் வருகிறதா, இல்லை அதனுடன் சட்டமன்றத் தேர்தலும் சேர்ந்து வருகிறதா எனக் காத்திருப்பதோடு மட்டுமின்றி, தேர்தல் நிதியும் வசூலிக்கப்படுகிறது'' என்றார்.
 

அடுத்த கட்டுரைக்கு