Published:Updated:

கனமழை எதிரொலி - நாகை, திருவாரூர் பயணத்தை ரத்து செய்த எடப்பாடி பழனிசாமி!

கனமழை எதிரொலி - நாகை, திருவாரூர் பயணத்தை ரத்து செய்த எடப்பாடி பழனிசாமி!
கனமழை எதிரொலி - நாகை, திருவாரூர் பயணத்தை ரத்து செய்த எடப்பாடி பழனிசாமி!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பயணம் ரத்து செய்யப்பட்டது. முதல்வருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் 8 அமைச்சர்கள் பங்கேற்று நிவாரண உதவிகளை வழங்கினார்கள்.  

நாகப்பட்டினத்திலிருந்து 7 கி.மீ தொலைவிலுள்ள தெற்கு பொய்கைநல்லூர் சமுதாயக் கூடத்தில் இன்று காலை 8.00 மணிக்கு 100 பெண் பயனாளிகளை தேர்வு செய்து அழைத்து வந்திருந்தார்கள். ஹெலிகாப்டர் மூலம் நாகைக்கு வந்து அங்கிருந்து காரில் முதல்வர் தெற்கு பொய்கைநல்லூருக்கு வருவார் என்று கூறப்பட்டிருந்தது. இப்பகுதியில் காலை முதலே பலத்த மழை தொடங்கிவிட்டது. எனவே, மோசமான வானிலையால் முதல்வர் வர முடியாமல் போனதாகவும் மீண்டும் விரைவில் சாலை மார்க்கமாக வருவார் என்றும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார். தமிழக அமைச்சர்கள் உதயக்குமார், வேலுமணி, தங்கமணி, பெஞ்சமின், எம்.சி.சம்பத், சீனிவாசன், அன்பழகன், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் மதியம் 1.00 மணிக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்கள். கஜா புயலால் உயிரிழந்த குடும்பங்களைச் சேர்ந்த மங்களம், சுந்தரிநீலா, அஞ்சம்மாள் ஆகிய மூவருக்கும் தலா ரூ.10 லட்சத்துக்கான காசோலை, அரிசி, வேட்டிச் சேலை, மண்ணெண்ணெய் பால் பவுடர் போன்றவற்றை வழங்கினார்கள்.  

கால்நடைகள் மற்றும் வீடுகளை இழந்தவர்கள் அனைவருக்கும் உரிய நிவாரண உதவி வழங்கப்பட்டது. அப்போது கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசுகையில், “கஜா புயலால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்திருக்கிறார்கள். மா, தென்னை, முந்திரி, புளி என பயன்தரும் மரங்கலெல்லாம் அழிந்திருக்கிறது.  200 பொக்லைன் இயந்திரங்கள் சாலைகளிலும் கிராமங்களிலும் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி வருகிறது. மேலும், 100 பொக்லைன் இயந்திரம் கேட்டுள்ளோம். சுகாதாரத்துறை மூலம் தொற்று நோய் பரவாமல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீனவர்களின் படகுகள் சேதமடைந்து, வலைகள் வீசியெறியப்பட்டிருக்கிறது. ஆக, பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் என்னென்ன உதவிகள் வேண்டுமோ அனைத்தையும் அரசு செய்துதர இருக்கிறது. ஒடிந்துபோன மின் கம்பங்களைச் சீரமைக்க 3,600 ஊழியர்கள் பணியில் இருக்கிறார்கள். மேலும், ஆந்திரா, கேரளா மாநிலங்களிலிருந்தும் உதவிகள் கோரப்பட்டுள்ளன. ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமையில் 15 நிவாரண குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைக்கும் வகையில் தாயும் தந்தையுமாக இருந்து அனைத்து உதவிகளையும் அம்மாவின் அரசு செய்துதரும் என்பதை உறுதியுடன் கூறுகிறேன்” என்றார்.  

இதேபோல, திருவாரூர் வருகை தரவிருந்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வந்த ஹெலிகாப்டர் கடுமையான மழையால் திருவாரூரில் தரையிரங்க முடியாமல் திருச்சியை நோக்கி திரும்பிச் சென்றது. கஜா புயலின் கோரத்தாண்டவத்தில் சிக்கிய நாகப்பட்டினம், வேதாரண்யம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. வீடு, கால்நடை, பொருள்கள் என அனைத்தையும் இழந்த மக்கள் மனமுடைந்து காணப்படுகின்றனர் இந்நிலையில் கஜா புயலால் பாதித்த திருவாரூர் மாவட்டத்தைப் பார்வையிட தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திருவாரூர் அருகே உள்ள மாங்குடிக்கு வருகிறார், அதற்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க-வினரும் அரசு அதிகாரிகளும் தீவிரமாகச் செய்துவந்தனர். 

ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, திருவாரூர் அருகே மாங்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவிருந்தது. அதற்காக காலை முதல் மக்களை தயார்படுத்தி நிவாரண உதவிகள் வழங்கும் மண்டபத்துக்கு அழைத்துவந்துள்ளனர். ஆனால், முதலமைச்சர் பழனிசாமி வந்த ஹெலிகாப்டர் மழையின் காரணத்தால் தரையிரங்க முடியாமல் மீீண்டும் திருச்சியை நோக்கி திரும்பிச் செென்றது. இதனால் காாலையிலிருந்து காத்திருந்த மக்கள் பெரிய ஏமாற்றம் அடைந்தனர் அந்த ஏமாற்றத்தைப் போக்கும் விதமாக அமைச்சர்கள் ஆர்.காமராஜ், கே.சி.வீரமணி, செல்லுுர் ராஜு, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் இனைந்து நிவாரணப் பொருள்களை வழங்கி மக்களை சமாளித்தனர்.