Published:Updated:

‘சாமுண்டா’ மாளிகை... அதிகாரிகள் கொட்டம்... விளம்பர ஆட்டம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
‘சாமுண்டா’ மாளிகை... அதிகாரிகள் கொட்டம்... விளம்பர ஆட்டம்!
‘சாமுண்டா’ மாளிகை... அதிகாரிகள் கொட்டம்... விளம்பர ஆட்டம்!

ராஜ்பவனை ஆய்வு செய்வாரா கவர்னர்?

பிரீமியம் ஸ்டோரி

விழா நாயகர்களாகவே கவர்னர்கள் வலம் வந்தது ஒரு காலம். இன்று கவர்னர் போகும் இடங்களிலெல்லாம் எதிர்க் கட்சிகள் போராட்டம் நடத்தும் அளவுக்கு நிலைமை உக்கிரம். கவர்னர் மாளிகையிலிருந்து ஆண்டுக்குக் குறைந்தது 15 செய்திக்குறிப்புகள் வெளிவரும். எல்லாமே எந்த சுவாரசியமும் இல்லாத தகவல்களைத் தாங்கிவரும். ஆனால், பன்வாரிலால் புரோஹித் கவர்னர் ஆன பிறகு, அதிரடியாக அறிக்கைகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. ‘கவர்னரைப் பணி செய்யவிடாமல் தடுத்தால், ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை’ என்கிற விநோத மிரட்டல், இந்தியாவின் எந்த மாநிலத்தின் ராஜ்பவனிலிருந்தும் ராஜநடை போட்டதில்லை.

‘‘பன்வாரிலால் புரோஹித் கவர்னர் ஆன பிறகு ராஜ்பவனில் பெருமளவில் செலவுகள் குறைக்கப்பட்டன. சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன’’ எனச் செய்திகள் இன்னொரு பக்கம் றெக்கை கட்டின. உணவு, விமானப் போக்குவரத்து, தோட்டப் பராமரிப்பு, பெட்ரோல், துப்புரவு, மின் கட்டணம், பராமரிப்பு என எல்லாம் குறைக்கப்பட்டு, சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாகச் சொன்னார்கள்.

‘சாமுண்டா’ மாளிகை... அதிகாரிகள் கொட்டம்... விளம்பர ஆட்டம்!

ஜெயலலிதா அப்போலோவில் அட்மிட் ஆவதற்கு சில நாள்கள் முன்புதான், தமிழகத்தின் பொறுப்பு கவர்னர் ஆனார் வித்யாசாகர் ராவ். 2017 செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வரை அவர் பதவி வகித்தார். அதன்பிறகு, புரோஹித் கவர்னராக இருந்து வருகிறார். கவர்னர் மாளிகையின் உணவு மற்றும் விருந்தினர் செலவாக 2015-2016-ல் 29.24 லட்சம் ரூபாயும், 2016-2017-ல் 44.27 லட்சம் ரூபாயும் 1.4.2017 முதல் பன்வாரிலால் புரோஹித் பதவி ஏற்கும் வரையில் 41.74 லட்சம் ரூபாயும் செலவாகியிருக்கிறது எனச் சொல்லியிருக்கிறது ராஜ்பவன். வித்யாசாகர் ராவ் பதவி ஏற்பதற்கு முன்பு ரோசய்யா இருந்தார். ரோசய்யா காலத்தைவிட வித்யாசாகர் ராவ் காலத்தில் அதிகம் உணவுக்காகச் செலவழித்திருக்கிறார்கள். வித்யாசாகர் பதவியில் இருந்த 13 மாதங்களில், விருந்தினர் உணவு செலவு மட்டும் 86 லட்சத்து 2 ஆயிரத்து 30 ரூபாய். இத்தனைக்கும் வித்யாசாகர் ராவ் பொறுப்பு கவர்னர்தான். தமிழகத்தில் அவர் தங்கியது மூன்று மாதங்களுக்கும் குறைவுதான். அப்படியிருக்கும்போது செலவு எக்குத்தப்பாக எகிறியிருக்கிறது. வித்யாசாகரின் அனுமதியில்லாமல் முக்கிய விருந்தினர்கள் அதிக அளவில் தங்கியிருக்க வாய்ப்பில்லை.

‘‘இந்தக் காலகட்டத்தில் கவர்னரின் செயலாளராக இருந்தவர் ரமேஷ்சந்த் மீனா. ராஜ்பவனின் 3-வது பிளாக்கில் ஜி3 என்கிற வி.வி.ஐ.பி. அறையில் தன் குடும்பத்தினருடன் வசித்துவந்தார் ரமேஷ்சந்த் மீனா. அவர் குடும்பத்துக்கு மட்டுமல்லாது, அவரது செல்லப் பிராணிக்கும் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்திலிருந்து மீன்கள் வாங்கிச் சமைத்துத் தரப்பட்டன. ரமேஷ்சந்த் மீனாவுக்கும், அவரைச் சுற்றியிருந்த அதிகாரிகளுக்கும் உணவுச் செலவு எவ்வளவு செய்யப்பட்டது என்கிற விவரத்தையெல்லாம் சொல்லாமல் விட்டுவிட்டார்கள். விருந்தினர் உணவுச் செலவை மட்டும் அறிவித்துவிட்டு, அதிகாரிகளின் உணவுச் செலவைச் சொல்லாமல் மறுப்பது ஏன்?’’ எனக் கேள்வி எழுப்புகிறார்கள் நிதித் துறையினர்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்தான் அமெரிக்க வெள்ளை மாளிகையை மனதில் வைத்து, ராஜ்பவன் வளாகத்தில் ‘வெள்ளை மாளிகை’ ஒன்றைக் கட்டினார்கள். இரண்டு உயர் அதிகாரிகள் தங்கும் இரண்டு அடுக்கு வசதிகொண்ட அந்த ஒயிட் ஹவுஸை இப்போது மாற்றியமைத்துவிட்டார்கள். இரண்டு குடியிருப்பையும் ஒன்றாக்கி, இந்த ஒயிட் ஹவுஸ் முழுவதையும் தனக்காக மட்டும் பயன்படுத்தி வருகிறார் கவர்னரின் செயலாளர் ராஜகோபால். நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட்டிருக்கும் இந்த வெள்ளை மாளிகைக்கு ராஜகோபாலின் குலதெய்வமான ‘சாமுண்டா’ பெயரைச் சூட்டிக் கல்வெட்டும் பதித்திருக்கிறார்கள். இந்த வெள்ளை மாளிகையைச் சீரமைக்க ஆன செலவுகள் பற்றி ஏனோ வாய் திறக்கவில்லை?

‘கவர்னர் மாளிகைக்கு விருந்தினர்கள் வந்தால், ஐந்து நாள்களுக்கு மேல் தங்கக் கூடாது’ என கவர்னர் உத்தரவிட்டிருக்கிறார். சமீபத்தில் வந்த முன்னாள் கவர்னர் ஃபாத்திமா பீவி, ஐந்து நாள்களுக்கு மேல் தங்க அனுமதி மறுக்கப்பட்டதால், அவர் அருகில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கிச் சென்றார். விருந்தினர்கள் வருவதற்கே கட்டுப்பாடுகள் இருந்தும், ஒன்பது லட்சம் ரூபாய்க்கும் மேல் செலவழிக்கப்பட்டிருக்கிறது. ‘‘விருந்தினர்கள் தங்கும் ஜி7, ஜி8, ஜி9, ஜி10 ஆகிய நான்கு அறைகளில் ஓர் உயர் அதிகாரியின் குடும்பத்தினர்தான் ஐந்து மாதங்களாகத் தங்கி வருகின்றனர். இவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் தங்குதடையில்லாமல் கிடைத்துக்கொண்டிருக்கிறது. அரசு டாக்டர்கள் அவர்களைக் கவனிக்கிறார்கள். இந்த விஷயங்கள் எல்லாம் புரோஹித்துக்கு தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? அந்த உயர் அதிகாரியின் குடும்பத்துக்குச் செய்யப்படும் செலவுகள் பற்றி ராஜ்பவன் மூச்சுவிடவில்லையே, ஏன்? உணவுச் செலவு, துப்புரவுச் செலவு எல்லாம் சொல்லி விளம்பரம் தேடிக் கொள்பவர்கள், இந்தச் செலவுகளையும் எப்படிச் சொல்லாமல் விட்டார்கள்’’ என ராஜ்பவன் அலுவலர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் இல்லை.

‘கவர்னர் புரோஹித் தனக்கான உணவுக்குச் சொந்தப் பணத்தை மெஸ் பில்லாகக் கட்டுகிறார்’ என ராஜ்பவன் விளம்பரம் செய்கிறது. 1946-ம் ஆண்டு இருந்த ஆங்கிலேய கவர்னர் முதல் கடைசியாக இருந்த வித்யாசாகர் வரை அனைத்து கவர்னர்களும் தங்கள் சொந்தப் பணத்தில்தான் மெஸ் பில்லை மாதம்தோறும் கட்டிவந்திருக் கிறார்கள். இது வழக்கமான நடைமுறைதான். பி.சி.அலெக்ஸாண்டர் கவர்னராக இருந்தபோது உணவுச் செலவு மட்டுமல்லாது சோப்பு, பேஸ்ட் என அனைத்துப் பொருள்களுக்கும் தனது சொந்தப் பணத்தைக் கட்டினார்.

‘‘ஜார்கண்ட் கவர்னர் சமீபத்தில் ராஜ்பவன் வந்தார். அப்போது உணவு ருசியாக இல்லை என அவர் புரோஹித்திடம் புகார் சொல்ல... விஷயம் ராஜகோபால் கவனத்துக்குப் போனது. கேட்டரிங் பிரிவைக் கவனித்துவந்த தோட்டத்துறை அதிகாரி யோகநாதனை அதிரடியாக ராஜ்பவனிலிருந்து வெளியேற்றினார்கள். உணவுப் பிரிவுக்குத் தோட்டத்துறையை சேர்ந்தவரைப் போட்டது யார் தவறு? பிறகு உணவு சரியில்லை எனச் சொல்லி அவரை மாற்றுவது ஏன்? இதற்கெல்லாம் காரணம் ராஜ்பவனை ஆட்டிப்படைக்கும் அதிகாரி ஒருவர்தான்’’ எனப் பொருமுகிறார்கள்.

‘சாமுண்டா’ மாளிகை... அதிகாரிகள் கொட்டம்... விளம்பர ஆட்டம்!

‘‘கவர்னர் மாளிகைக்கு ஃபர்னீச்சர் வாங்கியதில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 10 கோடி ரூபாய் ஊழல் எனப் புகார் கிளம்பியது. இதனால், கவர்னர் மாளிகையின் கன்ட்ரோலர் சவுரிராஜன் அளித்த புகாரில் பலர் கைதுசெய்யப்பட்டனர். ராஜ்பவன் வெளியிட்ட செலவுக்கணக்கில் ஆண்டுக்கு ஒன்றரை கோடி ரூபாய் வரையில் ராஜ்பவன் செலவுகள் அடங்கும்போது, 10 கோடி ரூபாய் ஊழல் என்பது எப்படிச் சாத்தியம்? ஃபர்னீச்சர்களை வாங்கப்பட்டதாகச் சொல்லப்படும் காலகட்டத்தில் இருந்த அதிகாரிகளை ஏன் விசாரிக்கவில்லை’’ எனக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

2015-2016, 2016-2017, 2017 ஏப்ரல் - செப்டம்பர் காலகட்டங்களில் தோட்டச் செலவாக ரூ.37.03 லட்சம் ஆனதாகச் சொல்லியிருக்கிறார்கள். முன்பு, ராஜ்பவன் தோட்டத்தில் விளையும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டு, ராஜ்பவன் கணக்கில் சேர்க்கப்பட்டது. இப்போது அது நிறுத்தப்பட்டு அதிகாரிகளின் வீடுகளுக்கும் அவர்களின் உறவினர்கள் வீடுகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகின்றன. பழக் கணக்கு இப்போது பழங்கணக்கு ஆகிவிட்டது. வித்யாசாகர் ராவ் காலத்தில்தான், சூரிய ஒளி மின்சார வசதி ராஜ்பவனில் செய்யப்பட்டது. அதற்காக, ஒரு கோடியே 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவிட்டிருக்கிறார்கள். ஆனால், மின் கட்டணம் குறைந்தாகத் தெரியவில்லை. புரோஹித் பதவியேற்ற பிறகு, 1.10.2017 முதல் 31.3.2018 வரை மின்கட்டணமாக ரூ.11 லட்சம் செலவாகியிருக்கிறது.

துப்புரவுப் பணி செலவுகளை எல்லாம் பேசும் கவர்னர் மாளிகை, ‘திருவள்ளுவர் மற்றும் ஒளவையார் சிலைகள் அமைப்பதற்கு எவ்வளவு செலவு ஆனது? சூரிய ஒளி மின்சார வசதி அமைக்கப்பட்ட இடத்திலிருந்த பணியாளர்களின் பழைய குடியிருப்பிலிருந்து பிரித்து எடுத்த தேக்கு மரங்கள் விற்பனையில் எத்தனை லட்சம் ரூபாய் கிடைத்தது’ என்பதை ஏன் செலவுக் கணக்கில் சொல்லவில்லை’’ என்று கேட்கிறார்கள் ராஜ்பவன் அதிகாரிகள் சிலர். 

எல்லா மாவட்டங்களுக்கும் ஆய்வுக்குச் செல்லும் கவர்னர், முதலில் ராஜ்பவனை ஆய்வுசெய்யட்டும்.

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு