Published:Updated:

நினைவில் உள்ளதா நினைவு இல்லம்? - கலாம் அன்பர்கள் கவலை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நினைவில் உள்ளதா நினைவு இல்லம்? - கலாம் அன்பர்கள் கவலை
நினைவில் உள்ளதா நினைவு இல்லம்? - கலாம் அன்பர்கள் கவலை

நினைவில் உள்ளதா நினைவு இல்லம்? - கலாம் அன்பர்கள் கவலை

பிரீமியம் ஸ்டோரி

மாணவர்களின் கனவு நாயகனாகவும், மக்களின் ஜனாதிபதியாகவும் திகழ்ந்து மறைந்தவர் டாக்டர் அப்துல் கலாம். அவர் மறைந்து மூன்று ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அவரது நினைவு மண்டபம் நிறைவேற்றப்படாமல் முடங்கிக்கிடக்கிறது.

2015 ஜூலை 27-ம் தேதி கலாம் உயிரிழந்தார். அவரது உடல் ராமேஸ்வரம் அருகே உள்ள பேய்க்கரும்பு எனும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, கலாமின் நினைவிடத்தை அமைக்கும் பணியை எடுத்துக்கொண்டது. 2016-ம் ஆண்டு கலாமின் முதலாம் நினைவு நாளில், ‘டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் தேசிய நினைவிடம்’ அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. தமிழக அரசு வழங்கிய சுமார் மூன்று ஏக்கர் நிலத்தில் மொகலாயக் கட்டடக் கலை வடிவமைப்புடன் கூடிய நினைவிடம் ஒன்பது மாதங்களில் கட்டிமுடிக்கப்பட்டது.  கடந்த ஆண்டு பிரதமர் மோடியால் திறந்துவைக்கப்பட்ட இந்த நினைவிடத்தின் 2-ம் கட்டப் பணிகள் துவங்கப்படாமல், கடந்த ஓராண்டாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

நினைவில் உள்ளதா நினைவு இல்லம்? - கலாம் அன்பர்கள் கவலை

இதுகுறித்து பேசிய கலாமின் குடும்ப நண்பரும் சமூக ஆர்வலருமாகிய கராத்தே பழனிச்சாமி, ‘‘நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்துசெல்லும் இந்த நினைவிடத்தில் கலாமின் வழிகாட்டுதலாக  மாணவர்களுக்கான அறிவியல் ஆராய்ச்சிக் கூடம், கருத்தரங்கக் கூடம், நூலகம், கலாமின் சொற்பொழிவுகள், கண்டுபிடிப்புகள் பற்றி விளக்கக் கூடிய காணொலிக் கூடம் உள்ளிட்டவை அமையவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கென, நினைவிடத்தின் எதிர்ப்புறம் தென்குடா என்ற இடத்தில் மேலும் ஐந்து ஏக்கர் நிலத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது. ஆனால், இதற்கான எந்தப் பணிகளும் தொடங்கப்படாமல், கடந்த ஓராண்டாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளன’’ என்றார்.

கலாமின் பேரனும், டாக்டர் அப்துல் கலாம் இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் நிர்வாகியுமான சலீம், ‘‘நாடு முழுவதும் பயணித்து மாணவர்களை உற்சாகமூட்டியவர் தாத்தா கலாம். கடந்த ஓர் ஆண்டில் தாத்தாவின் நினைவகத்துக்கு நாடு முழுவதிலுமிருந்து 33 லட்சம் பேர் வந்து சென்றுள்ளனர். அவர்களில் பெரும்பகுதியினர் மாணவர்கள்தான். நினைவக அடிக்கல் நாட்டு விழாவின்போது, ‘மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வசதிகள் கொண்ட ஆய்வுக்கூடம், கருத்தரங்கம், நூலகம் உள்ளிட்டவை அமைக்கப்படும்’ எனத் தெரிவித்தனர்.அதற்கான பணிகளை ஆரம்பிக்கவே இல்லை. விரைவாக அந்தப் பணிகளைத் தொடங்க பிரதமரும் பாதுகாப்புத் துறை அமைச்சரும் உதவ வேண்டும்’’ என்றார்.

நினைவில் உள்ளதா நினைவு இல்லம்? - கலாம் அன்பர்கள் கவலை

கலாம் நினைவிடப் பணிகள் குறித்து பி.ஜே.பி மாவட்டத் தலைவர் முரளிதரன் கூறுகையில், ‘‘கலாம்மீது மிகுந்த அன்பு செலுத்தியவர் பிரதமர் மோடி. அதன் வெளிப்பாடாகவே அவரது இறுதி நிகழ்ச்சியில் நேரில் பங்கேற்றது மட்டுமல்லாமல், அவரது நினைவிடத்தினையும் நேரில் வந்து திறந்துவைத்தார். தென்குடா பகுதியில் இதற்கென வழங்கப்பட்ட நிலத்தில் வாகன நிறுத்துமிடம், நினைவக ஊழியர்கள் குடியிருப்பு போன்றவை அமையும். தற்போது, மதுரை - ராமேஸ்வரம் இடையேயான நான்கு வழிச்சாலை வர உள்ளது. அந்தச் சாலைக்கான இடங்களைக் கையகப்படுத்தும் பணி நடந்துவருகிறது. எனவேதான், இதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பணி முடிந்தவுடன் கலாம் நினைவிடத்தை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்படும்’’ என்றார்.

- இரா.மோகன்
படங்கள்: உ.பாண்டி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு