Published:Updated:

அமித் ஷா நண்பர் அடுத்த இயக்குநரா? - அதிகாரச் சண்டையில் சி.பி.ஐ!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அமித் ஷா நண்பர் அடுத்த இயக்குநரா? - அதிகாரச் சண்டையில் சி.பி.ஐ!
அமித் ஷா நண்பர் அடுத்த இயக்குநரா? - அதிகாரச் சண்டையில் சி.பி.ஐ!

அமித் ஷா நண்பர் அடுத்த இயக்குநரா? - அதிகாரச் சண்டையில் சி.பி.ஐ!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

குட்கா மாமூல் விவகாரம், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சொத்துக்குவிப்பு வழக்கு, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு என தமிழகத்தையே பரபரப்பில் ஆழ்த்திய எல்லா நிகழ்வுகளிலும் நீதிமன்றம் கேட்கும் முதல் கேள்வி... ‘இந்த விவகாரத்தில் ஏன் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடக் கூடாது?’ என்பதுதான். ஆனால், அந்த சி.பி.ஐ அமைப்பே அதிகார மோதலில் சிக்கி, விசாரணை நடத்தப்பட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்த அவலம் இப்போது வெளிச்சத்துக்கு வந்து, தேசத்தையே திகைக்க வைத்துள்ளது. சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மா, சி.பி.ஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா என்ற இருவருக்கும் இடையில் நடக்கும் இந்த மோதலில் யார் ஜெயிப்பார்கள் என்பது ஒரு பக்கம் இருக்க, சி.பி.ஐ அமைப்பின் கண்ணியம் தோற்றுவிடுமோ என்ற கவலையும் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து காவல்துறை அதிகாரிகள் சி.பி.ஐ பணிக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள். இதுதொடர்பான பரிந்துரைகளைப் பெற்று இறுதிசெய்யும் பொறுப்பை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் ஏற்றுள்ளது. இதற்காக நடைபெறும் சி.பி.ஐ செலக்‌ஷன் கமிட்டி கூட்டங்களில்,  சி.பி.ஐ இயக்குநரும் பங்கேற்பார்.

அமித் ஷா நண்பர் அடுத்த இயக்குநரா? - அதிகாரச் சண்டையில் சி.பி.ஐ!

ஜூலை 12-ம் தேதி இப்படி ஒரு கூட்டம் நடக்க இருந்தது. ஆனால், சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மா அந்த நேரத்தில் உருகுவே நாட்டில் நடைபெற்ற இன்டர்போல் கருத்தரங்கில் பங்கேற்கவிருந்தார். அதனால், இந்தக் கூட்டத்தை வேறொரு தேதியில் நடத்துமாறு ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு சி.பி.ஐ கடிதம் எழுதியது. அதற்கு, ‘இயக்குநர் இல்லாவிட்டால் என்ன? சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இருக்கிறாரே! இயக்குநருக்குப் பதிலாக அவரை அனுப்பி வைக்கலாமே?’ என்று ஊழல் கண்காணிப்பு ஆணையம் கேட்டது.

இதைத் தொடர்ந்து ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு சி.பி.ஐ எழுதிய இரண்டு கடிதங்கள்தான், பல சர்ச்சைகளைக் கொளுத்திப் போட்டுள்ளன. ‘சி.பி.ஐ இயக்குநரின் அதிகாரத்தை வேறு யாருக்கும் தரமுடியாது. இயக்குநரின் பிரதிநிதியாக ராகேஷ் அஸ்தானா அந்தக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது’ என்றது அதில் ஒரு கடிதம்.

இதற்குச் சொல்லப்பட்ட காரணங்கள்தான் பயங்கரமானவை. ‘சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவே ஒரு வழக்கில் சி.பி.ஐ-யின் சந்தேகப் பார்வையில் இருக்கிறார். சி.பி.ஐ அமைப்பின் கண்ணியத்தைக் காப்பாற்றுவதற்காக, புது நியமனங்களில் அவரின் ஆலோசனை பரிசீலிக்கப்படக் கூடாது’ என்ற உண்மையைப் போட்டு உடைத்தது இன்னொரு கடிதம். அதுமட்டுமல்ல, ‘இந்த செலக்‌ஷன் கமிட்டி கூட்டத்தின்மூலம் சி.பி.ஐ பணியில் சேரப் பரிந்துரைக்கப்படும் வேறு சில அதிகாரிகளும்கூட சந்தேகத்துக்கிடமானவர்களாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களாகவும், சி.பி.ஐ விசாரணை வளையத்தில் இருக்கிறார்கள்’ என்றது அந்தக் கடிதம். சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மாவின் உத்தரவை ஏற்று, சி.பி.ஐ இணை இயக்குநர் ஏ.கே.சர்மா இந்தக் கடிதங்களை அனுப்பியிருந்தார்.

சி.பி.ஐ அமைப்பில் என்ன பிரச்னை? டெல்லி வட்டாரங்களில் விசாரித்தால், வரிசையாக பல காரணங்களை அடுக்குகிறார்கள்.

ராகேஷ் அஸ்தானா, குஜராத் கேடர் ஐ.பி.எஸ் அதிகாரி; கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் மற்றும் அதைத் தொடர்ந்து நிகழ்ந்த மதக் கலவரங்களை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவராக இருந்தவர்; அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடி தலைமையிலான அரசு எந்தத் தவறும் செய்யவில்லை என்று அறிக்கை கொடுத்தவர்; பி.ஜே.பி-யின் தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு நெருக்கமான நண்பர். 2017 அக்டோபரில் சி.பி.ஐ சிறப்பு இயக்குநராக இவர் நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டில் சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மா ஓய்வுபெறுகிறார். அவருக்குப் பிறகு, அந்த இடத்துக்கு ராகேஷ் அஸ்தானாவே வருவார் என்று கருதப்படுகிறது.

அமித் ஷா நண்பர் அடுத்த இயக்குநரா? - அதிகாரச் சண்டையில் சி.பி.ஐ!

ஆனால், ராகேஷ் அஸ்தானா நியமனத்துக்கு அப்போதே சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மா எதிர்ப்பு தெரிவித்தார். காரணம், ஸ்டெர்லிங் பயோடெக் விவகாரம். குஜராத்தைச் சேர்ந்த இந்த நிறுவனம், பல வங்கிகளைச் சுமார் 5,000 கோடி ரூபாய் ஏமாற்றி வழக்கில் சிக்கியுள்ளது. இந்த நிறுவனத்தில் சி.பி.ஐ ரெய்டு நடத்தியபோது ஒரு டைரி கண்டெடுக்கப்பட்டது. அதில், ‘ராகேஷ் அஸ்தானாவுக்கு ரூ.3.8 கோடி கொடுத்ததாக’ குறிப்பு இருந்தது. ஆனால், ‘என் கட்டடம் ஒன்றை அந்த நிறுவனம் வாடகைக்கு எடுத்திருந்தது. அதற்காகக் கொடுக்கப்பட்ட வாடகை இது’ என ராகேஷ் அஸ்தானா வாக்குமூலம் கொடுத்திருந்தார். இந்த விவகாரத்தைக் குறிப்பிட்டு, அஸ்தானா நியமனத்துக்கு அலோக் வர்மா எதிர்ப்பு தெரிவித்தார். அவரின் எதிர்ப்பைப் புறக்கணித்துவிட்டு அஸ்தானா நியமிக்கப்பட்டார்.

இந்த நியமனத்தை எதிர்த்து Common Cause என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டது. மத்திய அரசு, அஸ்தானாவுக்கு ஆதரவாக நின்றது. ‘ஏற்கெனவே 2016-ம் ஆண்டு சி.பி.ஐ தற்காலிக இயக்குநராக இருந்தவர் அஸ்தானா. 40-க்கும் மேற்பட்ட முக்கியமான வழக்குகளில் விசாரணை அதிகாரியாக இருந்தவர். அப்பழுக்கற்ற பணியைச் செய்பவர்’ என்று மத்திய அரசு வாதிட்டது. அதைத் தொடர்ந்து, ‘அஸ்தானாவின் நியமனம் சரியே’ என அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதன்பின், சி.பி.ஐ-யில் அதிகாரப் போட்டி ஆரம்பமானது. அலோக் வர்மா யாரையெல்லாம் சி.பி.ஐ பணிக்குக் கேட்கிறாரோ, அவர்களை மத்திய அரசு தரவில்லை. ராகேஷ் அஸ்தானா நினைக்கும் நியமனங்கள் நடைபெறுகின்றன. இப்போதுகூட, நான்கு உயர் அதிகாரிகளுக்குப் பணி நீட்டிப்பு தந்துள்ளார்கள். 

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், சி.பி.ஐ விசாரிக்கும் சில அரசியல் வழக்குகள் அந்தத் தேர்தல் முடிவையே தீர்மானிப்பவையாக உள்ளன. 2ஜி வழக்கு, ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு, மாயாவதி மற்றும் லாலு பிரசாத் யாதவ் மீதான வழக்குகள் என எல்லாமே சி.பி.ஐ கையில் உள்ள நிலையில்,  சி.பி.ஐ யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்ற சந்தேகம் இப்போது எழுந்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சி, ‘‘இந்த அதிகார மோதல், சி.பி.ஐ அமைப்பின் நடுநிலையைப் பாதிக்கிறது. ஆளும்கட்சி அதன்மீது அரசியல் அழுத்தம் செலுத்துகிறது என்பது இதன்மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது’’ என்று குற்றம் சாட்டுகிறது. ஆனால், ‘‘சி.பி.ஐ அமைப்புக்குள் உள்ள பிரச்னைகளில் மத்திய அரசு தலையிடாது. அது ஒரு சுயேச்சையான விசாரணை அமைப்பு. மத்திய அரசு, நிர்வாக விஷயங்களை மட்டுமே கவனிக்கும்’’ என்று பட்டும் படாமல் சொல்கிறார், மத்தியப் பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்.

‘சி.பி.ஐ என்பது கூண்டுக்கிளியாக சிறைப்பட்டிருக்கிறது’ என சில ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் கடுமையாகக் குறிப்பிட்டது. அந்த கூண்டுக்கிளிகளுக்குள் இப்போது மோதல் நடக்கிறது.

- தி.முருகன்

சிதம்பரம் வழக்கை விசாரிப்பவருக்கு  சிக்கல்!

சி
.பி.ஐ எங்கு விசாரிக்கப் போனாலும், அதன் பின்னாலேயே வரும் இன்னொரு விசாரணை அமைப்பு, அமலாக்கப் பிரிவு. இதன் இணை இயக்குநர் ராஜேஷ்வர் சிங். காமன்வெல்த் ஊழல் வழக்கு, 2ஜி வழக்கு, ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளைக் கையாளும் இவர், இப்போது விசாரணையில் சிக்கியுள்ளார். உபேந்திர ராய் என்ற பத்திரிகையாளர், ‘வருமானத்துக்கு அதிகமாக ராஜேஷ்வர் சிங் சொத்து சேர்த்திருக்கிறார்’ என்று வழக்கு போட்டார். இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்த சில நாள்களில் ‘ரகசிய ஆவணங்களை வைத்துக்கொண்டு பலரையும் மிரட்டிப் பணம் பறித்ததாக’ உபேந்திர ராயை சி.பி.ஐ கைது செய்தது.

அமித் ஷா நண்பர் அடுத்த இயக்குநரா? - அதிகாரச் சண்டையில் சி.பி.ஐ!

சில மாதங்கள் கழித்து, ரஜ்னீஷ் கபூர் என்ற இன்னொரு பத்திரிகையாளர், இதேபோன்ற வழக்கைப் போட்டார். ஏழு ஆண்டுகளாக இழுத்த இந்த வழக்கு ஜூன் 27-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ‘சந்தேகத்துக்குரிய ஐ.எஸ்.ஐ உளவாளி ஒருவர் துபாயிலிருந்து ராஜேஷ்வர் சிங்குடன் போனில் பேசினார்’ என மத்திய உளவுப் பிரிவான ‘ரா’ அமைப்பு தந்த ரகசியக் குறிப்பை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது மத்திய அரசு. இதைத் தொடர்ந்து ராஜேஷ்வர் சிங் மீது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். ஆனால், ‘‘அமலாக்கத் துறை விசாரணையில் இருக்கும் ஒரு வழக்கு பற்றிய தகவல் சொல்லவே துபாய் நபர் ராஜேஷ்வர் சிங்கிடம் பேசினார்’’ என்கிறது அமலாக்கத் துறை.

2ஜி வழக்கிலும், ஏர்செல்-மேக்சிஸ் வழக்கிலும் ப.சிதம்பரம்மீதான விசாரணையில் வேகம் காட்டியவர் ராஜேஷ்வர் சிங். ‘‘இந்த வழக்குகளிலிருந்து ராஜேஷ்வரை ஒதுக்கி வைக்கவே, அவர்மீது தேவையற்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன’’ என்று பரபரப்பு கிளப்பியிருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு