Published:Updated:

பயம்; பசி; காய்ச்சல் - அகதியாக அமெரிக்காவில் நுழைந்த 7 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

கலிலுல்லா.ச
பயம்; பசி; காய்ச்சல் - அகதியாக அமெரிக்காவில் நுழைந்த 7 வயதுச் சிறுமி உயிரிழப்பு!
பயம்; பசி; காய்ச்சல் - அகதியாக அமெரிக்காவில் நுழைந்த 7 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

அகதியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற 7 வயதுச் சிறுமி பசி, பயம் காரணமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அனுமதியில்லாமல் அகதிகள் அமெரிக்க எல்லைக்குள் நுழைந்தால் நாடு கடத்தப்படுவார்கள் என அறிவிப்பை வெளியிட்டார். மேலும், அப்படிக் குடியேறுபவர்களின் குழந்தைகளும் பெற்றோர்களும் பிரிக்கப்படுவார்கள் என ட்ரம்ப் அறிவித்திருந்தார். இதற்கு பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மற்ற நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள் குழந்தைகளின் குடியுரிமையை வழங்கும் முறையை ட்ரம்ப் ரத்து செய்யப்போவதாகவும் தகவல் வெளியாகின. இந்நிலையில் அகதியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற 7 வயதுச் சிறுமி நீர்ச்சத்து குறைபாடு, உணவின்மை காரணமாக உயிரிழந்துள்ளார்.

கடந்த 6-ம் தேதி கவுதமாலாவிலிருந்து அமெரிக்காவை நோக்கி வந்த 163 அகதிகளில் அந்தச் சிறுமியும் ஒருத்தி. அவள் தன் தந்தையுடன் அமெரிக்காவில் உள்ள நியூமெக்ஸிகோ மாகாணத்துக்குள் நுழைந்தாள். அகதிகளை கைது செய்யும் வகையிலும், அமெரிக்காவில் அவர்கள் நுழைவதைத் தடுக்கும் வகையிலும் அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. அங்கு வந்த 163 பேரையும் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். இதையடுத்து பயம் காரணமாக சிறுமிக்கு டிசம்பர் 7-ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 41 டிகிரி செல்சியஸில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி சிறுமி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.     

பசி, பயம் காரணமாக அந்த சிறுமி உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மற்ற நாடுகளிலிருந்து குடியேறும் அகதிகளைக் கைது செய்யும் அதிகாரிகள் கடுமையாக விதிகளைப் பின்பற்றுவதாகவும், குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும்  மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. 2016-ம் ஆண்டிலிருந்து அமெரிக்காவை நோக்கி வரும் அகதிகளின் எண்ணிக்கை குறைந்தபோதிலும், உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.