Published:Updated:

ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுவதற்குப் பின்னணியில் எழும் சந்தேகங்கள்! #Sterlite

ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுவதற்குப் பின்னணியில் எழும் சந்தேகங்கள்! #Sterlite
ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுவதற்குப் பின்னணியில் எழும் சந்தேகங்கள்! #Sterlite

ஆலை திறக்கப்படும் நிலையில் தூத்துக்குடி சுற்றுவட்டாரத்தில் இருக்கும் மக்களிடம் இதுபற்றிக் கேட்டால், ``என்ன செய்ய? அரசாங்கமும் அதிகாரமும் திட்டமிட்டு இதெல்லாம் செய்யுது. இதுக்காக நிறைய உயிரை இழந்துட்டோம். அதற்குப் பிறகும் அவர்களுக்குப் புரியலை” என்று கைவிடப்பட்ட மனநிலையில் இருந்து பேசுகிறார்கள்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் தமிழக அரசு நிரந்தரமாக(!?) மூடியதையடுத்து, தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் அளித்த மேல்முறையீட்டு மனுவின் மீது `ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படலாம்’ என்னும் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு, தீட்சண்யாவின் இந்த வரிகளைத்தான் நினைவுபடுத்துகிறது.

வையத்து நிலமிழந்தோம் வானமுற மழையிழந்தோம்

வாழும் புலமிழந்தோம் வளமூறும் ஆறிழந்தோம்

வேளாண் குடியழிந்தோம் வெள்ளாமைக் காடிழந்தோம்

சூழும் கொடுநெருப்பில் சொந்தபந்த சனமிழந்தோம்

இழப்பை நினைத்தழவும் இங்கெமக்கு உரிமையில்லை

கழுத்தை நெரித்திருக்கும் கயிறறுக்க வலுவுமில்லை

மருகிச் சாவதற்கோ மானுடராய் நாம் பிறந்தோம்

உருகி அழியுதய்யோ உயிர்வாழும் சிற்றாசை

-ஆதவன் தீட்சண்யா

`ஸ்டெர்லைட் ஆலை வேண்டவே வேண்டாம்' என்று பல வருடங்களுக்கு முன்பு போராடினார்கள். ஆனால், ஆலை வந்தது. `ஆலையின் நச்சு, மக்களைப் பாதிக்கிறது' என்றார்கள். ஆலை மூடப்பட்டதாகச் சொல்லப்பட்டது. இருந்தும் தேச நலன் என்கிற பெயரில் ஆலை மீண்டும் இயங்கியது.

``தேசம் என்றால் யார்?”, ``மக்கள்”, `அப்படியென்றால் அந்த மக்கள் நலனுக்குக் கேடே ஆலைதான்' என்பது அவர்களுக்குப் புரியவில்லை...மக்கள் ஆலையின் நச்சால் `புற்றுநோய் ஏற்படுகிறது' என்றார்கள். இருந்தும் ஆலை தொடர்ந்து இயங்கியது, ஒன்றிரண்டு பேருக்கு புற்றுநோய் வர ஆலை எப்படிக் காரணமாகும் என்கிற கேள்வி இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. உச்சகட்டப் போராட்டம் வெடித்த நிலையில், கடந்த மே மாதம் 22-ம் தேதி அன்று, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி மக்கள் பேரணி நடந்தது. பேரணியில் கலந்துகொண்ட மக்கள், போலீஸ் வாகனங்களுக்கும், ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீவைத்ததாகக் கூறப்பட்டு போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அந்தத் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தார்கள். பிரச்னை தீவிரமடைந்ததை அடுத்துதான், ``ஆலை இனி நிரந்தரமாக மூடப்படும். சர்வதேச நீதிமன்றங்கள் தலையிட்டாலும் இனி ஆலையைத் திறக்க முடியாது” என்று கூறி தமிழக அரசு சீல் வைத்தது. துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்பின் ரணம் கூட முழுதாக ஆறியிருக்காத சூழலில்தான் தற்போது மீண்டும் ஆலையைத் திறக்கச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார்கள்.

`தமிழக அரசு நடத்திய ஆய்வின் அடிப்படையில் ஆலையை மூடியதில் எந்தவித முகாந்திரமும் இல்லை' என்று கூறி, தருண் அகர்வால் தலைமையிலான பசுமைத் தீர்ப்பாய கமிட்டி தனி ஆய்வு ஒன்றை மேற்கொண்டு வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த முடிவு எட்டப்பட்டிருக்கிறது. தீர்ப்பாயத்தின் இறுதி அறிக்கையில் சில தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. உதாரணத்துக்கு, `ஆலையின் சிம்னி உயரத்தின் அளவை அதிகப்படுத்த வேண்டும். ஆலையைச் சுற்றி பசுமை வளையம் இருப்பதற்கான தடயமே இல்லை. அதனால் பசுமை வளையத்தை உருவாக்க வேண்டும். அடுத்து வரும் மூன்றாண்டுகளில் மக்களுக்கான நலத்திட்டங்களுக்காக ஒரு பில்லியன் ரூபாய் அளவுக்குச் செலவு செய்யப்பட வேண்டும்' உள்ளிட்ட கட்டளைகளைப் பிறப்பித்திருக்கிறார்கள். 

உண்மையில், `ஆலையை மூடவேண்டும்' என்று மக்கள் முன்வைத்த காரணங்களும் இவைதான். `அதான் சாரி சொல்லிட்டாங்கல்ல  சரியாகிடும்’ என்கிற அளவுக்கான கட்டப் பஞ்சாயத்துப் பிரச்னையாகவே ஸ்டெர்லைட் விவகாரம் அணுகப்பட்டிருக்கும் சூழலில் மற்றொன்றையும் இங்கே குறிப்பிட வேண்டியிருக்கிறது. ஆலையின் கழிவுகள் அருகில் இருக்கும் ஆற்றில் கொட்டப்படுவதாகச் சொல்லப்பட்டது. `மழைநாளில் ஆற்றில் நீர் தேங்கினால் மட்டுமே அதனால் பாதிப்பு ஏற்படும்' என்று சொல்லப்பட்டு, அந்தச் சிக்கலும் சாதாரணமாகவே அணுகப்பட்டிருக்கிறது. இதைத்தான் தீர்ப்பாக முன்மொழிந்து, `இன்னும் மூன்று வாரத்துக்குள் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான மாற்று ஆணையைத் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், தமிழக அரசும் பிறப்பிக்க வேண்டும்' என்று தீர்ப்பாயம் உத்தரவிட்டிருக்கிறது.

ஆலை திறக்கப்படும் நிலையில், தூத்துக்குடி சுற்றுவட்டாரத்தில் இருக்கும் மக்களிடம் இதுபற்றிக் கேட்டால், ``என்ன செய்ய...? அரசாங்கமும், அதிகார வர்க்கமும் திட்டமிட்டு இதெல்லாம் செய்யுது. இதுக்காக நிறைய உயிரை இழந்துட்டோம். அதற்குப் பிறகும் அவர்களுக்குப் புரியல” என்று கைவிடப்பட்ட மனநிலையுடன் பேசுகிறார்கள்.

இது ஒருபக்கம் இருக்க, ஸ்டெர்லைட் போராட்டத் துப்பாக்கிச் சூடு தொடர்பாக வீடியோ ஆதாரம் ஒன்றை அண்மையில் வெளியிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுவின் முகிலன், ``22 மே 2018 அன்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகே துப்பாக்கிச்சூடு தொடங்கிய சில நிமிடங்களுக்குப் பிறகுதான் வண்டி ஒன்று, அடையாளம் தெரியாத நபர்களால் எரிக்கப்பட்டது. அதற்கு அருகிலேயே காவல்துறையினர் நின்றுகொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்” என்று மனதை உலுக்கும் சில ஆவணங்களை வெளியிட்டார்.

``மக்கள், வாகனங்களுக்குத் தீவைத்து எரித்தும், தாக்கியதாலும்தான் துப்பாக்கிச் சூடு நடத்தினோம்" என்று இதுநாள்வரை முன்வைக்கப்பட்ட காரணங்களுக்கு முற்றிலும் புறம்பானதாக இது இருக்கிறது. மேலும், திங்களன்றுதான் இறுதித்தீர்ப்பு வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், ஒருபக்கம் தூத்துக்குடி ஆலைக்கு அருகே 8 பேர் கைது செய்யப்பட்டதும், அதற்கு அடுத்தநாளே ஆலை திறக்கப்படும் என்கிற தீர்ப்பாணை வெளியிடப்படுவதும் எதற்காக என்கிற சந்தேகத்தையும் அது எழுப்பியுள்ளது.

ஆலை திறக்கப்படுவதாகச் சொன்ன அடுத்த சில நிமிடங்களிலேயே தூத்துக்குடி துறைமுகத்துக்குக் கப்பலில் செப்பு எடுத்துவரப்பட்டதாகச் சொல்கிறார் செயற்பாட்டாளர் நித்தியானந்த் ஜெயராமன். இதுதவிர, நாடு நாடாக ஏற்படுத்தியுள்ள சூழலியல்

பிரச்னை காரணமாக சர்வதேச சந்தையிலிருந்தே வேதாந்தா ஒதுக்கப்பட்டிருந்தாலும் தாங்கள் `தேசிய நலனுக்காக உழைப்பவர்கள்’ என்பதைக் காட்டிக்கொள்ள அவர்கள் தவறவில்லை, ஸ்டெர்லைட் மூடப்பட்டதால் செப்பு இறக்குமதி செய்துகொண்டிருக்கிறோம் என்கிற வாதத்தை பசுமைத் தீர்ப்பாயத்திடம் முன்வைத்தார்கள். ஆலை மூடப்பட்ட பிறகு பேட்டியளித்த வேதாந்தா நிறுவனர் அணில் அகர்வால், ``ஆலைக்கு மிக அருகில் போராட்டம் வெடித்தது மிகத் துரதிர்ஷ்ட வசமானது!” என்று ஏழரை நாட்டுச் சனி ஏற்பட்டது துக்கம்தான் என்கிற தொனியிலேயே பேசியிருந்தார். போராட்டம் வெடித்ததற்கும் ஆலைக்கும் தொடர்பில்லாதது போலவே அவரது பேச்சு இருந்தது. மேலும் ஆலையைச் சுற்றி பசுமை வளையம் உலக நிபுணர்கள் உதவியுடன் அமைக்கப்பட்டிருக்கிறது என்று வேறு குறிப்பிட்டிருந்தார். அது உண்மை இல்லை என்பதை தருண் அகர்வால் குழுவே மறுத்திருக்கும் நிலையில் எதன் அடிப்படையில் இந்த மீள் திறப்புவிழா?. ஓர் ஆலை திறக்கப்படுவதற்குப் பின்னணியில் இத்தனை சந்தேகங்கள் கிளைத்து எழுந்தாலும் உச்சாணியாகத் தீர்ப்பாயத்துக்கும் அரசுக்கும் ஒரே ஒரு கேள்வி மட்டும்தான், ``இந்த முடிவை எடுப்பதற்கு எதற்காக 13 பேரின் (!?) உயிரைக் குடிக்கவேண்டும்?".

அடுத்த கட்டுரைக்கு