Published:Updated:

`உன் வருகைக்காகக் காத்திருப்பது எத்தனை அழகானது!’ - சிறையிலிருந்து பேராசிரியர் சாய்பாபா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`உன் வருகைக்காகக் காத்திருப்பது எத்தனை அழகானது!’ - சிறையிலிருந்து பேராசிரியர் சாய்பாபா
`உன் வருகைக்காகக் காத்திருப்பது எத்தனை அழகானது!’ - சிறையிலிருந்து பேராசிரியர் சாய்பாபா

"என்னுடைய இந்தக் கூண்டு, நமது இதயங்களின் மொழியை சட்டத்துக்குப் புறம்பானதாக மாற்றிவிட்டது, நம் உறவை அன்பை தடைசெய்துவிட்டது."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறையில் பணியாற்றியவர் பேராசிரியர் ஜி.என் சாய்பாபா. பழங்குடி மக்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்துச் செயல்பட்டவர்.  90 விழுக்காடு செயல்படாத உடலையும், பல்வேறு உடல் உபாதைகளையும் கொண்ட மாற்றுத்திறனாளி. தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்துடன் தொடர்புகொண்டிருந்ததாகக் கூறிக் கைது செய்யப்பட்டவர்.  சிறையிலிருக்கும் தன் கணவரை விடுவிக்கப் போராடி வரும் அவரது மனைவி ஏ.எஸ் வசந்தகுமாரி, சாய்பாபா தனக்காக எழுதிய கவிதையை ஃபேஸ்புக் பக்கத்தில் பதிந்திருக்கிறார். அந்தக் கவிதையின் தமிழாக்கம்...

உன் வருகைக்காக காத்திருப்பது எத்தனை அழகானது!

துடிப்பான ஜனநாயகத்தில்! நடக்கும் கசப்பான 
போர்ச் செய்திகளோடும் துர்மரணச் செய்திகளோடும் கடக்கும்
என் வெற்று நாட்களுக்கும் காலியான இரவுகளுக்கும் இடையில்
உன் வருகைக்காக காத்திருப்பது எத்தனை அழகானது

ஒவ்வொரு தினமும் சமூக வாழ்வின் ஆதூரத்தினைத் தேடுகிறேன்
என்னுடைய இந்தக் கூண்டு, நமது இதயங்களின் மொழியை
சட்டத்துக்கு புறம்பானதாக மாற்றிவிட்டது, நம் உறவை,
அன்பை தடைசெய்துவிட்டது.

என் பின்னால் நின்றிருக்கும் பெண், ‘ஹிந்தியில் மட்டும் பேசு”
என்று எனக்கு நினைவுறுத்துகிறாள். ஒளிபுகா ஃபைபர் கண்ணாடிக்கு 
அந்தப்பக்கம் நீ நின்றுகொண்டிருக்கிறாய். வார்த்தைகள் என்னைத் 
தோற்கடித்துவிட்டன. நமது அன்பின், நெருக்கத்தின் மொழியை
நான் மறந்துவிட்டிருக்கிறேன்.

உலகத்தின் இந்த நெடிய சுவர்களுக்கு முன்னால்
நீயும் நானும் யாரோவாக ஆகிவிட்டோம்.
என் தலைக்கு மேலும், முதுகுக்குப் பின்னும்
குத்துவதற்கு கூர்வாள் தயாராக இருக்க...
கண்காணிக்கும் இந்த சாளரங்களின் வழியாக பேசிக்கொள்வது
எவ்வளவு வலி மிகுந்தது?

நமது இதயங்கள் சில்லிட்டு உறைந்திருக்கின்றன.
இத்தனை இத்தனை முற்றுகைக்கு நடுவிலும்
பல்லாயிரம் மைல்கள் கடந்து நீ வந்திருப்பது
சில வார்த்தைகளால் என் ஆன்மாவிற்கான அணைப்பை வழங்குவதற்காகத்தான்
என்று எனக்குத் தெரியும்.

சில நிமிடங்கள் நமக்கு வழங்கப்பட்டிருக்கின்றன
தடுமாறும் நமது மெளனத்தில் கரைந்து போவதற்காக...
இந்த சிறைக்கம்பிகளுக்கு பின்னாலேயே முழு காலமும் முடிகிறது என்றாலும்
உன்னுடைய வெளிச்சப் புன்னகையை இறுகப் பிடித்துக்கொண்டே
இந்த மோசமான காலத்தைத் தாங்கி மனிதத்தோடு உயிர் பிழைத்திட வேண்டும்.

நீண்ட காத்திருப்புக்குப் பின் கிடைக்கும் உன் வருகையும், இருப்பும்
நமக்குள் கொந்தளிக்கும் வலியை உண்டாக்குகிறது.
எனினும், நசீம் ஹிக்மெத் சொல்வதைப்போல, 
“வாழ்வதென்பது நம்பிக்கையின்பாற்பட்டது,
என் அன்பே, வாழ்வதென்பது ஒரு தீவிர வணிகம், உன்னை நேசிப்பதைப் போல”.

- ஜி.என் சாய்பாபா

ஜூன் 28, 2018

கடந்த வாரம், ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், தெலங்கானாவைச் சேர்ந்த இரு மருத்துவர்களும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த ஒரு மருத்துவரும் சாய்பாபாவின் உடல்நிலையைப் பரிசோதிக்க உத்தரவிட்டுள்ளது மும்பை உயர்நீதிமன்றம். பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா விடுவிக்கப்படுவதற்கான சாத்தியங்கள், அதற்காக முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளைக் குறித்து கேட்டபோது, ``ஆதிவாசிகளைப் பற்றி, அவர்களது உரிமைகளைப் பற்றி, சிறுபான்மையினரின் பாதுகாப்பைப் பற்றி யார் பேசினாலும், அவர்களுக்கு நக்சல் முத்திரை நிச்சயம். நானும் என் கணவரும்கூட அப்படித்தான். மாற்றுத்திறனாளியான என் கணவர் சாய்பாபா செய்த ஒரே விஷயம், நில உரிமைகள் பறிக்கப்பட்டுத் துன்புறுத்தப்படும் பழங்குடிகளுக்காகப் பேசியதுதான். கடைக்கோடி மனிதனின் கேள்விக்குப் பதிலளிக்க முடியாத இந்த அரசு, புத்தகம் வைத்திருப்பவர்களையெல்லாம் கோழைத்தனமாகக் கைது செய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவரை விடுவித்துவிடமுடியாதபடி எல்லாவிதமான வேலைகளையும் செய்துகொண்டிருக்கிறது அரசு” என்றார் ஏ.எஸ் வசந்தகுமாரி. 

ஓர் உண்மையான புரட்சியாளனை வழிநடத்துவது அதீத அன்பினால்தான் சாத்தியம். இந்தப் பண்பில்லாத ஓர் உண்மைப் புரட்சியாளனை நீங்கள் பார்க்கவே முடியாது - சே குவேரா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு