Published:Updated:

அஜித் தோவல்... இந்திய ஜேம்ஸ்பாண்டின் சாகசங்களும் சர்ச்சைகளும்!

பல குற்றச்சாட்டுகளும் அஜித் தோவலுக்கு எதிராக முன்வைக்கப்படுகின்றன என்றாலும், அவர் பிரதமர் மோடியின் செல்லப்பிள்ளையாக இருப்பதால், அத்தனை குற்றச்சாட்டுகளும் முனை மழுங்கிப்போகின்றன. 

அஜித் தோவல்... இந்திய ஜேம்ஸ்பாண்டின் சாகசங்களும் சர்ச்சைகளும்!
அஜித் தோவல்... இந்திய ஜேம்ஸ்பாண்டின் சாகசங்களும் சர்ச்சைகளும்!

கொல்லன் பட்டறையில் ஊசி விற்கும் வித்தை வெகு சிலருக்குத்தான் கை வரப்பெறும். அந்த வெகு சிலரில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் ஒருவர். இந்தியாவின் ஜேம்ஸ்பாண்ட், முன்னாள் `ரா' உளவாளி, மோடியின் நம்பிக்கைக்கு உரியவர் என்பதையெல்லாம் தாண்டி, தோவலின் வாழ்க்கை சுவாரஸ்யம், மர்மம், திகில், சாகசம் என ஒரு க்ரைம் த்ரில்லர் நாவலுக்குச் சற்றும் குறைவில்லாத அத்தியாயங்களைக் கொண்டது. அதே சமயம், பாதுகாப்பு ஆலோசகர் என்ற பணியைத் தாண்டி, சிபிஐ-யில் தலையீடு, சர்ச்சைக்குரிய ரஃபேல் விமான ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் அதிகாரபூர்வமற்ற பங்கேற்பு என அஜித் தோவலை மையமாக வைத்துச் சுழலும் சர்ச்சைகள், அவரது கடந்த கால பணித்திறமை மீதான பெருமையில் கரும்புள்ளியை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் தோவல்... இந்திய ஜேம்ஸ்பாண்டின் சாகசங்களும் சர்ச்சைகளும்!

யார் இந்த அஜித் தோவல்? 

ஆக்ரா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற அஜித் தோவல், 1968-ம் ஆண்டின் கேரள கேடர் ஐபிஎஸ் அதிகாரி. ஐபிஎஸ் பயிற்சிக்குப் பின்னர் இன்டலிஜென்ஸ் பீரோ ( ஐபி) எனப்படும் இந்திய உளவுத்துறையிலும், வெளிநாட்டு உளவுப் பிரிவான `ரா'-விலும் (Research and Analysis Wing- RAW) பணியாற்றியவர். பஞ்சாப் மற்றும் மிஸோராம் மாநிலங்களில் தீவிரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளைத் திறம்படக் கையாண்டு, அதன் இயக்குநராக ஆகும் அளவுக்குத் தனது பணித்திறனை வெளிப்படுத்தியவர். 1980-களில் மிஸோராம் தேசிய முன்னணி இயக்கத்தால் பல்வேறு தீவிரவாத அச்சுறுத்தல்களை இந்தியா எதிர்கொண்டிருந்தது. தோவல், அப்போது தனக்கே உரித்தான உளவாளி சாமர்த்தியத்துடன் மிஸோராம் தேசிய ஏஜென்சிக்குள் ஊடுருவி, அதன் முக்கிய கமாண்டர்களின் நம்பிக்கையைப் பெற்று, மிஸோராம் தேசிய முன்னணி இயக்கத்தைக் கூண்டோடு காலி செய்தார். மேலும், சீனப் பகுதிக்குள் இயங்கிய மிஸோ தேசிய ராணுவத்தில் ரகசியமாகச் சேர்ந்து, இந்திய ராணுவத்துக்கு ரகசியமாகத் தகவல்களை அனுப்பி வந்தார். 

தோவலின் இந்த அசாத்திய திறமை மற்றும் புத்திசாலித்தனம்தான், 1999-ம் ஆண்டு நடந்த கந்தகார் விமானக் கடத்தல் சம்பவத்தில் தீவிரவாதிகளுடன் இந்தியாவின் தலைமை பேச்சுவார்த்தையாளராகப் பணியாற்ற வைத்தது. 1971 முதல் 1999-ம் ஆண்டு வரை நடந்த 15 விமானக் கடத்தல் சம்பவங்களை முடிவுக்குக் கொண்டுவந்ததின் பின்னணியில் இவரது பங்களிப்பு முக்கியமாக இருந்தது. 

பாக்.கில் உளவுப் பணி... பதைபதைக்க வைத்த தருணங்கள்

அஜித் தோவலின் வாழ்க்கையில், முதுகுத்தண்டை ஜில்லிட வைக்கும் திகில் நிறைந்த அத்தியாயம் என்றால், அது அவர் பாகிஸ்தானில் `ரா' உளவாளியாகப் பணியாற்றிய 7 ஆண்டுக்காலம்தான். அதுதான் அவரை `இந்திய ஜேம்ஸ்பாண்ட்’ என்று சொல்லும் அளவுக்கு இந்திய அரசு வட்டாரங்களில் அடையாளம் காட்டியது. `ரா'வின் அண்டர்கவர் ஏஜென்டாக பாகிஸ்தானுக்குச் சென்ற தோவலுக்கு உருதுமொழியில் பேசவும் எழுதவும் நல்ல தேர்ச்சி உண்டு. அதனால்தான், அந்த சீக்ரெட் ஆபரேஷனுக்கு அவரை அனுப்பியது `ரா'. 

லாகூரில் வாழ்ந்த தோவலுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியப் பணி, பாகிஸ்தான் உளவுத் துறையான ஐஎஸ்ஐ-யின் செயல்பாடுகளையும் நடவடிக்கைகளையும் உளவுபார்ப்பதுதான். மேலும், அந்தக் காலகட்டத்தில் அவர், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் பல்வேறு தாக்குதல் திட்டங்கள், பயன்படுத்தும் ஆயுதங்கள் மற்றும் அவர்களின் மறைவிடங்கள் குறித்தும் ஏராளமான தகவல்களை இந்திய உளவுத் துறைக்கு அனுப்பி வைத்தார். 

அஜித் தோவல்... இந்திய ஜேம்ஸ்பாண்டின் சாகசங்களும் சர்ச்சைகளும்!

ஒருமுறை லாகூரில் உள்ள மசூதி ஒன்றிலிருந்து அஜித் தோவல் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது நீண்ட வெண் தாடியுடன் எதிரே வந்த ஓர் இஸ்லாமிய முதியவர், தோவலைத் தடுத்து நிறுத்தி, கேள்வி ஒன்றைக் கேட்டார். அது அஜித் தோவலின் முதுகுத்தண்டை அப்படியே அதிர்ச்சியில் ஜில்லிட வைத்தது. அந்த முதியவர் கேட்ட கேள்வி, ``நீ ஒரு இந்துதானே..?" உள்ளுக்குள் அதிர்ந்தாலும், தோவல் ஒரு தேர்ந்த உளவாளி அல்லவா? அதற்கு முன்னர் எத்தனை `அண்டர் கவர் ஆபரேஷன்'களை நடத்தியிருப்பார்? இதுபோன்ற சிக்கலான சூழல்களை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்பதை அவரது முந்தைய பணி அனுபவங்கள் அவருக்குக் கற்றுக்கொடுத்திருக்கும்தானே..? முகத்தில் எந்த ஓர் உணர்ச்சியையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல், தான் இந்து அல்ல என்று உடனடியாக மறுத்தார். ஆனால், அந்த முதியவர் விடவில்லை. "இல்லை... நீ ஒரு இந்துதான்!" எனத் தொடர்ந்து கூறினார். 

``மாட்டிக்கொண்டோமோ... இந்த முதியவர் கத்தி ஊரைக் கூட்டிவிடுவாரோ... எப்படித் தப்பிப்பது?" என்றெல்லாம் உள்ளுக்குள் ஸ்கெட்ச் போட்டபடியே, அதே சமயம் கேசுவலாக, ``எது என்னை ஒரு இந்துவாக உங்களை உணரவைத்தது?" என்ற கேள்வியை அந்த முதியவரிடம் கேட்டார் தோவல். 

அதைக் கேட்ட அந்த முதியவர் புன்னகைத்தபடியே தன்னைப் பின் தொடருமாறு சைகை செய்தார். தோவலும் அவர் பின்னாலேயே நடந்து சென்றார். ஒரு பழைய வீட்டுக்கு முன் சென்றதும் நின்ற அந்த முதியவர், வீட்டுக்குள் வருமாறு கூப்பிட்டார். உள்ளே சென்றதும் அலமாரி ஒன்றைத் திறந்த அந்த முதியவர், உள்ளுக்குள் இருந்த சிவன், துர்கா போன்ற கடவுளர்கள் படங்களைக் காண்பித்தார். தோவல் சற்று அதிர்ச்சியடைந்தாலும், அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. ஆனாலும், ``தனது கேள்விக்கு இது பதில் அல்லவே..." என்று நினைத்த தோவல், அதே கேள்வியை மீண்டும் கேட்டார். 

அப்போது அந்த முதியவர் தோவலிடம், ``உனது காதில் துளை இருக்கிறது. அது இந்துக்களின் வழக்கம். அதனால்தான் அவ்வளவு உறுதியாகச் சொன்னேன்!" எனக் கூறியுள்ளார். ஆனால், தோவல் அசரவில்லை. ``ஆமாம்... நானும் முன்னர்  இந்துவாகத்தான் இருந்தேன். ஆனால், பின்னர் இஸ்லாமுக்கு மாறிவிட்டேன்" எனச் சொன்னார். இருப்பினும் அந்தக் கதையை அந்த முதியவர் நம்பவில்லை. கூடவே, ``நானும் ஒரு இந்துதான். இங்குள்ளவர்கள் எனது குடும்பத்தினரைக் கொன்றுவிட்டார்கள். எனவேதான் உயிர் பிழைப்பதற்காக நானும் ஒரு முஸ்லிம் என்ற போர்வையில் வாழ்கிறேன்" என்று சொல்லியுள்ளார். அப்போதுதான் தோவலுக்குச் சற்று நிம்மதியே ஏற்பட்டது.

ஆனாலும், தோவல் உணர்ச்சிவசப்பட்டு தன்னைப்பற்றிய எந்த ஒரு விவரத்தையும் கூறிவிடவில்லை. இதுவெல்லாம் உளவுப் பயிற்சியின் பாலபாடம் அல்லவா? " அப்படியா...?" என்பதுபோல் முகத்தை வைத்துக்கொண்டார். அந்த முதியவர் என்ன நினைத்தாரோ... " உனது காதில் உள்ள துவாரத்தை ஆபரேஷன் மூலம் மறைத்துவிடு. இல்லாவிட்டால் என்னைப் போல் வேறு யாரிடமாவது மாட்டிக்கொண்டு அது உனது உயிருக்கே உலை வைத்துவிடும்" என்று அறிவுறுத்தியுள்ளார். 

அஜித் தோவல்... இந்திய ஜேம்ஸ்பாண்டின் சாகசங்களும் சர்ச்சைகளும்!

அரங்கேற்றிய  அதிரடிகள் 

இப்படி 7 ஆண்டுக்காலம் பாகிஸ்தானில் வெற்றிகரமாகத் தனது உளவுப் பணியை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய தோவலுக்கு, காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் கொடுக்கப்பட்டது. எதிராளிகளிடம் மிகத் தந்திரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்கு ஒப்புக்கொள்ள வைப்பதில் படு சமர்த்தர் அஜித் தோவல். அதனால்தான், அவரால் பல காஷ்மீர் குழுக்களுக்குள் ரகசியமாக ஊடுருவி, அவர்களில் பலரை மூளைச் சலவை செய்து, அந்த இயக்கங்களிலேயே தனக்கு ஆதரவான கறுப்பு ஆடுகளை உருவாக்க முடிந்தது. அப்படி, மூளைச் சலவை செய்யும் தீவிரவாதிகளிடம் தொடர்ந்து பேசி, அவர்களை இந்தியாவுக்கு ஆதரவான மன நிலைக்கு மாற்றி, பின்னர் அவர்கள் மூலமாகவே தீவிரவாத குழுக்களின் ரகசிய தாக்குதல் திட்டங்களை முன்கூட்டியே அறிந்து, அதை முறியடிக்க வைத்துள்ளார். 

பணியில் சேர்ந்த ஆறே ஆண்டுகளில் போலீஸ் பதக்கம் பெற்ற முதல் அதிகாரியாகத் திகழ்ந்த அஜித், தேசத்துக்கு ஆற்றிய பல சிறப்பான சேவைகளுக்காக ஜனாதிபதியிடமிருந்து `கீர்த்தி சக்ரா’ விருது மற்றும் போலீஸ் விருது பெற்றவர். இன்டலிஜென்ஸ் பீரோவில் (ஐபி) 10 ஆண்டுகள் வரை பணியாற்றிய தோவல்,  2004-05-ம் ஆண்டுகளில் அதன் இயக்குநராகவும் பதவி வகித்தார். மிக நுணுக்கமாகத் திட்டமிடுவதிலும் பகுப்பாய்வு செய்வதிலும் வல்லவர். 

2014-ல் மே மாதம் மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற சில தினங்களிலேயே, அஜித் தோவல் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக (என்எஸ்ஏ -  National Security advisor) நியமிக்கப்பட்டார். அப்போதிருந்தே அஜித் தோவல், தனது அதிரடிகளை அரங்கேற்றத் தொடங்கினார். 

அப்போது இராக்கில் ஆளும் அரசுக்கும், சன்னி பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்ற போரில் இராக்கில் உள்ள பல முக்கிய நகரங்களைத் தீவிரவாதிகள் கைப்பற்றினர். திக்ரித் நகரில் உள்ள மருத்துவமனையில் தமிழகத்தைச் சேர்ந்த நர்ஸ்கள் உள்ளிட்ட 46 இந்திய நர்ஸ்கள் தீவிரவாதிகளிடம் சிக்கினர். மொசூல் நகரில் உள்ள பாழடைந்த கட்டடம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த அவர்களை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து பத்திரமாக மீட்டுக்கொண்டு வந்ததில் அஜித் தோவலின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தது. அதேபோன்று 2015-ல் மணிப்பூரில் ராணுவம் மீது நாகா தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 20 வீரர்கள் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவ வீரர்கள் மியான்மர் எல்லையைத் தாண்டிச் சென்று, நாகா தீவிரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி, 50-க்கும் அதிகமான தீவிரவாதிகளைச் சுட்டுக்கொன்றனர். இதன் பின்னணியிலும் தோவலின் மாஸ்டர் பிளான்தான் இருந்தது.  

அஜித் தோவல்... இந்திய ஜேம்ஸ்பாண்டின் சாகசங்களும் சர்ச்சைகளும்!

இதுமட்டுமல்லாது, நேபாளத்தின் தீவிர இடதுசாரி சித்தாந்தவாதியும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான கே.பி. ஒலியைப் பிரதமர் பதவியிலிருந்து விலக வைத்ததிலும் தோவலுக்கு முக்கியப் பங்கு உண்டு. அந்த நாடு அரச வம்ச ஆட்சியிலிருந்து வெளிவந்து புதிய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்ட பின், அந்நாட்டின் முதல் பிரதமராக கடந்த 2015-ம் ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்டார் ஒலி. இவரது தலைமையிலான ஆட்சிக்கு நேபாள மாவோயிஸ்ட்டுகள் தங்கள் ஆதரவை அளித்து வந்தனர். ஆனால், இவர் இந்தியாவுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பார் எனக் கருதப்பட்டதைத் தொடர்ந்து, தோவலின் கச்சிதமான காய் நகர்த்தல்கள், கே.பி. ஒலியைப் பதவி இழக்க வைத்தது. அதேபோன்றுதான் கடந்த ஆண்டு நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே  தோற்கடிக்கப்பட்டதிலும் அஜித் தோவலுக்கு முக்கியப் பங்கு இருந்ததாக சர்ச்சை எழுந்தது. 

இவை எல்லாவற்றையும் விட, 2016-ம் ஆண்டு காஷ்மீரின் உரி என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் இந்தியாவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இத்தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்தே தீர வேண்டும் என்று பல மட்டங்களிலிருந்தும் அரசுக்கு அழுத்தங்கள் வர, இந்திய ராணுவம், எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டிச் சென்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இருந்த தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்துவிட்டுத் திரும்பியது. `சர்ஜிக்கல் ஸ்டிரைக்' என்றழைக்கப்பட்ட இந்தத் தாக்குதலின் பின்னணியிலும் மூளையாகச் செயல்பட்டது அஜித் தோவல்தான் என்பதைச் சொல்லத் தேவையில்லை.  

அஜித் தோவலின் திறமை குறித்து வெளியாகி உள்ள தகவலெல்லாம் வெறும் 10 சதவிகித அளவுதான். உண்மையில் அவர் களத்தில் இறங்கினால், அவரது பணித்திறன் அசரடிப்பதாக இருக்கும் என்கின்றனர் `ரா' வட்டாரத்தில். இந்திய உளவுத் துறை கண்ட  அதிகாரிகளில்,  மிகத் திறமையானவர் தோவல். அதனாலேயே தோவலின் ஒவ்வொரு நடவடிக்கை குறித்தும் உலக நாடுகளால், குறிப்பாகப் பாகிஸ்தானால் உன்னிப்பாகக் கவனிக்கப்படும். 

சர்ச்சைகள்.... குற்றச்சாட்டுகள் 

இவையெல்லாம் அஜித் தோவலின் பாசிட்டிவ் பக்கங்கள் என்றால், பணி வரம்பை மீறி சிபிஐ உட்பட மத்திய அரசின் பல துறைகளில் மூக்கை நுழைக்கிறார் என்பது போன்ற குற்றச்சாட்டுகளும், அஜித் தோவலின் மகன் சவுரியா தோவல் நடத்தும் `இந்தியா பவுண்டேஷன்' நிறுவனம் மீதான சர்ச்சைகளும் நெகட்டிவ் பக்கங்களாக உள்ளன. 

சிபிஐ விவகாரத்தை எடுத்துக்கொண்டால், அதன் இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் மீதான ஊழல் புகார் வழக்கில், இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். இந்நிலையில், குஜாரத்தைச் சேர்ந்த ராகேஷ் அஸ்தானா மீதான வழக்கின் விசாரணையில் அஜித் தோவல், மத்திய அமைச்சர் ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி, மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் கே.வி.சவுத்ரி ஆகியோர் தலையிட்டனர் என்று அஸ்தானா மீதான வழக்கின் விசாரணை அதிகாரியும், சிபிஐ டி.ஜ.ஜி-யுமான எம்.கே. சின்ஹா உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்து, இதுதொடர்பான பிரமாணப்பத்திரத்தையும் தாக்கல் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

அஜித் தோவல்... இந்திய ஜேம்ஸ்பாண்டின் சாகசங்களும் சர்ச்சைகளும்!

அடுத்ததாக அஜித் தோவலின் மகன் சவுரியா தோவல் நடத்தும் `இந்தியா பவுண்டேஷன்' நிறுவனம் மீதான குற்றச்சாட்டுகள். நிறுவனமாகப் பதிவு செய்யப்படாமல், அறக்கட்டளையாகப் பதிவு செய்யப்பட்டுள்ள `இந்தியா பவுண்டேஷன்' நிறுவனத்தின் பணி என்பது, மத்திய அரசு சார்பில் நடத்தும் முக்கிய நிகழ்ச்சிகள், பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணத்தின் போது நடத்தப்படும் நிகழ்ச்சிகள், பாதுகாப்புத் துறை சார்பில் நிகழ்ச்சிகளை நடத்துதல், ஆட்சியாளர்கள், சர்வதேச தொழில் அதிபர்களைச் சந்தித்து கொள்கை முடிவுகளை எடுக்க உதவுதல், முதலீடுகளைக் கோர உதவுதல் போன்ற வேலைகளைச் செய்வதுதான்.  

இந்த நிகழ்ச்சிகளுக்குத் தேவையான நிதிகளை உள்நாட்டு, வெளிநாட்டு தனியார் நிறுவனங்கள், மத்திய அரசு ஆகியவற்றிடமிருந்து பெற்று வருகிறது. இதற்கான `ஸ்பான்சர்'களைப் பெற்றுக்கொடுப்பதும் மத்திய அமைச்சர்களாக இருக்கும் இயக்குநர்கள்தாம். மத்திய அமைச்சர்களாக இருப்பவர்கள் நாட்டின் நலன் கருதி மற்ற தனியார் அமைப்புகளில் பொறுப்புகளில் இருக்கக் கூடாது என்பது விதிமுறை. அதையும் மீறி இந்தியா பவுண்டேஷன் அமைப்பில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட சில அமைச்சர்கள் இதில் இயக்குநர்களாக இருப்பதாகக் குற்றச்சாட்டு உள்ளது. 

இந்நிலையில், `இந்தியா பவுண்டேஷன்’ அமைப்பு இதுவரை தனது வரவு செலவு அல்லது நிதி அறிக்கையை ஒருபோதும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. இதில் இயக்குநர்களாக இருக்கும் அமைச்சர்களும், அமைப்புக்கு வருவாய் எப்படி வருகிறது என்பதைக் கூறவும் மறுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அந்நிய நிதி ஒழுங்குமுறை சான்றிதழ் பெற்ற நிறுவனங்கள் ஆண்டுதோறும் தங்களின் வரவு செலவு கணக்கை அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்பது சட்டம். அப்படி இருக்கையில், கடந்த 4 ஆண்டுகளாக இந்த நிறுவனம் எந்தவிதமான வரவு செலவு அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை

இது குறித்து இந்தியா பவுண்டேஷன் அமைப்பின் இயக்குநர் சவுரியா தோவல் கூறுகையில், ``விளம்பரங்கள், பத்திரிகைகள் விற்பனை, கூட்டங்கள் நடத்துவது ஆகியவை மூலம் வருவாய் கிடைக்கிறது" என்று தெரிவித்துள்ளார். ஆனால், இந்த அமைப்புக்கு வருவாய் மூலாதாரம் என்ன, நிறுவனம் அமைந்திருக்கும் இடத்துக்கு வாடகை யார் தருவது, ஊழியர்களுக்கான ஊதியம் யார் அளிப்பது என்பது போன்ற எந்தக் கேள்விகளுக்கும் அவர் பதிலளிக்கவில்லை.

இதுதவிர, சவுரியா தோவலுக்கு சவுதி அரேபியா மற்றும் துபாய் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் குறித்தும் சர்ச்சை உள்ளது. ஒரு முதலீட்டு வங்கியாளராக தனது தொழிலைத் தொடங்கிய சவுரியா, தற்போது பல்வேறு நிதி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநராக உள்ளார். இவற்றில் சவுதி அரேபிய மன்னர் குடும்பத்தினர் சேர்மன் பதவியில் இருக்கின்றனர். சவுரியாவின் இத்தகைய வளர்ச்சியின் பின்னணியில் அஜித் தோவல் உள்ளார் என்றும், அவர் தனது அதிகாரத்தை மகனுக்காகத் தவறாகப் பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. 

அஜித் தோவல்... இந்திய ஜேம்ஸ்பாண்டின் சாகசங்களும் சர்ச்சைகளும்!

இது ஒருபக்கம் என்றால், லேட்டஸ்ட் சர்ச்சை ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைக் குழுவில் தனது பணி மற்றும் அதிகார வரம்பை மீறி அஜித் தோவல் இடம்பெற்றார் என்பதுதான். இதுபோன்ற பாதுகாப்பு தளவாடங்களை வாங்குவதற்கு அரசு தரப்பில் நடத்தப்படும் பேச்சுவார்த்தைக் குழுவில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் இடம்பெறச் சட்ட ரீதியாக அதிகாரமில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், அதையும் மீறி அஜித் தோவல் அதில் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இந்தப் பேச்சுவார்த்தைக் குழுவில் தோவல் இடம்பெற்றார் என்ற தகவலையும் கூட, ரஃபேல் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்திடம் தெரிவிக்காமல் மத்திய அரசு மறைத்துவிட்டது. இது தொடர்பாக மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், பேச்சுவார்த்தைக் குழுவில் யார் யார் இடம்பெற்றார்கள் என்ற பட்டியலில் தோவலின் பெயரைச் சேர்க்கவில்லை. இதுவும் இந்த விவகாரத்தில் கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இவை தவிர மேலும் பல குற்றச்சாட்டுகளும் அஜித் தோவலுக்கு எதிராக முன்வைக்கப்படுகின்றன என்றாலும், அவர் பிரதமர் மோடியின் செல்லப்பிள்ளையாக இருப்பதால், அத்தனை குற்றச்சாட்டுகளும் முனை மழுங்கிப்போகின்றன. 

ஆனாலும், நாளை ஆட்சி மாறினால் காட்சி மாறிவிடும்! அப்போது இன்னும் என்னென்ன விவகாரங்கள் வெடிக்கக் காத்திருக்கின்றனவோ...?!