Published:Updated:

`என்னைப் பார்த்து மற்ற எம்.பி-க்களுக்கு பொறாமை!' - விருதுநகர் ராதாகிருஷ்ணன் பேச்சு!

`என்னைப் பார்த்து மற்ற எம்.பி-க்களுக்கு  பொறாமை!' - விருதுநகர் ராதாகிருஷ்ணன் பேச்சு!
`என்னைப் பார்த்து மற்ற எம்.பி-க்களுக்கு பொறாமை!' - விருதுநகர் ராதாகிருஷ்ணன் பேச்சு!

`தன்னைக் கண்டு மற்ற எம்.பி.-க்கள் எல்லோரும் பொறாமைப்படுவதாக விருதுநகர்' எம்.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தியதற்காக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானத்துக்கு மத்திய அரசு சார்பில் மாற்றத்தின் சாதனையாளர் விருது டெல்லியில் வழங்கப்பட்டது. இதற்கான பாராட்டு விழா, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை வகித்தார்.

அவர் பேசும்போது, ``மாவட்ட ஆட்சியரை நான்தான் இங்கே அழைத்துவந்தேன். தற்போது அவர் விருது வாங்கியிருப்பது, நானே விளையாட்டில் பங்கேற்று விருது வாங்கியதுபோல உள்ளது. முதல்வரை சந்திக்க இவரை அழைத்துச்சென்றபோது, அங்கே எல்லோரும் இவரைப் பாராட்டினர். அவர் பாராட்டு பெறுவதைப் பார்த்தும், அவர் நடந்துவருவதைப் பார்த்தும் மகிழ்ச்சியடைந்தேன்; சிரித்தேன். இதை எனக்குக் கிடைத்த கௌரமாகவே உணருகிறேன். நாங்கள் இனி தலைமைச்செயலகத்துக்குச் செல்வோமா? இல்லையா தெரியாது. அதைவிட உயர்ந்த இடத்துக்குச் சென்றாலும் செல்வோம்.

ஆனால் இவ,ர் தலைமைச்செயலகத்தில் கோலோச்ச வேண்டும். ஆட்சியாளர்களுக்கு கணிந்த இதயமும், கொடுமைகளைக் கண்டு கொந்தளிக்கும் இதயமும் வேண்டும். பிரச்னை இல்லாத மனிதமும் இல்லை. பிரச்னை இல்லாத நாடும் இல்லை. ஆனால் அந்த பிரச்னைகளைச் சரியாகக் கையாளுவதில்தான் ஒரு தலைமைப் பண்பு உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் நடந்த பட்டாசுத் தொழிலாளர்களின் போராட்டத்தை சிறப்பான முறையில் கையாண்டார்'' எனத் தெரிவித்தார்.

விருதுநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ராதாகிருஷ்ணன் பேசும்போது, ``2017-18-ம் ஆண்டுக்கான நிதியைக்கூட இன்னும் பல தொகுதிகளில் செலவிடப்படவில்லை. ஆனால், விருதுநகர் தொகுதிக்கான நிதி முழுமையாகச் செலவுசெய்யப்பட்டுள்ளது. 2018-19-ம் ஆண்டுக்கான நிதியும் பெறப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் மையத்தில் அமர்ந்து சக எம்.பி.க்களோடு பேசிக்கொண்டிருப்பேன். அப்போது பிற எம்.பி-க்கள் எல்லாம், தங்கள் மாவட்ட ஆட்சியர்கள், தங்கள் போன் அழைப்பைக்கூட ஏற்பதில்லை எனக் கூறுவர். நான், இப்போது போன் போட்டாலும் எங்கள் மாவட்ட ஆட்சியர் போனை எடுத்துப் பேசுவார். மீட்டிங்கில் இருந்தாலும் போனை எடுத்துப் பேசுவார் எனக் கூறுவேன். இதனால் மற்ற எம்.பி.க்கள் எல்லாம் என் மீது பொறாமையாக உள்ளனர்'' எனத் தெரிவித்தார்.