Published:Updated:

கர்தார்பூர் குருத்வாரா... இந்தியா-பாக் நட்பில் பூக்கும் புதிய பாதை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கர்தார்பூர் குருத்வாரா... இந்தியா-பாக் நட்பில் பூக்கும் புதிய பாதை!
கர்தார்பூர் குருத்வாரா... இந்தியா-பாக் நட்பில் பூக்கும் புதிய பாதை!

- கே.ராஜூ

பிரீமியம் ஸ்டோரி

ந்திய - பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலிருக்கும் கர்தார்பூர் குருத்வாரா தர்பார் சாஹிபு புனிதத்தலத்துக்கு செல்ல வேண்டும் என்கிற சீக்கியர்களின் நீண்டகால கனவு விரைவில் மெய்ப்படவிருக்கிறது. வாஜ்பாய் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த முயற்சி சுமார் 19 ஆண்டுகளுக்குப் பிறகு மோடி ஆட்சியில் சாத்தியமாகியிருக்கிறது!

இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது மூடப்பட்ட இந்தப் பாதை, குருநானக்கின் 550-வது பிறந்த நாளான நவம்பர் 23, 2019 அன்று திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை, தங்களின் 23 ஆண்டுக் கனவு நிறைவேறுவதாகவும் தங்கள் குருவின் பிறந்த ஆண்டில் தங்களுக்குக் கிடைத்த விலை மதிப்பற்றப் பரிசாகவும் சீக்கியர்கள் பார்க்கின்றனர்.

கர்தார்பூர் குருத்வாரா... இந்தியா-பாக் நட்பில் பூக்கும் புதிய பாதை!

பாகிஸ்தானில் குருத்வாராக்கள் நிறைய இருக்கின்றனதான். ஆனால், இந்திய எல்லையிலிருந்து மூன்று கி.மீட்டர் தொலைவில் இருக்கும் கர்தார்பூர்  குருத்வாரா தர்பார் சாஹிபு தான், சீக்கியர்களின் மிக முக்கியமான புனிதத்தலமாகும். அவர்களின் முதல் குருவான குருநானக் தேவ், தனது கடைசிக் காலத்தில் சுமார் 18 ஆண்டுகளைத் தன் சீடர்களுடன் இங்குதான் கழித்ததாகக் கூறப்படுகிறது. 20-ம் நூற்றாண்டில் ராவி நதியில் ஏற்பட்ட வெள்ளத்தால், இந்தக் குருத்வாரா பெரும் சேதமடைந்தது. பின்னர் பட்டியாலா மன்னர் சர்தார் போபின்தர் சிங் நிதியுதவியால், 1929-ல் இது புனரமைக்கப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதியற்ற சூழல் காரணமாக, சீக்கியர்கள் இந்தக் குருத்வாராவுக்கு செல்வதில் நீண்டகாலமாக சிக்கல்கள் இருந்தன. பாகிஸ்தான் விசா இருந்தால், வருடத்தின் நான்கு திருவிழாக்களில் மட்டுமே கலந்துகொள்ளச் சிலருக்கு அனுமதி கிடைத்தது. இந்திய பஞ்சாப் பக்தர்கள், எல்லையில் உள்ள இரும்பு வலைகளுக்குப் பின்னால் நின்றுகொண்டுதான் தூரத்தில் தெரியும் குருத்வாராவை வழிபடவேண்டியிருந்தது.

கர்தார்பூர் குருத்வாரா... இந்தியா-பாக் நட்பில் பூக்கும் புதிய பாதை!

1999-ல், முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், பெனாசிர் பூட்டோ ஆகியோரால் கர்தார்பூர் பாதைக்கான முதல் முயற்சி எடுக்கப்பட்டது. சுமார் 19  ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது அது செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது. இந்தப் பாதையின் மூலம் சீக்கியர்கள், விசா இல்லாமல் எல்லையைக் கடந்து பாகிஸ்தானில் உள்ள இக்கோயிலுக்குச் செல்லமுடியும். பயண தூரமும் 200 கி.மீட்டரிலிருந்து ஆறு கி.மீட்டராகக் குறையும்.

அதேசமயம் இதன் பலன் முழுவதையும் பெற, பி.ஜே.பி முழு வேகத்தில் காய்களை நகர்த்துகிறது. காங்கிரஸும் விடுவதாக இல்லை. கடந்த செப்டம்பரில் நடந்த இம்ரான்கானின் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொண்டு திரும்பிய, பஞ்சாப் அமைச்சர் நவஜோத் சிங் சித்து, கர்தார்பூர் பாதையைத் திறக்க இம்ரான் அரசு விரும்புவதாகத் தெரிவித்தார். அதை மறுத்த மத்திய அரசு, இது மோடி அரசின் முழு முயற்சி என்று கூறியது. தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

இறுதியாகக் கடந்த நவம்பர் 26-ம் தேதி நடந்த அடிக்கல் நாட்டு விழாவிலும் அரசியல் காழ்ப்பு உணர்ச்சிகள் அப்பட்டமாக வெளிப்பட்டன.

கர்தார்பூர் குருத்வாரா... இந்தியா-பாக் நட்பில் பூக்கும் புதிய பாதை!

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங், பாகிஸ்தானின் எல்லைத் தாண்டிய தீவிரவாதத்தைக் கடுமையாகச் சாடினார். பாகிஸ்தானில் நடந்த அடிக்கல் நாட்டு விழாவுக்கான அழைப்பை நிராகரித்த அம்ரீந்தர் சிங், ‘பயங்கரவாதத்தைப் பாகிஸ்தான் முடிவுக்குக் கொண்டுவந்த பிறகு, நாங்கள் பாகிஸ்தான் வருகிறோம்’ என்றார். அதேசமயம், அந்த விழாவில் அமைச்சர் சித்து கலந்துகொள்வதை அவர் தடுக்கவில்லை. பாகிஸ்தானும் சர்ச்சைகளை உருவாக்குவதில் குறை வைக்கவில்லை. இந்த குருத்வாராவுக்கு சீக்கிய பக்தர்களை அனுமதிக்கும் இம்ரானின் அரசு, பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் அங்கு செல்வதற்குத் தடை விதித்திருக்கிறது. மேலும், இத்திட்டத்தை காலிஸ்தானுக்குக் கிடைத்த வெற்றியாக பாகிஸ்தானில் உள்ள காலிஸ்தான் ஆதரவு சக்திகள் பேசுகின்றன.

கர்தார்பூர் குருத்வாரா... இந்தியா-பாக் நட்பில் பூக்கும் புதிய பாதை!

ஆனாலும், இதுபோன்ற அரசியல் மனமாச்சர்யங்களைத் தாண்டி கர்தார்பூர் பாதைத் திறப்பு இரு நாடுகளின் நல்லுறவுக்கான அடையாளம். பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் நீலம் பள்ளத்தாக்கிலுள்ள சாரதா பீடத்துக்குச் செல்ல வேண்டும் என்பது காஷ்மீர் இந்துக்களின் நீண்டநாள் கோரிக்கை. அதுபோலவே ராஜஸ்தானின் அஜ்மீர் தர்காவுக்கு வர வேண்டும் என்பது பாகிஸ்தான் சூஃபிக்களின் கோரிக்கை. இவை எல்லாம் நிறைவேற கர்தார்பூர் பாதைத் திறப்பு முன்னுதாரணமாக அமையலாம்.

எல்லாவற்றையும்விட எல்லைத் தாண்டிய தீவிரவாதத்தை ஒழிக்க இதுபோன்ற எல்லைத் தாண்டிய நட்புறவுகளே வழிவகுக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு