Published:Updated:

அயோத்‘தீ’ அரசியல் - உணர்ச்சி அரசியலின் வெறுப்பு கோஷங்கள்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அயோத்‘தீ’ அரசியல் - உணர்ச்சி அரசியலின் வெறுப்பு கோஷங்கள்...
அயோத்‘தீ’ அரசியல் - உணர்ச்சி அரசியலின் வெறுப்பு கோஷங்கள்...

- சக்திவேல்

பிரீமியம் ஸ்டோரி

‘அயோத்தி அரசியல்’ மீண்டும் ஆரம்பித்து விட்டது! நவம்பர் 25-ம் தேதி, அயோத்தி மண்ணில் தடையை மீறித் திரண்ட இந்து அமைப்பினர், ‘தர்மசபா’ என்ற பெயரில் ‘மந்திர்மார்ச்’ நடத்தி முடித்திருக்கிறார்கள். இனிமேலும் நடத்தவிருக்கிறார்கள். அத்தனை பேரணிகளிலும் ஒலிக்க இருக்கும் கோஷம்... ‘ராம் மந்திர் ஜல்தி பனேஹே...’ (ராமர்கோயிலைச் சீக்கிரம் கட்டுங்கள்). இந்த விவகாரத்தை அச்சத்துடன் கவனிக்க ஆரம்பித்துள்ளனர், நாடு முழுவதிலிருக்கும் சிறுபான்மையினர்!

இப்போது களத்தில் இறங்கி இருப்பவர், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே. நவம்பர் 24-ம் தேதி, ‘சிவசைனிக்’ எனப்படும் சிவசேனா தொண்டர் படையுடன், அயோத்தியில் அடியெடுத்து வைத்தார் உத்தவ். அப்போதே அயோத்தி ‘அலெர்ட் மோடு’க்குப் போனது. அங்கே அவர் உதிர்த்த வார்த்தைகள் பி.ஜே.பி-யைப் பதம் பார்த்தவையாக இருந்தாலும், அரசியலமைப்பையும் அவமதித்தவை.

“ராமர் கோயில் விவகாரத்தில் தூங்கிக்கொண்டிருக்கும் பி.ஜே.பி அரசை எழுப்ப வந்திருக்கிறேன். ஏமாற்றியதுபோதும், எப்போது ராமர் கோயிலை எழுப்புவீர்கள்?” என்று அவர் முழங்கியதை, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், பி.ஜே.பி தலைவர் அமித் ஷாவுமே அதிர்ச்சியோடு பார்த்தார்கள்.

அயோத்‘தீ’ அரசியல் - உணர்ச்சி அரசியலின் வெறுப்பு கோஷங்கள்...

இதன்மூலம் மத அரசியல் செய்வதில் பி.ஜே.பி அளவுக்குக் கைதேர்ந்த கட்சி சிவசேனா என்பதை நிரூபித்திருக்கிறார், பால் தாக்கரேவின் புதல்வன். ‘மண்’ அரசியலுக்கு இணையாக, ‘மத’ அரசியலையும் பயன்படுத்தி வந்தவர், பால் தாக்கரே. ராமஜென்ம பூமி விவகாரம் பற்றியெரிந்த 1990-களில் அதில் முக்கியப் பாத்திரம் வகித்த ‘பெருமை’க்குரியவர். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, “அதைச் செய்தவர்களில் என் தொண்டர்களும் இருந்ததற்காகப் பெருமைகொள்கிறேன்” என்று கொக்கரித்தவர். இதோ... தந்தை வகுத்துக் கொடுத்தப் பாதையில் அடிபிசகாமல் பயணிக்கிறார், தனயன். இதுவரை ‘ஜெய் சிவாஜி’ என்றவர், இப்போது ‘ஜெய் ஸ்ரீராம்’ என்றும் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்.

சாதியையும் மதத்தையும் அஸ்திவாரமாக வைத்துக் கட்டப்படும் கட்சிகள், எப்போது வேண்டுமானாலும் உண்மை முகம் காட்டும், பழைய - பழைமைப் பாதைக்குத் திரும்பும்.

பி.ஜே.பி ஆட்சியின் சீரழிவுகளை விமர்சித்து, ‘சாம்னா’வில் தலையங்கங்களைத் தீட்டிவந்தவர், இப்போது பி.ஜே.பி பாதைக்கே திரும்புகிறார். ‘சத்ரபதி சிவாஜி’ கோஷத்துடன் ‘சர்வம் ராமமயம்’ என்றும் களமிறங்கி இருக்கிறார். ஆட்சி அதிகார ஆசையும், அரசியல் எதிர்காலம் குறித்த அச்சமும் அவரை இப்படிப் பேச வைத்திருக்கிறது.

அயோத்‘தீ’ அரசியல் - உணர்ச்சி அரசியலின் வெறுப்பு கோஷங்கள்...

இவற்றை எல்லாம் உற்றுநோக்கும் அரசியல் அறிஞர்கள், “இந்துத்துவா பாதையிலிருந்து பி.ஜே.பி விலகுவதாக, வட இந்திய மாநிலங்களில் ஓர் எண்ணம் உருவாகிவருகிறது. இதைப் பயன்படுத்தி, இந்துத்துவா சாம்ராட்டாக உத்தவ் எழுந்துவரத் துடிக்கிறார்” என்கிறார்கள். அயோத்திக்குச் சென்ற உத்தவ், அடுத்தடுத்து நாடு முழுக்க ‘மந்திர்மார்ச்’ பேரணிகளை நடத்தப்போவதாக அறிவித்திருப்பது, அதை உறுதிப்படுத்துகிறது. ஜனவரி மாதம் உத்தரப்பிரதேசத்தில் பிரம்மாண்ட கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்துவருகிறார். அதாவது, பி.ஜே.பி விட்ட இடத்தில் இருந்து சிவசேனா தொடங்குகிறது. அடுத்த அத்வானியாக ஆட்டத்துக்கு வருகிறார், உத்தவ்.

அயோத்‘தீ’ அரசியல் - உணர்ச்சி அரசியலின் வெறுப்பு கோஷங்கள்...
அயோத்‘தீ’ அரசியல் - உணர்ச்சி அரசியலின் வெறுப்பு கோஷங்கள்...

உத்தவ் போன்றவர்கள், ‘அடையாள அரசியல்’ செய்வதில் வல்லவர்கள். சொல்வதில் இருக்கும் சாத்தியத்தைவிட, அதில் இருக்கும் ஆபத்தான கவர்ச்சி வலையில் விழுபவர்களே உத்தவ்களின் அசுர பலம். “மத்தியிலும் உத்தரப்பிரதேசத்திலும் ஆட்சியில் இருக்கும் பி.ஜே.பி-யால் ராமர் கோயிலைக் கட்ட முடியாது. ஆனால், மராட்டிய மாநிலத்தில் 62 எம்.எல்.ஏ-க்களை வைத்திருக்கும் என்னால் முடியும்” என்று உத்தவ் கூறுவதற்குப் பின்னால், ‘உணர்ச்சி’ அரசியலை ஆதரிப்போர் இருக்கிறார்கள். அவர்களாலேயே, மதம் அரசியல் மயமாகிறது, அரசியல் மதம் மயமாகிறது.

உத்தவ் பேரணியின்போது, அயோத்தி மண்ணில் எழுப்பப்பட்ட முழக்கங்கள் அனைத்துமே, அரசியலமைப்பை அசைத்துப் பார்ப்பவை. ‘பெஹேலே மந்திர் பிர் சர்கார் (முதலில் ஆலயம்; அப்புறமே அரசு) என்று வெளிப்படையாகவே முழங்கினார்கள். “குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து ராம ஜென்ம பூமிவரை ஆளும் தருணம் இது. இப்போது ராமர் கோயிலைக் கட்டாமல் வேறு எப்போது கட்டுவீர்கள்?” என்று கேட்டார்கள். “ஆட்சி முடிவதற்கு முன்னால், ஆலயத்தை எழுப்ப அவசரச் சட்டம் கொண்டுவாருங்கள்” என்று ஆலோசனை கொடுத்தார்கள். அதாவது, சட்டத்தை வளையுங்கள் என்று சொல்கிறார்கள்.

அயோத்தி விவகாரத்தில், ஆர்.எஸ்.எஸ் மூத்தத் தலைவர் இந்திரேஷ் குமார் சொல்லியிருக்கும் கருத்துகள், அரசியலமைப்பின்மீது வீசப்பட்டிருக்கும் அம்புகள். “இந்துக்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வரவேண்டும். இல்லையென்றால், வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் பதவி விலக வேண்டும்” என்று நீதிமன்றத்தையே மிரட்டியிருக்கிறார் அவர். மேலும், “ராமர் கோயிலைக் கட்டுவதற்கான அவசரச் சட்டம் அரசிடம் தயாராக இருக்கிறது” என்று அரசு அறிவிக்க வேண்டியதை அவரே அறிவித்தார். “ராமர் கோயில் கட்டுவதால் நாடு எரிந்துவிடுமா என்ன?” என்றும் விஷ விதைகளைத் தூவினார்.

அயோத்‘தீ’ அரசியல் - உணர்ச்சி அரசியலின் வெறுப்பு கோஷங்கள்...

நீதிபதிகள் பதவி விலக வேண்டும் என்று ஆணையிட பிரதமருக்கே அதிகாரம் இல்லை எனும்போது, இந்திரேஷ்குமார் யார்? அவசரச் சட்டம் அரசிடம் தயாராக இருக்கிறதா, இல்லையா என்பது இவருக்கு எப்படித் தெரியும்? அரசின் எந்தப் பதவியில் இருக்கிறார் இந்திரேஷ் குமார்? இதுபோன்ற பேச்சுக்கள்தானே, கரசேவகர்களைக் கடப்பாரைகள் தூக்க வைத்தன. அதற்குப் பின்னர் அரங்கேறிய வகுப்புக் கலவரங்களுக்கு அதுதானே ஆரம்பப் புள்ளி. அரசியல் லாபத்துக்காக, மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே வருகிறார்கள். ஆட்கள் மாறி இருக்கிறார்களே ஒழிய, சொற்கள் மாறவில்லை, செயல்கள் மாறவில்லை.

அரசியலமைப்பின் பிரதானக் காவலர் பிரதமரும் அவ்வாறே பேசுகிறார். ‘வழக்கை நீதிமன்றம் தள்ளிவைக்க, காங்கிரஸ்தான் காரணம்’ என்று நீதிமன்ற நடவடிக்கைக்கு உள்நோக்கம் கற்பிக்கிறார். இவரே இப்படியிருக்கும் போது, ‘முதலில் ஆலயம்; அப்புறமே அரசு’ என்பவர்களையும், அவசரச் சட்டம் போடவேண்டும் என்பவர்களையும் சொல்லி என்ன பயன்? 

‘பாபர் மசூதி - ராமஜென்ம பூமி’ விவகாரம், இந்து மக்களை வாக்குவங்கியாகத் திரட்டு வதற்கான நச்சு எரிபொருள் என்பது, மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகிறது. இதன்மீதான இந்துத்துவ அரசியலின் ஆணிவேர் அயோத்தியில் இருந்தே, இந்தியா எங்கும் ஊடுருவிவருகிறது. “சபரிமலையை அடுத்த அயோத்தி ஆக்க விடமாட்டோம்” என்று பினராயி விஜயன் அலறும் அளவுக்கு, தென்னிந்தி யாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கிறது விவகாரம்.

அயோத்‘தீ’ அரசியல் - உணர்ச்சி அரசியலின் வெறுப்பு கோஷங்கள்...

‘அயோத்தி அரசியல்’ பி.ஜே.பி-யின் ஆயுதம். 1980-90-களில் பி.ஜே.பி செல்வாக்குடன் இல்லை. ‘கவ் பெல்ட்’ எனப்படும் மத்தியப் பிரதேசம், மராட்டியம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில், பத்தோடு பதினொன்றாக இருந்தார்கள். ஆனால், 1992 பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர் விஸ்வரூபம் எடுத்தார்கள். 25 ஆண்டுகளில் எந்தக் கட்சியின் ஆதரவும் இல்லாமல், அசுரபலத்துடன் ஆட்சி செலுத்தும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். இது அத்தனைக்குப் பின்னாலும் இருப்பது, அந்த 2.77 ஏக்கர் நிலம்.

அயோத்தி அரசியல், மீண்டும் காட்சிக்கு வருவதற்குப் பின்னால், அப்பட்டமான அரசியல் நோக்கங்கள் இருக்கின்றன. ‘Mandir before Mandate’ என்பது, அறிவிக்கப்பட்ட நேரடி செயல்திட்டம். ஆனால், ‘Mandir for Mandate’ என்பதே அறிவிக்கப்படாத மறைமுகச் செயல்திட்டம். ‘வளர்ச்சி’ அரசியல் காலை வாரிவிட்டதால், ‘உணர்ச்சி’ அரசியல் கைகொடுக்கும் என்று களம் அமைக்கிறார்கள். வெளிப்படும் வெறுப்புக் கோஷங்களும் அரசியலமைப்பை அவமதிக்கும் கருத்துகளும் ஆபத்தை உணர்த்துகின்றன!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு