Published:Updated:

இந்தி மட்டுமல்ல... கணக்கு, அறிவியலுக்கும் ஒரே பாடத்திட்டம்... பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்?!

இந்தி மட்டுமல்ல... கணக்கு, அறிவியலுக்கும் ஒரே பாடத்திட்டம்... பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்?!
இந்தி மட்டுமல்ல... கணக்கு, அறிவியலுக்கும் ஒரே பாடத்திட்டம்... பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்?!

விஜயதசமியையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ``புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையைத் தயாரிப்பதில் இன்னும் ஏன் தாமதம்?" எனக் கேட்டு சாடியிருந்தார்.

புதிய கல்விக் கொள்கைக்கான கமிட்டி அளித்துள்ள வரைவு அறிக்கையில், 8-ம் வகுப்பு வரை இந்தியைக் கட்டாயமாக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், புதிய கல்விக் கொள்கை கமிட்டியின் வரைவு அறிக்கை பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

தற்போதைய கல்வி அமைப்பில் சீர்திருத்தம் மேற்கொள்வதற்காக, கடந்த 2015-ம் ஆண்டு டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் கமிட்டி ஒன்றை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அமைத்தது. இந்தக் கமிட்டி தனது புதிய தேசிய வரைவு கல்விக் கொள்கையை சமர்ப்பித்தது. அதில் கூறப்பட்ட பல்வேறு பரிந்துரைகளுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து, மீண்டும் ஒரு கமிட்டி அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. 

அதன்படி, இஸ்ரோ முன்னாள் தலைவரான  கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை, கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அமைத்தது. இந்தக் குழுவில் கேரளாவின் கோட்டயம், எர்ணாகுளம் மாவட்டத்தில் 100 சதவிகித கல்வி அறிவு இலக்கை எட்ட முக்கிய பங்காற்றிய முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி கே.ஜே.அல்போன்சி, மத்தியப்பிரதேசத்தின் பாபா சாகேப் அம்பேத்கர் சமூக அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் ராம் ஷங்கர் குரீல் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்த நிலையில், மேற்கூறிய கமிட்டியின் வரைவு அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில அம்சங்கள் குறித்து ஆங்கில ஊடகங்களில் தகவல்கள் கசிந்தன. அதில் முக்கியமாக, 8-ம் வகுப்பு வரை இந்தியைக்  கட்டாயமாக்க வேண்டும் என்ற மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. 

இதையடுத்து, பல்வேறு மாநிலங்களில் இது தொடர்பாக சர்ச்சை எழுந்தது. ``வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தென்னிந்திய மக்களின் வாக்குகளை அள்ள பிரதமர் மோடியின் 'மாஸ்டர் ஸ்ட்ரோக்' (master Stroke) இது!" என்றெல்லாம் கிண்டலாக ட்விட்டரில் பதிவுகள் வெளியாகின. 

இதைத் தொடர்ந்து, ``தேசிய பாடத் திட்டத்தில் இந்தி பாடத்தைக் கட்டாயமாக்குவது குறித்து எந்த முன் ஏற்பாடும் மேற்கொள்ளப்படவில்லை, ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் தவறானது" என மறுப்புத் தெரிவித்து, இன்று காலை ட்விட்டரில் அவசரமாகப் பதிவு ஒன்றை வெளியிட்டார் பிரகாஷ் ஜவடேகர். ``2020-ம் முதல் 2040-ம் ஆண்டு வரையிலான தலைமுறையினருக்கு கல்வி கற்பிப்பதற்காக கொள்கை அடிப்படையில் வரைவு செய்யப்பட்ட ஆவணம் இது" என்றும் அவர் அதில் மேலும் குறிப்பிட்டிருந்தார். 

ஆனால், தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் பா.ஜனதா ஏற்கெனவே பலவீனமாக உள்ள நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவையற்ற சர்ச்சையில் சிக்கி மேலும் நிலைமையை மோசமாக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காகவே ஜவடேகர்  தரப்பில் அவசரமாக மறுப்பு வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை. 

இதனிடையே, புதிய கல்விக் கொள்கைக்கான கமிட்டியின் பரிந்துரையில் இந்தி கட்டாயம் என்பது இருக்கிறதா இல்லையா என்பது ஒருபுறம் இருந்தாலும்,  அறிவியல், கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான பரிந்துரைகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
``அறிவியல், கணிதம் ஆகிய இரு பாடங்களுக்கும் நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் (uniform syllabus) வகுக்கப்பட வேண்டும். சமூக அறிவியல் (Social Science) பாடத்திட்டம் அந்தந்த மாநில அல்லது பிராந்தியம் சார்ந்து வகுக்கப்பட வேண்டும். திறன் அடிப்படையிலான கல்வி முறை ஊக்குவிக்கப்பட வேண்டும். 

குறிப்பிட்ட பகுதிகளில் பேசு மொழியாக இருக்கும் போஜ்புரி, மைதிலி, அவாதி உள்ளிட்ட உள்ளூர் மொழிகளில் 5-ம் வகுப்பு வரை கற்றுக்கொடுப்பதற்கான பாடத்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்" என்பது உள்ளிட்ட பல பரிந்துரைகள் அதில் இடம்பெற்றுள்ளன. 

கட்டாய இந்திப் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்? 

இதனிடையே கட்டாய இந்திப் பின்னணி உள்ளிட்ட பாடத்திட்ட பரிந்துரையில் பா.ஜனதாவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் வலியுறுத்தல்களும், பின்னணியும் இருந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு, பல்வேறு அமர்வுகளாக நடத்திய நீண்ட ஆலோசனைகள் மற்றும் விவாதத்துக்குப் பின்னர், 2018 ஆகஸ்ட் 16-ம் தேதி தனது வரைவு அறிக்கையை இறுதி செய்தது. அதைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகத்திலிருந்து அளிக்கப்பட்ட சில ஆலோசனைகள் சேர்க்கப்பட்ட நிலையில், ஜவடேகரையும், 7 மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் அக்குழு சந்தித்துப் பேசியது. அதைத் தொடர்ந்து 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துடன் இணைந்த துணை அமைப்புகள் ஏற்பாட்டின் பேரில் டெல்லியில் நடைபெற்ற கல்வி தொடர்பான மாநாட்டின்போது, புதிய கல்விக் கொள்கை மற்றும் அதன் பரிந்துரைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

முன்னதாக அக்டோபர் மாதத்தின்போது, விஜயதசமியையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ``புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையைத் தயாரிப்பதில் இன்னும் ஏன் தாமதம்?" எனக் கேட்டு சாடியிருந்தார். 

இந்த நிலையில் கஸ்தூரிரங்கன் தலைமையிலான கமிட்டியின் பதவிக்காலம் 2018 டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், அதற்கு சில தினங்களுக்கு முன்னதாகவே அக்கமிட்டி தனது வரைவு அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திடம் சமர்ப்பித்திருந்தது. இந்த அறிக்கையை முறைப்படி கையளிப்பதற்காக, அந்தத் துறை அமைச்சரான பிரகாஷ் ஜவடேகரிடம் நேரம் ஒதுக்குமாறு கேட்டுள்ளதாகவும், அவர் நேரம் ஒதுக்கிய பின்னர் அவரை நேரில் சந்தித்து வரைவு அறிக்கையை வழங்க உள்ளதாகவும் அக்கமிட்டியில் இடம்பெற்றிருந்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருந்தார். 

முன்னதாக கட்டாய இந்தி பரிந்துரை எனத் தகவல் வெளியானதும், தெலுங்கு தேசக் கட்சியைச் சேர்ந்த லங்கா தினகர், ``எந்த ஒன்றையும் திணிப்பது சமூகத்துக்கு நல்லதல்ல. பிராந்திய மொழிகளுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் பாடத்தின் சாரம்சத்தை மாணவர்களால் புரிந்துகொள்ள இயலாமல் போய்விடும்" எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். 

அதேபோன்று மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சி, ``பா.ஜனதா எப்போதுமே இந்தி மொழி, இந்து மற்றும் இந்துஸ்தான் என முன்னெடுப்பு பிரசாரங்களையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது. ஆனால், இதை நாங்கள் எதிர்க்கிறோம். இந்தியைக் கட்டாய பாடமாக்கக்கூடாது. அனைத்து மாநில மொழிகளும் சமமாக பாவிக்கப்பட வேண்டும். இந்திக்கு மட்டும் எந்தவித சிறப்பு அந்தஸ்தும் கொடுக்கக்கூடாது" எனக் கூறியுள்ளது. பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனாவும் இதே கருத்தை வெளியிட்டுள்ளது. 

அடுத்த கட்டுரைக்கு