Published:Updated:

பார்க்கிங் கட்டணம்...! சட்டத்தைக் கடைப்பிடிக்கிறதா திரையரங்குகள்...-!?

பார்க்கிங் கட்டணம்...! சட்டத்தைக் கடைப்பிடிக்கிறதா திரையரங்குகள்...-!?
பார்க்கிங் கட்டணம்...! சட்டத்தைக் கடைப்பிடிக்கிறதா திரையரங்குகள்...-!?

பொதுமக்கள் இந்தத் தவறுகளை சாதாரண ஒன்றாகக் கருதிக் கடந்து விடுவதால்தான் இதுபோன்ற குற்றங்கள் அதிகரிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக, இதுகுறித்து மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.

சினிமா...தமிழக மக்களின் வாழ்வியலோடு கலந்த ஒன்றாகிவிட்டது. ஆனால், குறிப்பிட்ட ஒரு நடிகர் நடித்துள்ள படம் திரையரங்குகளில் வெளியாகும் அதேநாளில் இணையதளங்களிலும் வெளியாகி விடுவதால் தமிழ்த் திரையுலகம் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றது. இந்நிலையில் பொதுமக்கள் திரையரங்குகளுக்குச் சென்று படத்தைப் பார்ப்பதே அபூர்வமானதும் பெரும் சவாலானதாகவும் உள்ளது. தீபாவளி, பொங்கல் மற்றும் குறிப்பிட்ட திருவிழா நாள்களில் திரையரங்குகளில் கட்டுப்பாடின்றி வசூலிக்கப்படும் டிக்கெட் கட்டணமும், வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணமும் திரையரங்குகளுக்கு வந்து படம் பார்க்கும் மக்களுக்குப் பெரும் தலைவலியாக இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள்.

பார்க்கிங் கட்டணம்...! சட்டத்தைக் கடைப்பிடிக்கிறதா திரையரங்குகள்...-!?

சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் உள்ள சில திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணமாக ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை வசூலிக்கும் நடைமுறை உள்ளது. இது திரைப்படம் பார்க்க திரையரங்குகளுக்கு வருவோரை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. அதேபோல் திரையரங்குகளுக்குள் விற்கப்படும் பாப்கார்ன், ஐஸ்கிரீம், கட்லெட் போன்ற உணவுப் பொருள்களும் வெளியில் விற்கப்படுவதைக் காட்டிலும் இரண்டு மூன்று மடங்கு அதிகளவு விலைக்கு விற்கப்படுவதும் ரசிகர்களை கூடுதல் சுமைக்கு ஆளாக்குகின்றன. இதுபோன்ற பிரச்னைகளை பொதுமக்கள் முன்வைத்த நிலையில் அவற்றுக்குத் தீர்வுகாண்பது தொடர்பாகத் தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், கடந்த 2017-ம் ஆண்டு தமிழக முதல்வரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அதன் பின்னர், திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணத்திற்கான புதிய அரசாணையைத் தமிழக அரசு, 2017-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி வெளியிட்டது. அதன் அடிப்படையில் மாநகராட்சிகள், பெருநகராட்சிகளுக்கு நான்கு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாயும், இரு சக்கர வாகனங்களுக்கு 10 ரூபாயும், நகராட்சிகளில் நான்கு சக்கர வாகனங்களுக்கு 15 ரூபாயும், இரு சக்கர வாகனங்களுக்கு 7 ரூபாயும் வசூலிக்க வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள திரையரங்குகளில் நான்கு சக்கர வாகனத்திற்கு 5 ரூபாயும், இரு சக்கர வாகனங்களுக்கு 3 ரூபாயும் என வரையறுக்கப்பட்டு அதற்கான சட்டமும் நடைமுறைக்கு வந்தது. என்றாலும், அரசின் இந்த விதிமுறைகளை பல திரையரங்குகள் சரிவரப் பின்பற்றுவதில்லை என்று பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்த வண்ணம் உள்ளனர்.

பார்க்கிங் கட்டணம்...! சட்டத்தைக் கடைப்பிடிக்கிறதா திரையரங்குகள்...-!?

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.நடராஜன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ``பார்க்கிங் கட்டணம் தொடர்பாக தமிழக அரசு, அரசாணை வெளியிட்ட பின்னரும் தியேட்டர்  நிர்வாகங்கள் அதைக் கடைப்பிடிக்காமல் அதிகளவுத் தொகையை திரையரங்குகளுக்கு வருவோரிடம் வசூலித்து வருகின்றனர். அதேபோல் திரையரங்குகளில் விற்கப்படும் உணவுப் பொருள்களுக்கும் அதிகத் தொகையை லாபமாக வைத்து விற்பனை செய்து வருகின்றனர். திரையரங்குகளுக்குள் நுழைவோரை, தனியார் நிறுவனப் பாதுகாவலர்கள் மூலம் பலத்த சோதனைக்குப் பின்னரே, அனுமதிக்கும் நடைமுறை இருந்து வருகின்றது. அதற்குப் பதில் மெட்டல் டிடெக்டர்களைப் பயன்படுத்த வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை குறிப்பிட்டிருந்தார். இதை விசாரித்த நீதிபதிகள், ``திரையரங்குகள் அரசு நிர்ணயித்த கட்டண முறையை ஒழுங்காக நடைமுறைப்படுத்துகின்றனவா?" எனத் தமிழக அரசு பதிலளிக்குமாறு தெரிவித்து வழக்கை நான்கு வார காலத்துக்கு ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில் சென்னையின் பிரபலமான சில தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணம் குறித்து விசாரித்தபோது, `மாநகராட்சிப் பகுதிகளுக்கு இரு சக்கர வாகனங்களுக்கு 10 ரூபாய்தான் பார்க்கிங் கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும்' எனச் சட்டப்படி உள்ள நிலையில், சென்னை முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் இரு சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பலருக்கும் கட்டண நிர்ணயம் குறித்து தகவல் தெரியாததால், தியேட்டர் நிர்வாகம் கேட்கும் தொகையைக் கொடுத்து விட்டுச் செல்கின்றனர். சென்னையில் உள்ள வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகளில் இந்தச் சட்டதிட்டங்கள் சிறிதளவுகூட நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. மணிக்கணக்கில் கட்டணம் வசூலிக்கும் முறைதான் இப்போதும் பின்பற்றப்பட்டு வருகின்றது. இந்த நடைமுறையால் ஒரு படத்திற்குக் கிட்டத்தட்ட 150 ரூபாய்க்கு மேல் பார்க்கிங் கட்டணமாகச் செலுத்த வேண்டியுள்ளது.

பார்க்கிங் கட்டணம்...! சட்டத்தைக் கடைப்பிடிக்கிறதா திரையரங்குகள்...-!?

இதுகுறித்து கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த நிர்மலா தேசிகன் பேசுகையில்,``சென்னையில் உள்ள திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணத்திற்கும், தியேட்டர் நிர்வாகத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என அறிவிப்புப் பலகைகளை வைத்து, பார்க்கிங் சேவையைத் தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் கொடுத்து அதன் மூலம் கட்டண வசூலை நிகழ்த்தி வருகின்றன. பார்க்கிங் செய்யப்பட்ட வாகனங்கள் காணாமல் போனால், நிர்வாகம் வழங்கிய ரசீதை ஆதாரமாக வைத்துதான் நாம் முறையிட முடியும். ஆனால், பல திரையரங்குகளில் அதிகமான தொகையை வசூல் செய்துகொண்டு, குறைவான தொகைக்கு ரசீது வழங்கப்படுகிறது. சட்டப்படி அவை செல்லுபடியாகாத ரசீதுகள். பொதுமக்கள் இந்தத் தவறுகளை சாதாரண ஒன்றாகக் கருதிக் கடந்து விடுவதால்தான் இதுபோன்ற குற்றங்கள் அதிகரிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக, இதுகுறித்து மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்” என்றார்.

பார்க்கிங் கட்டணம் தொடர்பான அரசின் விதிமுறைகளை முதலில் மக்கள் தெரிந்துகொள்தல் அவசியம். அப்போதுதான் தவறுகளை எதிர்த்து கேள்வி எழுப்ப முடியும்!

அடுத்த கட்டுரைக்கு