Published:Updated:

`ஓ.பி.எஸ், 10 எம்.எல்.ஏ-க்களின் நிலை என்னாகும்?'- ஸ்டாலின் போடும் மார்ச் மாத கணக்கு

`ஓ.பி.எஸ், 10 எம்.எல்.ஏ-க்களின் நிலை என்னாகும்?'- ஸ்டாலின் போடும் மார்ச் மாத கணக்கு
`ஓ.பி.எஸ், 10 எம்.எல்.ஏ-க்களின் நிலை என்னாகும்?'- ஸ்டாலின் போடும் மார்ச் மாத கணக்கு

ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்களின் நிலை என்ன ஆகப் போகிறது என்று தெரியவில்லை என்று கூறிய மு.க.ஸ்டாலின், உச்ச நீதிமன்ற தீர்ப்பு 11 எம்.எல்.ஏ-க்களின் பதவிகளை பறிப்பதாகத்தான் போகிறது என்று ஆரூடம் கூறினார்.

விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயனின் இல்லத் திருமண விழா நேற்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ``தேர்தல் நேரங்களில் அரசியல் கூட்டணியை ஏற்படுத்துகிறோம். அது முறையாக ஏற்பட்டால் தவறு இல்லை. ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை, கட்டாயப்படுத்தி உருவாக இருக்கும் கூட்டணியை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். எப்படி என்றால், எங்களோடு நீங்கள் கூட்டணி வைக்கவில்லை என்றால் குட்கா விவகாரப் பிரச்னையைக் கிளப்புவோம் என்றும் 85 கோடி ரூபாய் வருமான வரித்துறை ரெய்டு நடத்திய கோப்புகள் தங்களிடம் உள்ளது என்றும் சொல்லி மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும், ஏற்கெனவே காண்ட்ராக்டுல பல ஆயிரம் கோடி ஊழல் செய்த விவகாரம் சி.பி.ஐ வரை சென்றிருக்கிறது. கொடநாடு விவகாரம், கோட்டை வரை சென்று நடத்திய ரெய்டு போன்றவற்றை பாதுகாக்க வேண்டும் என்றால் எங்களுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று அவர்கள் மிரட்டப்படுகிறார்கள்.  ஊழல் செய்து சிறை சென்ற முதல்வரை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், தற்போது தமிழக முதல்வர் கொலை செய்த குற்றத்துக்காக சிறை செல்லும் நிலையில் இருக்கிறார். இவை அனைத்தையும் வைத்துத்தான் அரசியல் ரீதியாக மிரட்டப்பட்டு அந்தக் கூட்டணி அமைய இருக்கிறது. இரண்டு நாள்களுக்கு முன்பு அனைத்துப் பத்திரிகைகளிலும் தமிழக அரசு சார்பில் முதல் பக்கத்தில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பணம் மக்களின் வரிப்பணம் என்பதை மறந்துவிடக்கூடாது. ஜெயலலிதாவின் காலில் விழுந்து முதல்வராக வந்தவர் ஓ.பி.எஸ். ஆனால் தற்போது இருக்கின்ற எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்தவர் இல்லை. மண்புழு போல தரையில் தவழ்ந்து முதல்வரானவர். 

18 எம்.எல்.ஏ-க்களின் பதவியை இவர்கள் ஏன் பறித்தார்கள் தெரியுமா. அப்படி செய்தால்தான் இவர்களின் ஆட்சி நீடிக்கும். தற்போது ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அந்த 11 எம்.எல்.ஏ-க்களின் நிலை என்ன ஆகப் போகிறது என்று தெரியவில்லை. வரும் மார்ச் முதல் வாரத்தில் இந்த 11 எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கிறது. அந்தத் தீர்ப்பு 11 எம்.எல்.ஏ-க்களின் பதவிகளைப் பறிப்பதாகத்தான் இருக்கப்போகிறது. அப்படி வந்தால் இந்த ஆட்சி நீடிக்க நிச்சயமாக வாய்ப்பே இருக்காது. ஏப்ரல் மாதத்துக்குள் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து மத்தியில் புதிய ஆட்சி அமைய இருக்கிறது. அது தி.மு.க சுட்டிக் காட்டுகிற பிரதமர் மற்றும் ஆட்சியாக இருக்கக் கூடும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வந்து நமக்கு விமோசனம் கிடைத்துவிடாதா என்றுதான் ஒட்டுமொத்த தமிழக மக்களும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.